50
பல பேர் மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. மற்றவர்களின் மனங்களைப் புண் படுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள். ஒருவர் புதியதாக ஒரு நாய் வாங்கிக்கொண்டு வந்து தன் வீட்டில் கட்டினார். அதற்கு மணி என்று பேர் வைத்தார். அடிக்கடி அதை மணி நாயே மணி நாயே என்று கூப்பிடுவார். மணி நாயே ஒழுங்கா இரு இல்லாட்டி உதை விழும் என்று திட்டுவார். மணி நாய்க்கு எச்சிலைப்போடு திங்கட்டும் என்று மனைவியிடம் சொல்வார். திடீரென்று அவர் நாய் வாங்கிய ரகசியம் பலருக்குத் தெரியவில்லை. ஆனால் எதிர்த்த வீட்டுக்காரருக்குப் புரிந்து விட்டது. அவர் பேர் மணி, தன்னை மறைமுகமாகத் திட்டுவதற்கே இந்த ஏற்பாடு என்று புரிந்து கொண்ட அவர் தன் வீட்டிலும் ஒரு நாய் வளர்க்க ஏற்பாடு செய்தார்.
உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சிகளை நாம் தான் உற்பத்தி செய்துகொள்கிறோம். உண்மையில் யாரும் தாழ்ந்தவரில்லை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்ட எல்லோரையும் மதித்தவர் பெருந்தலைவர். அதனால்தான் எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஒருமுறை பெருந்தலைவரின் கார் கரூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. புதிதாக வாங்கிய செருப்பை காலில் போடுவதும், மாட்டுவதுமாக இருந்தார் அவர். அது காலுக்குப் பொருந்தவில்லை என்று தெரிந்தது. கரூர் போனதும் வேறு செருப்பு வாங்கி விடலாம் ஐயா, என்று கூடயிருந்தவர்கள்சொன்னார்கள். கரூரில் காங்கிரஸ் தலைவர் நல்லுசாமியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சாக்குப்பையுடன் ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். “தம்பிக்கு என்ன வேணும்?” என்றார் தலைவர். ஐயா காலுக்கு செருப்புத் தைக்க அளவெடுக்க வந்தேனுங்க என்றான் பையன். “நல்லாத் தைப்பியா?” என்று தலைவர் கேட்க, “என்னோட திறமையைப் பாருங்க அப்புறம் ஒவ்வொரு தடவையும் என்னைத்தான் தைச்சுத்தரச் சொல்லுவீங்க” என்றான் பையன். தலைவர் அசந்து போனார். இரவு கூட்டம் முடிந்து தலைவர் அறையில் பேசிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் வந்தான். அதற்குள் எப்படியப்பா தைச்ச என்று வரவேற்றார் தலைவர். செருப்பை கால்களில் மாட்டினார். எழுந்து நடந்தார். செருப்பு கால்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியது.”இந்தாப்பா. இதை நீயா தைச்சே என்று மகிழ்ச்சியோடு” கேட்டார் தலைவர். “ஆமய்யா உங்களுக்கு செருப்பு தைக்க கொடுத்து வைச்சிருக்கணுமே, வேற ஒருத்தருக்கு விட்டுக்கொடுப்பேனா” என்று படபடவென்று பேசினான் பையன். தலைவர் தலையணைக்கு அடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார். பையன் பணத்தை வாங்க மறுத்துவிட்டான். “இன்னம் எவ்வளவு வேணும் சொல்லு” என்று தலைவர்கேட்க, “பணமே வேண்டாம். உங்களுக்கு இதைச் செய்ய வாய்ப்புக் கிடைச்சதே பெரும்பாக்கியம்” என்றான் பையன். இறுதியில் தலைவரின் வற்புறுத்தலுக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை மட்டும் பெற்றுக்கொள்ள சம்மதித்தான். அதைத் தலைவரிடமே கொடுத்து “அய்யா இதுல உங்க கையெழுத்தைப்போட்டுக் குடுங்க. காலங்காலமா இதைப் பொக்கிஷமா பாதுகாப்பேன்” என்றான். தலைவர் உருகிவிட்டார். மறு வருடம் கரூர் சென்றிருந்தபோது, தலைவரைச் சந்திக்க அந்தச் சிறுவன் வந்தான். வா… வா… நல்லாயிருக்கியா… என்று தலைவர் அவனை வரவேற்றபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
அன்று ராமருக்கு ஒரு குகன் தலைவருக்கோ ஒரு சிறுவன்
அன்புக்கு முன்னே அனைவரும் சமமே.