59
குருபக்தி என்பது மிகவும் முக்கியமானது. அது இப்போது குறைந்து வருவதை அறிவோம். அதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தால் ஓர் அடிப்படை உண்மை புரியும். முன்பெல்லாம் குருகுல வாசத்தில் குரு அமர்ந்திருப்பார். மாணவர்கள் நின்று கொண்டு பாடம் கேட்பார்கள். அதனால் மரியாதை இருந்தது.இப்போது கல்விக் கூடங்களில் ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார். மாணவர்கள் உட்கார்ந்து பாடம் கேட்கிறார்கள். அதனால் மரியாதை போய்விட்டது. அதனால்தான் இப்படியொரு சம்பவம் நடந்தது. ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரை மதியச் சாப்பாட்டுக்குத் தன் வீட்டுக்கு வரும்படி அன்போடு அழைத்தார். அதற்கு ஆசிரியர் காரணம் கேட்டார். அதற்கு பையன் சொன்ன பதில், “வேறு ஒண்ணுமில்ல சரி எங்க அப்பா நேத்து ஒரு அல்சேஷன் நாய் வாங்கி வந்தார். அந்நியர் வந்தால் கடிச்சுக் குதறும்னார். அது உண்மையான்னு பாக்கத்தான் உங்களை கூப்பிடுகிறேன்.”
பெருந்தலைவர் அரசியலில் பலருக்கு குருவாக இருந்தவர். அரசியல் நுணுக்கங்களை அவரிடம் படித்தவர்கள் அநேகர் பேர். அவருக்கே குருவாக இருந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. தன்னுடைய குருநாதரிடம் அளவில்லாத பக்தி கொண்டிருந்தார் பெருந்தலைவர். எல்லா அரசியல் நுணுக்கங்களையும் ஒரு சீடனுக்கு உரிய பணிவோடு அவரிடமிருந்து அறிந்துகொண்டார். அது போலவே காமராசர் காட்டும் அரசியல் சாதுர்யததைக் கண்டு வியந்து போனார் குருநாதர். அதனால்தான் வாய்ப்பு வரும்போது தனக்குக் கிடைக்க வேண்டிய பதவியைக் கூட காமராசருக்கு விட்டுக் கொடுத்தார் சத்தியமூர்த்தி. 1940ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவிக்கு மிகுந்த போட்டியிருந்தது. சத்தியமூர்த்தி தான் போட்டியிலிருந்து விலகி காமராசரைத் தேர்தலில் நிற்க வைத்தார். அதோடு மட்டுமல்ல. அவரது வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார். வெற்றியும் தேடித் தந்தார். திருச்சியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் வைத்து காமராசரை மக்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசும்போது சத்தியமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டார்.
காமராசர் ஆர்வம் மிக்கவர், சிறந்த தொண்டர், ஆற்றல் மிகுந்தவர். நேர்மையானவர். ஒரு காலத்தில் இவர் சென்னைக் கோட்டையில் முதல்வராக அமரப்போகிறார். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ் வருட பிறப்பன்று சத்தியமூர்த்தியின் வாக்கு பலித்தது. தனது குருநாதரிடம் தான் கொண்டிருந்த பக்தியை மிகச் சரியாக வெளிக்காட்டினார் பெருந்தலைவர். முதல்வராக பதவியேற்றதும் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நேராக சத்தியமூர்த்தியின் இல்லம் சென்றார். அப்போது சத்தியமூர்த்தி இயற்கை எய்தியிருந்தார். அவரது துணைவியாரிடம் ஆசி பெற்றுத் திரும்பினார் பெருந்தலைவர்.
குருபக்தி கொண்டவர்களும் குருஅருள் பெற்றவர்களும் உயர்வு பெறுவர் என்பதற்குப் பெருந்தலைவரின் வாழ்க்கையே சான்று.