"

1

வீதியை அடைத்துக்கொண்டு மயில் நின்றுகொண்டிருந்தது. மேலுக்கு ஜிகினா ஒட்டி, சுற்றிலும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்ட அட்டை மயில். அதன் முதுகில் அம்பாரி மாதிரி பீடம் கட்டி, ஒரு சிம்மாசனத்தை ஏற்றியிருந்தார்கள். நாலாம் நாள், பாலவாக்கம் செல்லக்கிளி ஆச்சாரியின் கொட்டகையில் நடந்த வள்ளி திருமணம் நாடக க்ளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே சிம்மாசனம். ஸ்தாபிதம் 1929 என்று ஸ்கிரீன் முதல் செருப்பு வரை எழுதிவைத்துவிடுவது ஆச்சாரியின் வழக்கம். அதெல்லாம் கிடையாது, 1930தான் என்று யாராவது சண்டைக்கு வந்துவிடுவார்களோ என்கிற பயம் காரணமாயிருக்கலாம். சிம்மாசனத்தை விட்டுவிடுவாரா?

‘லேய், அந்த சேர் கழுத்துல ரெண்டு பூவ சுத்தி வைங்கடா. எம்பேத்தி பொறந்தது 1971தான்.’ சுந்தரமூர்த்தி முதலியாரின் குரல் வீதிக்கு வந்தபோது பத்மநாபன் அவசர அவசரமாகத் தன் காதல் கடிதத்தின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருந்தான்.

முதலியார் வீட்டு வாசலில்தான் மயில் நின்றுகொண்டிருந்தது. ஆனால் வீதி முழுவதற்குமாகப் பந்தல் போட்டிருந்தார்கள். வாடகைக்குக் கொண்டு இறக்கிய பிளாஸ்டிக் நாற்காலிகளில் பெரியவர்கள் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். சின்னாளம்பட்டுப் புடைவையும் கொண்டையைச் சுற்றிய கனகாம்பரப் பந்துமாக அவர்தம் சம்சாரங்கள் [அவரவர் சம்சாரம் என்று பாடம்.] பிரிஞ்சிக்குப் பிறகு கிடைத்த கோலி சோடாவை வீணாக்க விரும்பாமல் பாதி சாப்பிட்டுவிட்டு, யாரும் பார்க்கிறார்களா என்று கவனித்தவண்ணம் மீதியில் கைகழுவினார்கள்.

‘தம்பி, சோடா குடிக்கிறியா? கலரு சோடா.’

எழுதிக்கொண்டிருந்த காகிதத்தை சரேலென்று பாக்கெட்டில் திணித்து மறைத்தபடி பத்மநாபன் தலை நிமிர்ந்தபோது வீரபத்திரன் கையில் நாலு சோடா பாட்டில்களுடன் எதிரே இந்திரஜித் போல நின்றுகொண்டிருந்தான்.

‘வேணாம்.’ அவன் உடனே நகர்ந்துவிட்டால் நல்லது என்று தோன்றியது. ஆனால் முறைத்தான்.

‘என்னாத்த மறைச்சே? என்னா எளுதுற? நாம்பாக்கலேன்னு நெனச்சியா? அதெல்லாம் கரீட்டா நோட் பண்ணிருவேன்.’

‘அ.. ஆமா. இல்லியே?’ சே. சொதப்பிவிட்டேன். இவனுக்கு எதற்கு நான் பயப்படுகிறேன்? பத்து பைசா பிரயோஜனமில்லாத வெறும்பயல். எழுதிய தாளைப் பிடுங்கிக்கொண்டால்கூட எழுத்துக்கூட்டிப் படிக்கத் துப்பில்லாதவன். வளர்மதி வீட்டில் எடுபிடி வேலை செய்துகொண்டிருக்கிறவன். பரட்டைத் தலையும் முரட்டுப் பார்வையும் அண்டர்வேர் தெரிய மடித்துக் கட்டிய லுங்கியும் இரட்டை இலையைப் பச்சை குத்திய புஜம் தெரிய மடித்துவிடப்பட்ட சட்டையுமாக எப்போது பார்த்தாலும் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பவன். அதுவும் ஊ.. ஆ.. என்கிற சுருதியோடு வெளிப்படுகிற கொட்டாவி.

முதலியார் பொதுவில் அவனை மூதேவி என்று அழைப்பது வழக்கம். ஆரம்பத்தில் அது குறித்து வருத்தப்பட்டிருப்பானோ என்னவோ. காலப்போக்கில் அவனது பெயர் வீரபத்திரன் என்பது அவனுக்கே மறந்து, ‘லேய் மூதேவி’ என்றால் மட்டுமே திரும்பிப் பார்க்கக்கூடிய விதத்தில் முதலியார் வீட்டு வாழ்க்கைக்குப் பழகிப்போனான்.

‘பாவம்டா. அவன் ஒரு ஸ்லேவ். ஆனா அந்த வாழ்க்கையை ரொம்ப விரும்ப ஆரம்பிச்சிட்டான்’ என்று ஒரு சமயம் கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியிலேயே மிகவும் புத்திசாலி என்று புகழப்படும் பன்னீர் செல்வம் சொன்னான். அவன் சொன்னபிறகு மூன்று நாள்கள் ‘ஸ்லேவ்’ என்றால் என்னவென்று கண்டுபிடிக்க பத்மநாபனும் பாபுவும் கலியமூர்த்தியும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்கள். இறுதியில் எந்த முயற்சியும் பலனளிக்காமல் அவனிடமே விசாரித்தபோது, ‘ரெ·பர் டு தி டிக்ஷனரி’ என்று சொன்னான்.

‘விடுடா. அவனுக்கு ரொம்ப ஹெட் வெயிட். தனக்குத்தான் இங்கிலீஷ் தெரியும்னு ஒரு இது. எதுக்கானா நம்மாண்ட வராமலா போயிடுவான்? அப்ப பாத்துப்போம்’ என்று கலியமூர்த்தி வெஞ்சினம் கொண்டான்.

பத்மநாபன் அன்றைக்கு ஒரு முடிவுடன் வந்திருந்தான். என்ன ஆனாலும் சரி. இன்றைக்கு வளர்மதியிடம் தன் உள்ளக்கிடக்கையைச் சொல்லிவிடுவது. ஆங்கில அறிவிலும் இன்னபிறவற்றிலும் தன்னிகரற்ற உயரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் பன்னீரை வெற்றிகொள்ளத் தனக்கிருக்கும் ஒரே வழி அதுதான். ஒருவகையில் அது இப்போது அவசரமான விஷயமும் கூட.

அவனுக்குத் தெரிந்து, அவன் வகுப்பில் மொத்தம் ஐந்துபேர் வளர்மதியைக் காதலித்துக்கொண்டிருந்தார்கள். சீட்டிப் பாவாடையும் ரெட்டைப் பின்னலும் முதுகில் தொங்கும் புத்தக மூட்டையுமாகப் பள்ளிக்கு வருகிற வளர்மதி. அடேயப்பா. எத்தனை பெரிய கண்கள் அவளுக்கு. விரித்து வைத்து ஒரு படமே வரைந்துவிடலாம் போல. பாய்ஸ¤டன் பேசுவது கெட்ட காரியம் என்று இருந்த நூற்றாண்டு கால வழக்கத்தை முதல் முதலில் ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் மாற்றி எழுதியவள் அவள்தான்.

‘பத்து, உன்னை ஏண்டா எல்லா பசங்களும் குடுமிநாதன்னு கூப்பிடறாங்க? நான் பாத்து நீ குடுமியோட இருந்ததில்லையே?’ என்று திடீரென்று ஒருநாள் அவனிடம் கேட்டாள் வளர்மதி.

வளர்மதி தன்னிச்சையாகத் தன்னிடம் பேச வந்ததில் திக்கிமுக்காடிப்போன பத்மநாபன், அவள் பேச எடுத்துக்கொண்ட கருப்பொருள் பற்றி லேசாக அதிருப்தி கொண்டான். ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘ப்ச்.. புவர் ·பெல்லோஸ்’ என்று பன்னீர் எப்போதோ உபயோகித்த ஒரு சொல்லை கவனமாக நினைவின் அடுக்குகளில் தேடி எடுத்து ஒலிபரப்பினான்.

‘இல்ல.. சும்மா தெரிஞ்சிக்கணும்னுதான் கேட்டேன். சின்ன வயசுல நீ குடுமி வெச்சிருப்பியா?’

‘இல்ல வளரு. ஆறாவது படிக்கசொல்ல ஒருவாட்டி பழனிக்கு நேர்ந்துக்கிட்டு முடி வளர்த்துக்கிட்டிருந்தேன். அப்ப நம்ம பாண்டுரங்கன் சார் அப்பிடி கூப்புடுவாரு. அதையே புடிச்சிக்கிட்டு.. சே.’

‘வருத்தப்படாதடா. அப்படி கூப்பிட்டாக்கூட நல்லாத்தான் இருக்கு. நானும் கூப்பிடவா?’

‘அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேண்டாம் என்று அவசரமாக மறுக்கப் பார்த்தான். ஆனால் கோபித்துக்கொண்டு ஒருவேளை அவள் பேசாதிருந்துவிட்டால்?

அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம். ஏனைய பையன்கள் அத்தனைபேரும் அவளுடன் ஒருவார்த்தை பேசிவிடமாட்டோமா என்று தவம் இருக்கும்போது அவளாக வலிய வந்து பேசியிருக்கிறாள். இது மட்டும் பன்னீருக்குத் தெரிந்தால் பொறாமைச் சூட்டில் வெந்தே செத்துப் போய்விடுவான். ஒவ்வொரு பரீட்சையிலும் முதல் ரேங்க் எடுத்து என்ன புண்ணியம்? அவன் வாழ்நாளெல்லாம் வளர்மதியை நினைத்து மனத்துக்குள்ளேயே மறுகிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

நான் அதிர்ஷ்டசாலி. சந்தேகமில்லாமல் அதிர்ஷ்டசாலி. வேறு யாரிடமும் காணமுடியாத ஏதோ ஒரு சிறப்பம்சம் என்னிடத்தில் இருக்கிறது. மடையன், எனக்குத் தெரியாது போனாலும் வளர்மதிக்கு அது தெரிந்திருக்கிறது.

அதன்பிறகு ஒருசமயம் வீட்டுப்பாடத்தில் அவன் செய்திருந்த குளறுபடியை அவள் எடுத்து சரி செய்து கொடுத்தாள். பிறிதொரு சமயம் பள்ளி மைதானத்தில் அவன் சா·ப்ட் பால் ஆடிக்கொண்டிருந்தபோது அடித்த ஒரு ஷாட்டுக்குக் கைதட்டினாள். பாரதிவிழா பேச்சுப்போட்டியில், பெருமாள் வாத்தியார் எழுதிக்கொடுத்த அசகாயப் பேச்சை உருப்போட்டு அவன் ஒப்பித்தபோது பாராட்டினாள். பரிசு கிடைத்தபோது இன்னொருமுறை பாராட்டினாள்.

அவனது காதல் வேகம் பிடிக்கத் தொடங்கி இரவும் பகலும் வளர்மதி, வளர்மதி என்று உள்ளுக்குள் உருகத் தொடங்கியபோதுதான் திடீரென்று ஒருநாள் அவள் பள்ளிக்கு வரவில்லை. எதனால் என்று புரியாமலேயே அவனுக்கு அழுகை வந்தது.

இதென்னடா விபரீதமாய்ப் போச்சே என்று மறுநாள் அடித்துப் பிடித்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றபோது, அன்றைக்கும் அவள் வரவில்லை. தற்கொலை பண்ணிக்கொண்டுவிடலாம் என்று முதலில் தோன்ற, சில நிமிடங்கள் யோசனையை ஒத்திப்போட்டுவிட்டு அவள் வீட்டுக்கே சென்று பார்த்துவிடலாம் என்று நினைத்தான். அதிலும் பிரச்னை. பையன்கள் யாருக்காவது தெரிந்துவிட்டால் சத்துணவுக்கூட சுவரில் கரியால் எழுதிவிடுவார்கள். குடுமிநாதன் – வளர்மதி காதல். வீட்டுக்குப் போய் விசாரித்துவிட்டு வந்த வீரன் கதை கேளீர்.

சத்துணவுக்கூட சுவர் செய்திகளால் சித்தியடைந்தது. ஏற்கெனவே ஏழெட்டுக் காதல் கதைகளை அரங்கேற்றிய சங்கப்பலகை அது. அதில் இடம்பெறும் பேறு பெற்ற யாரும் ஹெட் மாஸ்டரின் பிரம்படிக்குத் தப்பித்ததில்லை. பயமாகத்தான் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே விஷயம் வகுப்பறைக்கு வந்துவிட்டது. வளர்மதியின் தோழி ராஜாத்திதான் தகவல் ஒலிபரப்பினாள். வளர்மதி வயசுக்கு வந்துவிட்டாள்.

ஏற்கெனவே அவளைக் காதலித்துக்கொண்டிருந்த ஐந்து பேருடன், அந்தக் கணம் புதிதாக மூன்று காதலர்கள் அவளுக்காக அவதரித்தார்கள். வயதுக்கு வந்துவிட்ட வளர்மதி. இனி தாவணி அணிந்து பள்ளிக்கு வரப்போகிற வளர்மதி. தாவணியில் அவள் எப்படி இருப்பாள்? ஐயோ, கடவுளே, எனக்கு மட்டும் கவிதை எழுதத் தெரிந்தால் இன்னேரம் இரண்டு குயருக்கு எழுதித் தள்ளியிருப்பேனே.

எத்தனையோ தருணங்களில் தனக்கு வாழ்த்துச் சொன்ன வளர்மதிக்குத் தான் இப்போது ஏதாவது சொல்லி அல்லது செய்தாகவேண்டும். கண்டிப்பாக, பன்னீருக்கு முன்னதாக. அவனுக்குக் கிடைத்திருந்த தகவலின்படி, வளர்மதி மீண்டும் பள்ளிக்கு வந்ததும் உடனடியாகப் பன்னீர் செல்வம் அவளிடம் தன் காதலை ‘ஓப்பன்’ பண்ணப்போகிறான். வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் பெறும் மாணவனின் காதலை அவள் ஒருக்காலும் மறுக்கமாட்டாள்.

எனவே முந்திக்கொண்டுவிடுவது என்று முடிவு செய்துதான் மயில் ஜோடித்திருந்த அவள் வீட்டு வாசலுக்குச் சென்று உட்கார்ந்து, கடிதம் எழுதிக்கொண்டிருந்தான். பாக்கெட்டில் ஒரு ரோஜாப்பூ வைத்திருந்தான். யார் கண்ணிலும் படாமல் கொடுத்துவிட முடிந்தால் அதி உன்னதம்.

அன்புமிக்க வளர்மதி, உன் பிரியத்துக்குரிய பத்மநாபன் என்கிற குடுமிநாதன் எழுதிக்கொள்வது. இப்பவும் நீ பெரியவளாகிவிட்ட விஷயம் கேள்விப்பட்டு உளமார மகிழ்ந்தேன். நான் படித்து முடித்துப் பெரியவனாகி, ஓர் உத்தியோகத்தைத் தேடிக்கொண்டு, உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுதும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்று எங்கள் குலதெய்வம் திருப்போரூர் முருகப்பெருமான் மீது ஆணையாக உறுதி கூறுகிறேன். என் காதலை ஏற்றுக்கொண்டு என்னை அங்கீகரிப்பாய் என்று திடமாக நம்புகின்றேன். படித்ததும் இக்கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிடவும். யாருக்கும் தெரியாமல் படிக்கவும். இவண், கு.வெ. பத்மநாபன்.

எழுதியதைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தான். ஒரு சமயம் சரியாக இருப்பது போலவும், இன்னொரு சமயம் சுத்த அபத்தம் என்றும் மாற்றி மாற்றித் தோன்றியது. முதலில் ஆங்கிலத்தில் எழுதலாம் என்றுதான் நினைத்தான். My dear uncle, Iam fine. How are you? It is very kind of you to have sent me such a nice fountain pen. I shall make the best use of it. I like it very much என்று தொடங்கி ஏழெட்டு வரிகளுக்கு நீளும் செகண்ட் பேப்பர் மாதிரிக் கடிதம் ஒன்றை எடிட் செய்து தக்க மாறுதல்களுடன் காதல் கடிதமாக உருமாற்றியும் வைத்திருந்தான். [My dear Valarmathi, Iam fine. How are you…] ஆனால் இறுதிக் கணத்தில் முடிவை மாற்றிக்கொண்டான். அந்நிய மொழியை அதிகம் நம்புவதற்கில்லை.

பயமும் படபடப்பும் ஆர்வமும் மேலோங்க, வியர்வையைத் துடைத்தபடி எழுந்தான். வளர்மதி மயிலுக்கு வந்திருந்தாள். சரிகை பார்டர் வைத்த பச்சை கலர் பட்டுத் தாவணியில் அம்மன் போலல்லவா இருக்கிறாள்! உறவினர்களும் மற்றவர்களும் கன்னத்தில் தடவிய சந்தனம் காய்ந்து தனியொரு எழிலை அவளுக்குத் தந்திருந்தது.

மாமன்கள் சீர் செய்துகொண்டிருந்தார்கள். தயங்கி நின்றது போதும் என்று முடிவு செய்து, மனத்துக்குள் முருகா, முருகா, முருகா, முருகா என்று சொல்லியபடியே மெல்ல முன்னேறி மயிலுக்கு அருகே சென்றான்.

சட்டென்று தோளில் ஒரு கைவிழுந்தது. வீரபத்திரன்.

‘என்னா? கி·ப்டு கொண்டாந்துக்கிறியா? என்னாண்ட குடுத்துட்டுப் போ. நீயெல்லாம் மேல போவக்கூடாது பத்து. இது பொம்பளைங்க மேட்டரு. பெரியவங்க மேட்டரு’

‘ஒரே நிமிசம் வீரபத்திரா. வாழ்த்து சொல்லிட்டுப் போயிடறேன்.’

‘அடச்சே கசுமாலம். வாள்த்தறானாம் வாள்த்து. உங்கப்பாருக்கு நீ இங்க வந்திருக்கறது தெரியுமா?’

சே. இழவெடுத்தவன். எந்த நேரத்தில் யாரை நினைவுபடுத்துகிறான்? எல்லாம் தெரியும் போ என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று அருகே போனான்.

வளர்மதி சிரித்தாள். ‘என்னடா? இங்க எப்ப வந்த?’

‘இப்பதான் வளரு.. வந்து..’

பேசத் தொடங்கியவன், இயற்கையான உந்துதலால் மெல்லத் திரும்பிப் பார்த்தான். அதிர்ச்சியாக இருந்தது. அழுகை வந்தது.