51
ஆடம்பரத்திலேயே பலருக்கு அதிக நாட்டமிருக்கும். மற்றவர்கள் தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். ஒருவன் தனது பகட்டைக் காட்டுவதற்காக ஐந்து விரல்களிலும் மோதிரங்களை மாட்டிக் கொண்டான். மற்றவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் கையை உயர்த்திப்பேசினான். ஆனால் யாரும் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து ஒரு வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்தது. அதை அணைக்க பலர் ஓடி வந்தார்கள். சீக்கிரம் போங்க சீக்கிரம் போங்க என்றபடி மோதிரக் கையை ஆட்டினான் அவன். அப்போது ஒரு பெரியவர் ஓடிக் கொண்டே மோதிர மெல்லாம் நல்லாயிருக்கே. எப்போ வாங்கினே என்று கேட்டார். அப்போது மோதிரக்காரன் நினைத்துக் கொண்டான் “இந்த வார்த்தையை முன்னாலேயே யாராவது சொல்லியிருந்தா வைக்கோல் படப்புக்கு தீயே வச்சிருக்க மாட்டேன்.”
பெருந்தலைவர் காமராசர் ஆடம்பரங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரது பண்புகளில் முன் நிற்பது எளிமையே. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் இவரது எளிமையான தோற்றம் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார். தென்னிந்தியக் குடியானவனின் முரட்டுத்தோற்றத்தை மூடி மறைக்க எந்த விதமான மெருகும் ஏற்றப்படாதவர். மலை போன்ற கருப்புமனிதர். ஒளிவிடும் கண்கள் எளிமையின் சின்னமாகவும், தேசியத்தின் அடையாளமாகவும், கதராடையையே அவர் அணிந்தார். மிகச் சிறந்த காங்கிரஸ் தலைவரான அவர் பெயர் டெல்லி வட்டாரத்தை அசைக்கத் தொடங்கிய வேளை பண்டித நேரு முதன் முதலில் காமராசரைக் காணத் தென்னகம் வருகிறார். உயர்ந்த அந்தஸ்தை நாடியிருப்பவர் என்ற கற்பனையில் வருகிறார் நேரு. ஆனால் ஓய்வறையில் முதன்முதலில் அவரைக் காணுகிறபோது ஒரு சாதாரண பெஞ்சில் தலைக்கடியில் கையை வைத்துப் படுத்திருந்த எளிமை நிலையைக் கண்டு வியந்து போகிறார்.
தோற்றத்தால் மட்டுமல்ல. உள்ளத்தாலும் எளிமையானவர் பெருந்தலைவர். அடைக்கலம் என்ற பெயருடைய சிறுவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனது தந்தை தனது மகன் சிகிச்சைக்காக தலைவரிடம் உதவி கேட்க வந்தபோது “சாமி, சாமி” என்று அடிக்கொருதரம் சொன்னார். இது பெருந்தலைவருக்குப் பிடிக்கவில்லை. “இந்தா பாருப்பா நானும் எல்லோரையும் போல மனுஷன்தான் வெறும் ஆசாமிதான். உன்னைப்போல மனுஷ ஜென்மம் தான். என்னைப்போயி சாமி ஆக்கிடாதே” என்று கூறினாராம். கையில் கடிகாரம் கூட கட்டிக்கொள்ளாத முதலமைச்சர் ஒருவரை இந்த உலகம் இதுவரையில் கண்டதுண்டா? அத்தனை எளிமையாக வாழ்ந்தவர் அவர்.
“காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்“
என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர்.