61
நாட்டுப்பற்று ஒன்றையே மூச்சாக நினைத்து வாழ்ந்தவர் பெருந்தலைவர். நாட்டையே வீடாக்கி வாழ்ந்தவர் அவர்; தாயைக் காட்டிலும் தாய் நாட்டின் மீது பாசம் வைத்தவர். அவரது அன்னையார் தனது மகனைப் பற்றிப் புலம்பிய புலம்பல் நம் மனதை உருக வைக்கும். அவன் நாட்டுக்காக உழைக்கிறது எனக்கு சந்தோஷம்தான். ஊருக்கு ராஜான்னாலும் தாய்க்குப் பிள்ளைதானே. ஆனா இங்க வந்தா ஒரு நிமிஷம்தான் நிற்பான். வீட்டுக்குள்ளே வரும்போதே என்னம்மா சவுக்கியமாம்னான். அப்படிக்கேட்டுக்கிட்டே உள்ள வருவானா. வந்த சுவட்டோட தெருப்பக்கமா திரும்பி நான் வர்றேம்மான்னு புறப்பட்டு விடுவான். ஆற அமர அம்மா கூட பேசக்கூட அவனுக்கு நேரமில்ல. அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடனும்னு எவ்வளவோ ஆசைப்பட்டேன். கடைசி வரைக்கும் அந்த ஆசை நிறைவேறல.
தன்னையும் தன் குடும்பத்தாரையும் நினையாது நாட்டுக்கென்றே தன்னை அர்ப்பணித்தவர் அவர். அவரது பிறந்த நாள் விழாவில் பாடப்பட்ட கவிதை ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.
காங்கிரசை ஏற்றார்
ராட்டையிலே நூற்றார்
அன்னையாரைப் பேணவில்லை
அன்புத் தங்கை பார்க்கவில்லை
என்னுயிரே மக்களென்று வாழ்ந்து விட்டார்
பாரத நாட்டின் மிக உயர்ந்த பட்டமான பாரத ரத்னா பட்டம் பெற்றவர் காமராசர். விருதுபட்டியில் ஒரு வியாபாரியின் மகனாகப் பிறந்தவர் நிகழ்த்திய சாதனை இது. இதற்குக் காரணம் அவருடைய நாட்டுப் பற்றே.
பால் புளிப்பினும்
பகல் இருளினும்
நால்வகை வேத
நெறி மாறினும்
தான் திரியாச்சுற்றம்
கொள்கைப் பிடிப்பாளர் பற்றிப் புறநானூறு கூறும் படப்பிடிப்பு இது. இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர்.