"

53

தெருவில் நடந்து கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து ஒருவர் தம்பி தலைமுடி நெறைய வளர்ந்திருக்கே முடி வெட்டிக்கிறியா? என்றார். பையனும் சந்தோஷமாக சரி என்றான். ஒரு சலூனுக்கு அழைத்துப்போனார். முதலில் அவர் தனக்கு முடி வெட்டிக் கொண்டார். நான் கடைத்தெரு வரை போய் வருகிறேன். அதற்குள் பையனுக்கு வெட்டுங்கள் என்று சலூன்காரரிடம் சொல்லி விட்டு நடையைக் கட்டினார். அந்த பையன் அவருடைய மகன் என்று நினைத்து சலூன்காரரும் முடி வெட்டி முடித்தார். நெடுநேரமாகியும் போனவர் திரும்பவில்லை. உன் அப்பா ஏன் இன்னும் வரவில்லை என்று சலூன்கார் கேட்க, “அவர் என் அப்பா இல்லை. தெருவில்போகும்போது முடி வெட்டிக்கிறியா என்றார். நானும் சரின்னு வந்தேன். அவர் யாருன்னே எனக்கு தெரியாது.” என்று பையன் பதில் சொல்ல அப்போது தான் பையனை அழைத்து வந்தவரின் ஏமாற்று வேலை புரிந்தது. தங்களின் சுயநலத்துக்காக குழந்தைகளை இப்படிப் பயன்படுத்துபவர்கள் உண்டு.

குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இலவசக் கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தவர் பெருந்தலைவர். அது தவிர தனிப்பட்ட முறையிலும் அவர் குழந்தைகளிடம் அன்பு காட்டியவர். நவசக்தி அம்பி என்பவர் எழுதியிருக்கும் அந்த நிகழ்ச்சி நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. பெருந்தலைவர் ஒருநாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே நுழைகிறார்கள். பரட்டைத் தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் நிலைமையைப் பறைசாற்றுகின்றன. பணியாளர் ஒருவர் அவர்களை அடித்து விரட்டுகிறார். கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கித் தயங்கி நிற்கின்றன. மீண்டும் வீட்டுக்குள்ளே வர முயற்சிக்கின்றன. தம்மைப் பார்க்க வந்த பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய பெருந்தலைவரின் கூரிய கண்களில் அந்தக் குழந்தைகள் பட்டுவிட்டன. அவ்வளவுதான் அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க என்ன யாரைப் பார்க்க வந்தீங்க.?” என்று கேட்டபடி அவரே குழந்தைகளிடம் வந்து விட்டார். சிறுமி தயங்கித் தயங்கிப் பேசினாள். உங்களைத் தான் பார்க்க வந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான். அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரிட்சை பீஸ் கட்ட பணம் இல்லை. உங்களைப் பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அதுதான் வந்தோம். அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தபடி அம்மா தான் அனுப்பிச்சாங்களா?” “இல்லை. நாங்களாகத்தான் வந்தோம், அம்மா அப்பளம் போட்டு வீடு வீடா விக்கிறாங்க. அதுல தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்கஎன்று சிறுமி சொன்னதும் அதற்குமேல் கேட்டுக்கொண்டிருக்க தலைவரால் முடியவில்லை. அன்பு உள்ளம் உருகியது. வீட்டுப்படிகளில் ஏறி மாடிக்குச் சென்ற அவர் கையில் ஒரு கவருடன் வந்தார். சிறுமியிடம் கொடுத்து இதில் கொஞ்சம் பணம் இருக்கு. அண்ணனுக்கு பீஸ் கட்டிடுங்க. அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும்என்று ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார். மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தன. வைரவன் குழந்தைகளை அழைத்து வந்தார். வாங்கவாங்கஎன்று வாய் நிறைய வரவேற்றார் பெருந்தலைவர்.

பரிட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா. அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க என்று ரசீதை தலைவரிடம் சிறுமி நீட்டினாள். பெருந்தலைவர் கண் கலங்கி விட்டார். ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா? குழந்தைகள் அவரை வணங்கின. அவர் குழநதைகளை அன்போடு தட்டிக்கொடுத்து வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

நேர்மையுள்ளவர்கள் யாரும் ஏழையில்லை. நேர்மை தவறியவர்கள் யாரும் செல்வந்தரில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.