54
சிலர் நடுநிலைமையோடு நடப்பதாக நடிப்பார்கள். தங்கள் சுயநலத்தை அதில் கலந்து விடுவார்கள். ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது. அதற்கு என்ன பேர் வைப்பது என்பதில் பெற்றோருக்குள்போட்டி வந்துவிட்டது. தனது தந்தையின் பெயராகிய சிவசாமி என்பதைத் தான் வைக்க வேண்டும் என்று குழந்தையின் தாய் விரும்பினாள். தனது தந்தையின் பெயராகிய கிருஷ்ணசாமி என்பதைத்தான் வைக்க வேண்டுமென்று அப்பா விரும்பினார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டது. எதிர்த்த வீட்டுக்காரர் சமாதானப்படுத்த வந்தார். இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடுநிலைமையோடு தீர்ப்புச் சொல்வதாக சொன்னார். இருவரும் சம்மதித்தார்கள். குழந்தைக்கு சிவராமகிருஷ்ணன் என்று பேர் வைத்தார். அம்மாவின் அப்பா பெயரிலுள்ள சிவசாமியில் சிவனும், அப்பாவின் அப்பா பெயரிலுள்ள கிருஷ்ணசாமியில் கிருஷ்ணனும் இருந்தது. பெற்றோருக்கு திருப்தி ஏற்பட்டது. ஆனாலும் ஒரு சந்தேகம் எழுந்தது. இடையில் ராமன் என்று வருகிறதே… என்று இழுத்தார்கள். அது என்னோட அப்பாவின் பெயர் என்றார் தீர்ப்புக் கூறியவர்.
நடுநிலைமை தவறாது நடப்பது நல்ல தலைவனுக்கு மகுடமாக அமையும். இதனை ஜனநாயக பாரம்பரிய கருத்தோடு பேணியவர் பெருந்தலைவர் காமராசர். பகைவனுக்கும் அருள்வாய் என்ற ஆன்மீக நெறியை அரசியலுக்கும் ஆக்கிக் காட்டியவர் அவர். 1954க்குப் பிறகு கட்சித் தலைமைக்குத் தலைவர் காமராசருக்கும், சி.சுப்பிரமணியம் அவர்களுக்கும் போட்டி ஏற்பட்டது. காமராசரே வெற்றி பெற்றார். அவருக்கு 93 வாக்குகளும் சி.எஸ். அவர்களுக்கு 41 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் கொஞ்சநாளில் அந்தப் போட்டி முனைப்புகளையெல்லாம் பெருந்தலைவர் மறந்தார். 8 பேர் அடங்கிய தமது அமைச்சரவையில் சி.சுப்பிரமணியம் அவர்களையும் சேர்த்துக்கொண்டார். அது மட்டுமல்ல, அந்தப்போட்டியில் சி.எஸ். அவர்களை முன்மொழிந்த பக்தவச்சலம் அவர்களையும் சேர்த்துக்கொண்டார்.
தந்தை பெரியாரோடு கொள்கை அடிப்படையில் கருத்து வேற்றுமை இருந்த போதும், அவரோடு நல்லுறவு கொண்டிருந்தார். காமராஜ் என்றிருந்த பெருந்தலைவரின் பெயரை மேடைகள் தோறும் ‘காமராசர்’ என்ற நல்ல தமிழில் குறிப்பிட்டு அப்பெயரை மக்கள் நடுவே புழக்கத்தில் கொண்டு வந்தவர் பெரியார். ‘பச்சைத்தமிழன்’ ன்று அவரைக் குறிப்பிட்டார் பெரியார். ஊர்மேடைகளில் வேறுபட்டு நின்றாலும் உள்ள மேடைகளில் ஒன்றாய் விளங்கினார்கள் அறிஞர் அண்ணாவும், பெருந்தலைவரும். அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மூன்றுபடி அரிசி கேட்டுப் போராட்டம் வெடித்தது. “புது அரசாங்கத்திற்கு 6 மாத கால அவகாசம் போதுமானதல்ல. திட்டங்களை நிறைவேற்ற மக்கள்மேலும் அவகாசம் தர வேண்டும்”ன்னு அறிக்கை விட்டுப் போராட்டத்திற்கு முடிவு கண்டார் பெருந்தலைவர். போட்டியாக வந்தவர் என்ற பொறாமைக் குணம் பெருந்தலைவரிடம் தோன்றவே இல்லை.
“தமர் எனக்கோல் கோடாது
பிறர் எனக்குணங்கொள்ளாது”
செயல்படுவது சிறந்த நடுநிலையாளருக்கு அழகு என்று புறநானூறு கூறும். அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர்.