9
இது ஒரு தருணம். சற்றே மாறுபட்ட, எதிர்பாராத, மகிழ்ச்சியும் கலவரமும் ஒருங்கே உருவாகும் தருணம். இதையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். பைபாஸ் முத்துமாரியம்மனோ குருட்டு அதிர்ஷ்டமோ அவசியம் கைகொடுக்கும். பத்மநாபன் திடசித்தம் கொண்டான். ஸ்லேவ் வீரபத்திரன் அச்சமூட்டக்கூடிய ஆகிருதியில் இருந்தால்தான் என்ன? அவன் ஒரு ஸ்லேவ்தான். கண்டிப்பாக அவனால் வளர்மதியைக் காதலிக்க முடியாது. வத்தக்காச்சி போலிருக்கும் பத்மநாபனால் முடியும். அப்பாவுக்கும் ஹெட் மாஸ்டருக்கும் அகில உலகுக்குமே விஷயம் தெரிந்தாலும் ஆமாம், காதலிக்கிறேன் என்று அடித்துச் சொல்ல அவனால் முடியும். சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் அவர் மகன் அருணாசல முதலியாருக்கும் பேத்தி வளர்மதிக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் இன்னபிற அத்தனை உருப்படிகளுக்கும் கைகட்டிச் சேவகம் செய்யும் வீரபத்திரனால் சாத்தியமில்லை.
இந்தத் துணிச்சல் மிகுந்த எண்ணத்துக்கு வலு சேர்ப்பதுபோல், உப்புகொடோனுக்கு அருகே தான் வரச்சொன்ன இடத்துக்கு வீரபத்திரனுடன் வந்து சேர்ந்ததுமே மன்னிப்புக் கேட்கும் குரலில் வளர்மதியும் ஒரு விஷயத்தைச் சொன்னாள்.
‘தனியாத்தான் கெளம்பினேன். பாப்பா தனியா போவுதேன்னு தாத்தாதான் இவன அனுப்பிவெச்சாரு. வீரபத்திரா, நீ போய் நாலு புளியாங்கா எடுத்தாயேன். சாப்ட்டுக்கினே பேசலாம்’ என்று சொன்னாள்.
வீரபத்திரன் பத்மநாபனை முறைத்தான். அல்லது வெறுமனே அவன் பார்ப்பதே தனக்கு முறைப்பதுபோல் தெரிகிறதா?
பத்மநாபனுக்குக் குழப்பமாக இருந்தது. இருப்பினும் அவனை வெறுப்பேற்றுவது என்று முடிவு செய்து, ‘புளியாங்காயெல்லாம் வேணாம் வளரு. எனக்கு ஒரு பெரிய டவுட்டு. அத்த மொதல்ல க்ளியர் பண்ணு. பின்னத்தின் சுருங்கிய வடிவம்னா என்னா? மகாலிங்க வாத்தியாரு சொன்னப்ப சரியாவே விளங்கல. பன்னீராண்ட கேட்டேன். போடான்னுட்டான். ·பர்ஸ்ட் ரேங்க் வாங்குற திமிரு… இத்த புரிஞ்சிக்காம இன்னிக்கி எப்பிடி ஓம்மொர்க்கு பண்றதுன்னே தெரியல.’
வளர்மதிக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள். அழகான சந்தர்ப்பங்களை இன்னும் அழகாக்கலாமே? எனவே ஆரம்பித்தாள். ஓட்டைப் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் தக்கென்று ஏறி அமர்ந்து பத்மநாபன் கையிலிருந்த நோட்புக்கை வாங்கிப் பிரித்தாள். அவன் பாக்கெட்டிலிருந்து அவளே பேனாவை எடுத்து, ‘இங்க பாரு..’ என்று ஆரம்பித்தாள்.
‘சிநேகிதக்காரப் பொண்ணுங்கல்லாம் வராங்கன்ன? இங்க இவன் மட்டும்தான் இருக்கான்?’ என்று முதல் சந்தேகத்தை வீரபத்திரன் கேட்டான்.
பத்மநாபனுக்கு அதுவும் மகிழ்ச்சிக்குரிய தகவலாகவே இருந்தது. தன் பொருட்டு வீட்டில் ஒரு பொய் சொல்லியிருக்கிறாள். சந்தேகமே இல்லை. காதல்தான். ஆண்டவா, இந்தக் கடங்காரனை ஒழித்துக்கட்டேன்? ஒரே ஒரு நிமிஷம் நான் வளர்மதியிடம் தனியே பேசிவிட ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடேன். பெரியவனாகி, சம்பாதித்து ஒரு கோயிலே கட்டிவிடுகிறேனே.
வளர்மதி அவன் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. மிகத் தீவிரமாக நோட்புக்கில் எதையோ எழுதி, ‘இங்க பாரு. எந்த பின்னத்தையும் அதோட சுருங்கின வடிவத்தால பாக்கமுடியும். இப்ப, p, qன்னு ரெண்டு நம்பர் இருக்குன்னு வெச்சிக்கோ. இந்த ரெண்டையும் rனு ஒரு நம்பரால வகுக்க முடியும்னா, வகுத்து வர்ற நம்பர்ஸ்தான் அதோட சுருங்கின வடிவம்.’
‘ஓஹோ’ என்றான் பத்மநாபன்.
‘நாலு பை ஆறுன்னு ஒரு பின்னம் இருக்குன்னா அதோட சுருங்கின வடிவம் எது?’
பத்மநாபன் யோசித்தான். காதலின் சுருங்கின வடிவம் கனவு காண்பது. கனவின் சுருங்கின வடிவம் கவிதை எழுதுவது. கவிதையின் சுருங்கின வடிவம் அதை நினைத்துப் பார்ப்பது. நினைவின் சுருங்கின வடிவம் வளர்மதி. வளர்மதியின் சுருங்கின வடிவம் அவளது புன்னகை. புன்னகையின் சுருங்கின வடிவம்…
பத்மநாபன் ரகசியமாக வீரபத்திரனைப் பார்த்தான். கைப்பிடிச் சுவரில் அவனுக்கு உட்கார இடமுமில்லை, அனுமதியும் இல்லை. பொதுவாக ஸ்லேவ்கள் எஜமானியம்மாக்களுக்கு சமமாக உட்காரமாட்டார்கள். மவனே இரு. எனக்கும் வளருக்கும் திருமணம் ஆகட்டும். உன்னைத் திருமணச் சீராகக் கேட்டு வாங்கி வந்து தினசரி ஆறு கேன் தண்ணீர் இழுக்கவைக்கிறேன்.
‘என்னடா யோசிக்கற? நாலு, ஆறு ரெண்டையும் ரெண்டால வகுக்க முடியும் இல்ல?’
‘ஆமா?’
‘அப்ப சொல்லு.’
‘ரெண்டு பை மூணு.’
‘கரெக்ட். அதான் நாலு பை ஆறோட சுருங்கின வடிவம்.’
வீரபத்திரன் கொட்டாவி விட்டான். ‘இந்தா வரேன்..’ என்று இரண்டடி நகர, ‘தம்மடிக்க போறியா வீரபத்திரா?’ என்று பத்மநாபன் கேட்டான்.
துடித்துப் போய் திரும்பிய வீரபத்திரன், ‘டேய், கொன்னுடுவேன் உன்னிய. அதெல்லாம் இல்ல வளரு. நீ தாத்தாவாண்ட ஒண்ணூம் சொல்லாத. நான் சொம்மா இப்பிடி..’ என்று கொடோன் சந்தைக் காட்டினான். வளர்மதி சிரித்தாள்.
முறைத்தபடி வீரபத்திரன் நகர்ந்ததும் பத்மநாபன், ‘ஐ லவ் யூ வளரு. என்னால இத சொல்லாம இருக்கமுடியல. செத்துருவேன் வளரு’ என்றான்.
அவள் ஒன்றும் பேசவில்லை. அதிர்ச்சியடைந்த மாதிரியும் தெரியவில்லை. இது பத்மநாபனுக்கு வியப்பாக இருந்தது. இப்படியுமா ஒரு பெண் இருப்பாள்?
‘தபாருடா. நீ லவ் பண்றேன்னு எனக்குத் தெரியும். ஆனா நான் இப்ப சொல்லமுடியாது. என்னால முடிஞ்சது உன்ன மாட்டிவிடாம இருக்கேன். உன்னமாதிரியே இன்னும் ரெண்டு பேரு லவ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க. எனக்கு எவன் மேலயும் இஷ்டம் இல்ல. நான் மொதல்ல நல்லா படிக்கணும்’ என்றாள்.
பத்மநாபனுக்கு சுறுசுறுவென்று ஆகிவிட்டது. இன்னும் இரண்டு பேர்! கடவுளே. யார் அந்தக் களவாணிப் பயல்கள்?
‘அதெல்லாம் ஒனக்கு வேணாம். இப்ப நமக்கு வேல படிக்கறது. அத ஒழுங்கா செய்யி. லவ்வெல்லாம் சரிப்படாது குடுமி’
அவனுக்கு அழுகை வந்தது. ‘என்னால முடியல வளரு. எங்கப்பா எப்பிடி அடிச்சாரு தெரியுமா? இன்னிக்கி ஹெட்மாஸ்டர் கூப்ட்டு அப்பா எதிர்ல அசிங்கம்மா போயிடுச்சி.’
‘ஐயோ எப்படா?’
‘காலைல. உன்னாண்ட சொல்லவேணாம்னுதான் நெனச்சேன். உஸ்கோலுக்கே தெரியும். என்னால மறைச்சிவெக்கமுடியல வளரு. நீ இல்லாம என்னால வாழக்கூட முடியாது. நீ மட்டும் சரின்னு சொல்லிட்டன்னா, அப்பறம் நீ பேசக்கூட வேணாம். சரின்னு சொல்லிட்ட ஒரு வார்த்த போதும். அத்தவெச்சிக்கிட்டே நான் டிகிரி வரைக்கும் ஒழுங்கா முடிச்சிருவேன். வேல தேடிக்கிட்டு நேரா உன் வீட்டாண்ட வந்து நிப்பேன். அதுவரைக்கும் உம்மூஞ்சியக்கூட ஏறெடுத்துப் பாக்கமாட்டேன்.’
அவள் அவனை உற்றுப்பார்த்தாள்.
‘நாளைக்கு ஒனக்கே இதெல்லாம் சில்றத்தனமா தெரியும் குடுமி. வேணாம், சொன்னாக்கேளு’ என்றாள்.
‘முடியல வளரு.’
‘தபாரு நான் நல்லவிதமா சொல்றேன். எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா ப்ராப்ளமாயிரும். எங்க தாத்தா ஒன்ன சும்மாவே விடமாட்டாரு. ஸ்கூல்லேருந்து தூக்கிருவாங்க அப்பறம்? தேவையா இதெல்லாம்?’
‘நான் என்ன உன் தாத்தாவையா லவ் பண்றேன். ஒன்னத்தான? நீ சொல்லு வளரு. என்னிய புடிக்கலியா?’
ஒரு கணம் யோசித்தாள். பிறகு, ‘அப்பிடி சொல்லமுடியாது. ஆனா லவ் இல்ல.’
அவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. லவ் பண்ணவைத்துவிடலாம் என்று நினைத்தான். ‘ரொம்ப தேங்ஸ் வளரு’ என்று பொத்தென்று குதித்தான்.
‘டேய், எங்கடா போற?’
‘வீட்டுக்குத்தான். இன்னிக்கி பட்ட அவமானத்துக்கு ஒரு மருந்து வோணுமுன்னுதான் உன்னிய வரசொன்னேன். நீ சொன்ன ஒருவார்த்த போதும் வளரு. என்னிய புடிக்காம இல்லன்னு நீ சொன்னத புடிச்சிருக்குன்னு சொன்னதாவே எடுத்துக்கறேன். நான் போறேன்..’
‘டேய், டேய்..’ அவள் அழைக்க அழைக்க நில்லாமல் விறுவிறுவென்று போனான்.
பள்ளி மைதானத்தைக் கடக்கும்போது நண்பர்கள் சிலர் ஒரு பெரிய பாறையைத் தூக்க முயற்சி செய்துகொண்டிருப்பதைக் கண்டான். காலம் காலமாக மாணவர்கள் முயற்சி செய்யும் விஷயம் அது. மைதானத்தில் அந்தப் பாறையை யார் கொண்டுவந்து போட்டது என்று தெரியவில்லை. தூக்கமுடியாத பாறை. கனமான, பெரிய ஆகிருதி கொண்ட, வீரபத்திரனைப் போன்ற பாறை.
‘நகருங்கடா’ என்று பத்மநாபன் சொன்னான்.
‘இவுரு தூக்கப்போறாராம்டா.’
பத்மநாபன் நிமிர்ந்து பார்த்தான். ‘ஆமா. தூக்கட்டா? என்ன பெட்டு?’
‘தூக்கு பாப்பம்?’
முடியும் என்று உறுதியாகத் தோன்றியது. இன்று தொடங்கி முழுப்பரீட்சை வரை சிந்தனையைச் சிதறவிடாமல் ஒழுங்காகப் படித்து க்ளாஸ் ·பர்ஸ்ட் வாங்கிவிடுவது என்று உறுதி கொண்டான். வளர்மதி பிரமித்து நின்று, தன் காதலை அங்கீகரிக்க இனி அதுவே தலைசிறந்த வழி. என்ன புடிக்கலியா? அப்பிடி சொல்ல முடியாது. போதும். இது பெரிய விஷயம். பிடிச்சிருக்குடா என்று வந்து சொல்லவைக்க ·பர்ஸ்ட் ரேங்க்தான் ஒரே பாதை. தன்னால் முடியுமா? கண்டிப்பாக முடியும். தன்னால் மட்டுமே முடியும்.
ஹ¤ப் என்று பாறையைப் பிடித்தான். தன் முழு பலத்தையும் பிரயோகித்துத் தூக்கினான்.
‘டேஏஏஏஏய்!!’ நண்பர்கள் வியப்பில் வாய் பிளக்க, இதைப் பார்க்க வளர்மதி அருகே இல்லையே என்று ஏங்கினான்.
அது பிரச்னையில்லை. சில தொண்டர்கள் எப்போதும் இருக்கிறார்கள். தகவல் ஒலிபரப்புத் தொண்டர்கள்.
‘வளரு, தெரியுமா? பத்மநாபன் மாப்ளகல்ல தூக்கிட்டான்!’
மணப்பெண் வெட்கப்படுவாள். புன்னகை செய்வாள். குடுமி, ஐ லவ் யூடா என்பாள். போதும். நினைத்தால் இனிக்கிறது. மிகவும் இனிக்கிறது. பின்னத்தின் சுருங்கின வடிவம்கூட எளிமையானதாகவே இப்போது தெரிகிறது.