"

56

ஒருவர் மற்றொருவரிடம் கோபமாகக்கேட்டார்: ஏங்க உங்க பையன் என்னைப்போலவே பேசி என்னைப் போலவே நடித்து கேலி செய்கிறான். கண்டித்து வைக்கச்சொன்னேன். கண்டிச்சீங்களா?

ஆமா, கண்டிச்சேன் ஒரு முட்டாளைப்போலப் பேசி நடிச்சி நீயும் முட்டாளாயிடாதே உனக்கு வேற நல்ல ஆள் கிடைக்கலியா? என்று கண்டிச்சேன். இனிமே உங்களை மாதிரி என் மகன் எதுவும் செய்யமாட்டான். புகார் சொன்னவர் முகத்தில் அசடு வழிந்தது. இப்படி மற்றவர்களை மட்டம் தட்டுகிறவர்கள்தான் அதிகம் உண்டு.

நல்ல காரியங்கள்செய்து மாற்றரிடமும் மதிப்பை பெறுகின்றவர்கள் ஒரு சிலர்தான் உண்டு. அதில் பெருந்தலைவர் சிறப்பிடம் பெறுகிறார்.

1955ஆம் வருடம் டிசம்பர் மாதம் பெருந்தலைவர் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மவாட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது பெருந்தலைவர் அப்பகுதிகளைப் பார்வையிடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் ஓடோடி வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்துகொண்டது. வெளித் தொடர்பே அற்றுப்போனது. உணவுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விப்பட்ட பெருந்தலைவர் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார். ஆனால் ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு பாலமும் உடைந்துபோனது. அதிகாரிகள்பெருந்தலைவரிடம், அய்யா இதற்கு மேல் கார் செல்லாது அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்குச் செல்லுங்கள் என்றார்கள். ஆனால் பெருந்தலைவர் அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்களின் கஷ்டத்தை நான்நேரடியாப் பாக்கணும். தேவையான நிவாரணத்துக்கு உடனடியாக ஏற்பாடு செய்யணும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும் அதனால்தான் நானே வந்தேன் என்று சொல்லியபடியே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. பெருந்தலைவரின் இந்தச் சேவையைப் பாராட்டிப் பேரறிஞர்அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதமே எழுதியிருந்தார்.

சேரிகள், பாட்டாளிகளின் கு டிசைகள். உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை. வயலில்லை. உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி,

நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணும்போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரைச் சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப் படுகிறோம்.

மற்றவர்களை நாம் மதிப்பது மட்டுமல்ல. மற்றவர்களும் நம்மை மதிக்கும்படி நடந்துகொள்ள வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.