46
தம்மைப் பற்றித் தற்புகழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பதே சிலருக்கு வேலையாக இருக்கும். அல்லது மற்றவர்களை வைத்துத் தம்மைப் புகழ்ந்து பேசச் சொல்வார்கள். ஒருவர் தம்முடைய பிள்ளைகள் மூன்று பேருமே கலெக்டராக இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கலெக்டராக இருக்கும் அதிசயத்தை பத்திரிகையில் எழுத ஒரு நிருபர் அந்தப் பெரியவரிடம்பேட்டி எடுக்க வந்தார். பேட்டி தொடங்கியது
“உங்கள் பிள்ளைகள் மூன்று பேரும் கலெக்டர்களா?”
“ஆமாங்க“
“மூணு பேரும் எங்க படிச்சாங்க“
“இந்த ஊர்ல தாங்க“
இப்ப எந்த மாவட்டங்களுக்கு கலெக்டரா இருக்காங்க?”
“வேற ஊர்ல இல்லீங்க. எல்லாம் இந்த ஊர்ல தான் இருக்காங்க“
“ஒரே ஊர்ல மூணு கலெக்டர்கள் இருக்க முடியாதே“
“ஏன் முடியாதுங்க? மூணு பேருமே இந்த சென்னைப் பட்டணத்தில்தான் இருக்காங்க“
“அப்படியா“
“ஆமாங்க மூத்தவன் கார்ப்பரேஷனில் பில் கலெக்டரு. அடுத்தவன் சினிமா தியேட்டர்ல டிக்கெட் கலெக்டரு. இளையவன் ஓட்டல்ல டோக்கன் கலெக்டரு” நிருபர் மயங்கி விழுந்தார்.
தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து பேசாதது மட்டுமல்ல. மற்றவர்கள் புகழும் போதும் தடுத்து நிறுத்தியவர் பெருந்தலைவர் காமராசர். ஒரு சமயம் சென்னைக்கு அருகில் காந்தி சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. காமராசர் தலைமை வகித்தார். முதலில் பேச வந்தவர் காமராசரைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார். அலங்கார நடையில் காமராசரின் சாதனைகள், திறமை, அரசியல் அனுபவம், தியாகம் ஆகியவற்றை விலாவாரியாக விவரித்துக்கொண்டிருந்தார். இதை காமராசரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சீக்கிரம் பேச்சை முடிக்கும்படி குறிப்புக் காட்டினார். அப்போதும் அவர் பேச்சை நிறுத்தவில்லை. காமராசரால் தாங்க முடியவில்லை. “நீங்க பேசியது போதும்னேன்” என்று கூறியபடி காமராசர் எழுந்து மைக்கைப் பிடித்துக் கொண்டார். “இவரு பேசினதை எல்லாரும் கேட்டீங்க. இவருக்கு என்மேல் பிரியம் அதிகம். அதனால இல்லாதது பொல்லாததையெல்லாம் எடுத்துப்பேசுகிறார். அதுக்காகவா இங்க கூட்டம் போட்டிருக்கோம். காந்தி சிலையைத் திறக்கப் போறோம். அவரோட பெருமைகளைப் பத்தி பேசுவோம்.” கர்ம வீரர் காமராசரின்பெருந்தன்மையைக் கண்டு கூட்டமே வியந்தது. ஒருமுறை பெருந்தலைவர் ஓர் ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். செருப்பு அறுந்து விட்டது. புதுச்செருப்பு வாங்குவதற்காக ஒரு கடைக்குப்போனார். உடனே செருப்பைக் கொடுக்காமல் தாமதப்படுத்திக் கொண்டிருந்தார். காமராசர் விரைவுபடுத்தினார். அப்போதுதான் கடைக்காரர் உண்மையைச்சொன்னார். “அய்யா உங்களோட சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை, பெரியவங்க வந்திருக்கீங்க போட்டோ ஸ்டூடியோவுக்கு ஆள் அனுப்பியிருக்கேன்; கொஞ்சம் பொறுங்க” காமராசருக்கு கோபம் வந்துவிட்டது. இந்த வேலையெல்லாம்வேணாம். நீங்க நெனைக்கிற மாதிரி நான் ஒண்ணும்பெரிய ஆளு இல்ல. சாதாரணமான ஆளுதான். இப்படி விளம்பர ஆசையெல்லாம் வேணாம்னேன். போட்டோ பிரியர்களாக அலையும் தலைவர்கள் மத்தியில் தனித்து விளங்கினார் தலைவர் காமராசர்.
ஒருவரிடம் தற்பெருமை எங்கு முடிவடைகின்றதோ, அங்கு தான் ஒழுக்கம் துவங்குகின்றது.