42
ஒருவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துகொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் வந்ததும் மாட்டிக்கொண்டார். ஆனாலும் சாமர்த்தியமாகப் பேசித் தப்பிக்க நினைத்தார்.
“ஏங்க இந்த நாடு நம்ம நாடு தானே”
“ஆமா”
“அப்போ இந்த நாட்டில் உள்ள பொருட்களெல்லாம் நம்ம பொருளுங்க மாதிரித்தானே”
“ஆமா”
“அப்போ இந்த ரயிலும் நம்ம ரயிலுதானே”
“ஆமா”
“அப்போ நம்ம ரயில்ல போறதுக்கு நாமே டிக்கெட் எடுத்தா நல்லாயிருக்குமா? அதுதான் நான் டிக்கெட் எடுக்கல”
டிக்கெட் பரிசோதகர் ஒரு கணம் திகைத்து விட்டார். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு நிலைமையைச் சமாளித்தார்.
“நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான். இங்க ஒரு ஜெயில் இருக்கு. அதுவும் நம்ம ஜெயில்தான், மூணுமாசம் அங்க இருந்துட்டுப் போங்க”
நாட்டையே தங்கள் நலனுக்காக அடகு வைப்பவர்கள் உண்டு. ஆனால் நாட்டுக்காகத் தன்னேயே அர்ப்பணித்தவர் காமராசர். எப்போதும் அவருக்கு நாட்டைப் பற்றிய சிந்தனைதான். ஒருமுறை பெருந்தலைவரைச் சந்திக்க வந்த ஒருவர், “ஐயா நல்லா இருக்கீங்களா?” என்று எல்லோரும் கேட்பது போல பொதுப்படையாகக் கேட்டார். உடனே காமராசர் நான் நல்லாத்தான்இருக்கேன். செத்தா போயிட்டேன். “நான் மட்டும் நல்லாயிருந்தாப் போதுமா? நாடு நல்லா இருக்க வேணாமா? அதைப்பத்தி எல்லாரும் யோசிக்கணும்” என்றாராம்.
தீபம் நா.பார்த்தசாரதி பெருந்தலைவருக்கு அறிமுகமான நேரம். தமது சொந்த ஊரைப் பற்றிக் குறிப்பிடும் போது சிவகாசிக்கு அருகில் ஆறு மைல் தொலைவில் உள்ள எனது ஊர் என்றாராம். உடனே காமராசர் “உங்க ஊர்க் கண்மாயிலே மீன்பிடிக் குத்தகையிலே வருஷா வருஷம் சண்டை வருமே இப்ப எப்படி இருக்கு” என்றாராம். தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிற தலைவரின் அக்கறையைக் கண்டு அசந்து போனாராம் நா.பார்த்தசாரதி. ஒரு முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு வல்லுநர் குழுவினர் “உங்கள் முதலமைச்சர் நாட்டின் பூகோளத்தையே தமது தலைக்குள் வைத்திருக்கிறாரே” என்று வியந்து பாராட்டினார்களாம்.
கோபத்தை அன்பால் வென்றிட வேண்டும்
பாசத்தை விவேகத்தால் வென்றிட வேண்டும்
பொய்யை மெய்யால் வென்றிட வேண்டும்
தீயதை நன்மையால் வென்றிட வேண்டும்
பேராசையை உதாரண குணத்தால் வென்றிட வேண்டும்
தன் நலத்தை பொது நலத்தால் வென்றிட வேண்டும். இதுவே நல்ல மனிதர்களை உருவாக்கும்.