52
ஒருவர் மற்றவரிடம் நான் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசப்போகிறேன் பாருங்கள் என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் பரபரப்படைந்தார். டைரியைத் தேடினார். பேனாவைத் தேடினார். எந்தத் தேதியில் எந்த நேரத்தில் பேசப்போறீங்க. விவரமாகச் சொல்லுங்க என்று கேட்டு டைரியில் குறித்துக் கொண்டார். பேசப் போகிறவருக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய நிகழ்ச்சியைப் பார்க்க அவ்வளவு ஆர்வமா? என்றார். “அட போய்யா! அந்த நேரம் டி.வி–யை திறந்திடக் கூடாதேன்னுதான் எச்சரிக்கையா குறிச்சுக்கிட்டேன்.” என்று பதில் வந்தது. மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவ தென்றால் பலருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
பெருந்தலைவர் காமராசர் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர். இந்திய பாகிஸ்தான் போர் மூண்ட நேரம் எல்லையோரத்தில் ராணுவ வீரர்கள் கூட்டத்தில் காமராசர் ஒருமுறை கலந்து கொண்டார். அப்போது ஓர் ராணுவ வீரர் தமிழில் அய்யா வணக்கம் என்று கூறினார். தமிழ்க்குரலை கேட்டதும் காமராசர் உருகிப்போனார். அவரைத் தனியே அழைத்துக் கனிவாகப் பேசினார். தைரியமூட்டினார். “உங்கள் ஊர், முகவரி, குடும்பத்தார் விவரங்களைச் சொல்லுங்கள் நான் தமிழ் நாட்டுக்குப் போனதும் அவர்களைச் சந்தித்து தைரியம்சொல்கிறேன்.” என்று அவர் கூறியதும் அந்த ராணுவ வீரர்மெய்சிலிர்த்துப்போனார். ஒரு சாதாரண மனிதனின் உணர்வைக்கூட மதித்து கவுரவிக்க நினைக்கும் அந்தமாமனிதரை மீண்டும கைகூப்பி வணங்கினார் அந்த வீரர்.
எதிரிகளை ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர் பெருந்தலைவர். நாகர்கோவில் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்ட நேரம் ஊர்வலமாகச்சென்று பிரசாரம் செய்தார். ஊர்வலம் ஒரு தெருமுனையைத் தாண்டும் நேரம். அதற்கு மேல் போக வேண்டாம் என்று கட்சித் தொண்டர்கள் பெருந்தலைவரைத் தடுத்தார்கள். எதிரிகள் அவரைத் தாக்குவதற்காகக் காத்திருப்பதாகவும் ஊர்வலத்தை வேறு திசையில் திருப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். கர்மவீரர் கலங்கவில்லை. காரை விட்டு இறங்கி நடந்து சென்றார். கலகக்காரத்தலைவனை நெருங்கி நேருக்கு நேர் சந்தித்தார். “தம்பி உன்னை எனக்கு நல்லாத்தெரியுமே. போன தடவை நான் இங்க வந்தப்போ எனக்குச் சந்தன மாலை போட்டு வரவேற்றியே நல்லாயிருக்கியா?.” என்று அவர் கேட்டதும் அந்த வாலிபன் வியந்து போனான். உண்மைதான். சில நாட்களுக்கு முன்னால் அவன் அவருக்காக உழைத்தவன்;எதிரிகளின் தூண்டுதலால் மாறியவன். அவரையே தாக்குவதற்கு முற்பட்டவன். ஆனால் பெருந்தலைவரின் மனித நேயம் அவனை உலுக்கிவிட்டது. இந்த நிலையிலும் என்னை மதித்து அன்பு காட்டினாரே என்று அவன் மனதில் விசுவாச உணர்வு ஊற்றெடுக்கத் தொடங்கியது. அவன் உண்மையை உணர்ந்து மனம்மாறினான். அவரது அணியிலே இணைந்து செயல்பட்டான்.
இப்போதெல்லாம் மனிதர்கள் சந்திக்கிறார்கள். மனங்கள் சந்திப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பெருந்தலைவரோ மனிதர்களை மட்டுமல்லாது அவர்களின் மனங்களைச் சந்தித்தவர்.