43
உனது அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ மட்டும் உண்ணாதே என்ற வாக்கை நான் கடைபிடிக்கத் தொடங்கி விட்டேன் என்றார் ஒருவர். அப்படியா? “அடுத்த வீட்டுக்காரரின் அரும்பசியைப்போக்க உதவி செய்யத் தொடங்கி விட்டீர்களா?” என்று கேட்டார் மற்றவர். “அதுதான் இல்லை. ஏழைகள் இல்லாத பகுதியில் பங்களா வாங்கிவிட்டேன். அங்கே அடுத்த வீட்டுக்காரர்கள் யாரும் பசித்திருக்க மாட்டார்களே“ என்றார் அவர். சமத்துவத்தை இப்படிக் கடைப்பிடிப்பவர்கள் உண்டு.
சமதர்மத்தின் மூலம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர் பெருந்தலைவர் காமராசர். ஜனநாயக சோஷியலிசம் என்ற கொள்கையை புவனேஸ்வர காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியவர் காமராசர். இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இரண்டு முறை இருந்தது. ஒன்று தார்மீக முறை. மற்றொன்று கட்டாய முறை. இதனை விளக்க பெருந்தலைவர் அருமையான உதாரணம் ஒன்றைச் சொன்னார். தரையில் உறங்குகிறான் ஒருவன். பாயில் படுத்திருக்கிறான் மற்றொருவன்.
இதில் சமத்துவம் இல்லை. இந்த ஏற்றத்தாழ்வை இரண்டு விதங்களில் போக்கலாம். பாய் விரித்து உறங்குபவனிடமிருந்து பாயைப் பிடுங்கிக்கொண்டு அவனையும்தரையில் படுக்க வைப்பது. இது ஒரு முறை. புதிதாக ஒரு பாயை உருவாக்கி தரையில் படுத்திருப்பவனும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்துதல். இந்த முறையே சிறப்பானது. சமவாழ்வு சமுதாயத்தை அமைக்கும் பணியை கட்டாயத்தின் மூலம் செய்ய விரும்பவில்லை. போதனை முறைகளையே கையாண்டு உடைமை வர்க்கத்தின் உள்ளத்தில் மனித நேயத்தை வளர்ப்பதே முக்கியம் என்றார். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார் காமராசர். ஒரு தடவை ஒரு மன்றத்தில் பேசப்போனார். குடிசை வாழ் மக்கள் சங்கம்அது. தொடக்கத்திலேயே பெயர்ப் பலகையைச் சுட்டிக் காட்டி “குடிசை வாழ் மக்கள் என்று போட்டிருக்கிறிர்கள். நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும். எல்லா வசதிகளும் கிடைத்தால் தான் நீங்கள் வாழ்வதாக அர்த்தம்” என்று பேசினார். அதனால்தான் அரசுக் கவிஞர் எஸ்.டி.சுந்தரம்.
“ஏழை எளியேரின் ஏகப்பிரதிநிதி
எங்கள் தலைவர் என்றும் வாழியவே
ஏழேழ் பிறப்பிற்கும் இந்திய நாட்டின்
இமயம் போல் புகழ் வாழியவே“
என்று வாழ்த்துகிறார்.