63
டெல்லிக்கு வேலைக்குப் போன ஒருவன். தன் தாயாருக்காக 500 ரூபாய்க்குப் புடவை வாங்கி அனுப்பினான். உண்மையான விலையை எழுதினால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டாயே என்று அம்மா திட்டுவார்கள் என்று பயந்து புடவையின் விலை 300 ரூபாய் என்று எழுதினான். அடுத்த வாரம் அவனது அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது. நீ அனுப்பிய புடவையை 400 ரூபாய்க்கு விற்று விட்டேன். அதற்கு இங்கு நல்ல டிமாண்ட உள்ளது. இன்னும் பத்துப் புடவைகளை உடனே அனுப்பவும். இப்படி எதையும் லாபமாக்கத் துடிப்பது பொதுவான மனித இயல்பு. இதிலிருந்து மாறுபட்டு நிற்பவர்கள் ஒரு சிலரே. அதில் பெருந்தலைவர் காமராசர் முதன்மையானவர்.
ஆராய்ச்சி மணி கட்டி ஆண்ட முற்காலத் தலைவர்கள் போலவே ஏழைகளின் குறைகளைக் கேட்டறிய எப்போதும் தன் வீட்டுக் கதவைத் திறந்து வைத்திருந்தார் கர்ம வீரர் காமராசர். காண வருவோரை உடன் இருப்பவர் தடுத்தால் அவர்களைக் கண்டித்து, “கந்தா அவரை வர விடுன்னேன். அவர் வரட்டுன்னேன்.” என்று கூறி குறை கேட்க முந்தும் கருணைத் தலைவராகவே அவர் விளங்கினார். இது குறித்து நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர் சோமயாஜுலு கூறுகிறார்.
“இவரின் இல்லமே ஒரு தேசிய இல்லம் தான். முன்புறக் கதவுகள் சாத்தப்படுவதே இல்லை ஒரு தலைவர் இறந்த பிறகே அவர் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடமையாக்குவார்கள். ஆனால் காமராசரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது உள்ளமும் இல்லமும் நாட்டுடமையாகியிருந்தன.”
பெருந்தலைவர் கூறுகிறார், “கோடி வைத்திருப்பவனைக் கோடீஸ்வரன் என்று புகழ்கிறார்கள். பணம் படைத்தவன் என்பதற்காக ஒருவனை கடவுளாக்கி விடும் இந்தப் புத்தி நன்மையைத் தராது.”
தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த ஒரு சமயம் அவ்விடத்தைப் பார்வையிட அதிகாரிகளுடன் சென்றார் பெருந்தலைவர். அதிகாரிகள் தடுத்தும் தண்ணீரில் இறங்கி வெகுதூரம் சென்று விட்டார். ஒரு முதல்வரா இப்படிச் செய்வது? சம்பிரதாயம் என்னாவது என்று அதிகாரிகள் கையைப் பிசைந்தனர்.
இதை நேரில் பார்த்த சவுந்தரபாண்டியன் என்பவர் ஒரு பேட்டியில் கூறுகிறார்.
“பேசிக்கொண்டேயிருந்த பெருந்தலைவர் திடீரென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மேல் துண்டை எடுத்து முண்டாசு கட்டிக்கொண்டு மட மட வென்று தண்ணீருக்குள் இறங்கி விட்டார்.”
இப்படிப்பட்ட கடமை வீரர் பெருந்தலைவர்.