57
ஒரு பெரிய பணக்காரரின் பங்களாவில் பல வேலைக்காரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவனுக்குத் தோட்டத்தை கவனிக்கும்வேலை. நன்றாக மழை பெய்து கொண்டிருந்ததால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வேலையை செய்யாமல் உட்கார்ந்திருந்தான். இதைக் கவனித்து விட்ட முதலாளி “ஏன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையை நீ செய்யவில்லை” என்றார். “மழை பெய்கிறதே அய்யா” என்றான் அவன். “அதைப்பற்றி நீ யோசிக்கக் கூடாது. குடை பிடித்துக் கொண்டாவது தண்ணீர் ஊற்றும்வேலையைச் செய்ய வேண்டும்” என்று கட்டளை இட்டார் அவர். இப்படி அறிவின்மையும் குரூரத்தனமும் கொண்டவர்கள் பணியாளர்களை வாட்டி வதைப்பார்கள்.
பெருந்தலைவர் காமராசர் தன்னிடம் பணியாற்றிய பணியாளர்களைக் கூட தன்னைப்போல் பாவித்த பண்பாளர். 1975ஆம் வருடம் வடஆற்காடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம். இரவு 9-30 மணியிருக்கும். ஆலங்காயம் என்ற சிற்றூர். நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருக்கிறார் தலைவர். மணி என்பவர் காரை ஓட்டி வருகிறார். ஆறுமுகம், சிவசாமிபோல் இவர்களும் திறமைமிக்க டிரைவர்கள். இவர்கள் வெறும் டிரைவர்கள் மட்டுமல்ல. தலைவரின் தாயாகவும் சகோதரியாகவும இருந்து கண்ணை இமை காப்பதுபோலக் காத்தவர்கள்.
அன்று தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டதிலிருந்தே டிரைவர் மணியை பெருந்தலைவர் கவனித்துக்கொண்டே வந்தார். இன்று இவன் வழக்கம்போல் இல்லை. ஏதோ மாறுதல் தெரிகிறது என்பதைக் கவனித்து அவர் காரை நிறுத்தப்பா என்றார். பிறகு உனக்கு என்ன செய்கிறது என்று கேட்டார். “அய்யா! வயிறு கோளாறு செய்கிறது. குமட்டிக்கொண்டு வருகிறது.” என்ற டிரைவர் காரை விட்டு இறங்கிப்போய் குபீரென்று வாந்தி எடுத்தார். பித்தக் கோளாறு அதிகமாக கண் விழிக்காதேன்னா கேட்கிறியா என்று செல்லமாகக் கடிந்துகொண்டார் தலைவர். முகத்தைக் கழுவிக்கொள். காற்றாட அப்படியே கொஞ்சநேரம் இரு. நிகழ்ச்சிக்குக் கொஞ்சம் தாமதமாகக்கூட போலாம் என்று கனிவாகச்சொன்னார்.
நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது தலைவருக்கு நிறைய ஆரஞ்சப் பழங்கள் கிடைத்திருந்தன. அவைகளை மணியிடம் கொடுத்து வேறு எதையும் சாப்பிடாதே. ஆரஞ்சுப் பழத்தை உரித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக்கொள் என்று கனிவோடு கூறினார். இப்படி பணியாளரையும் மதிக்கும் பண்பு மிக்கவர் பெருந்தலைவர். ஏழைகளை மதிப்பவர்களே இறைவனால் மதிக்கப் படுகிறார்கள்.