65
நீண்ட நாளைக்குப் பிறகு இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள்.
“வாப்பா உன் பையன் எப்படி இருக்கிறான்?” என்று நண்பர் கேட்க,
“அவன் பெரிய குடிகாரன். ஊர்லே ரவுடிகளோட தொடர்பு, அடிதடி, சும்மாவே இருக்க மாட்டான்”
“திருத்த முயற்சிக்கிறது தானே?”
“எவ்வளவோ முயற்சித்தும் முடியலே. எந்த வேலையில் சேர்த்தாலும் நீடிக்க மாட்டான். அதான் நானே தண்ணி தெளிச்சி விட்டுட்டேன்.”
“பரவாயில்லை. இப்ப எந்த கட்சியிலே எம்.எல்ஏ.வா இருக்கிறார்” என்றார்.
“எந்தக் கட்சி ஆட்சியிலே இருக்கோ? அதுலேதான் இருப்பான்” என்றார்.
இப்படி சுயலாபத்துக்காக அரசியலில் இருப்பவர்கள் பலர். ஆனால் எந்தக் கட்சிக்காரர் என்றாலும் அவர்களிடமும் அன்பு செலுத்துபவர் தலைவர்.
சென்னை–தாம்பரம் குடிசைவாசிகளுக்குப் பட்டா தரவேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம் போராடிக்கொண்டிருந்தார். அப்போது காமராசர் முதலமைச்சராக இருந்தார். தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைக்க பெருந்தலைவர் சென்றார். அந்த வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. காரை நிறுத்தச்சொல்லி ஜீவாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அது ஒரு கூரை பிய்ந்துபோன குடிசை வீடு.
அந்த நேரத்தில் தலைவரை ஜீவா எதிர்பார்க்கவில்லை. “என்ன இந்த வீட்டில் இருக்கிறீர்களே” என்று கண்கலங்கினார்தலைவர். “எல்லாரையும் போலத்தானே நானும்” என்றார் ஜீவா.
“ஆரம்பப் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைக்க வந்தேன். வழியில் உங்கள் வீடு இருந்ததால் உங்களையும் பார்க்க வந்தேன்” என்ற தலைவர் அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவாதான் என்பதைத் தெரிந்து கொண்டு அவரையும் தன்னுடன் விழாவுக்கு அழைத்துச் சென்றார்.
சிறிது காலத்தில் ஜீவாவின் துணைவியாருக்கு ஒரு உத்தியோகம் கிடைத்தது. அது பெருந்தலைவரால்தான் கிடைத்தது என்பது பின்னால் தெரியவந்தது. பிறகு ஜீவா ஒரு நல்ல வீட்டில் இருக்க வேண்டும என விரும்பிய பெருந்தலைவர் அதற்காகவும் உதவி செய்தார். நோய்வாய்ப்பட்டு சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்து ஜீவா கடைசியாக சொன்ன வார்த்தை காமராசருக்கு டெலிபோன் பண்ணுங்க என்பது தான்.
உயிர் பிரியும் வேளையில் கூட ஜீவாவின் உள்ளத்தில் பெருந்தலைவர் இருந்தார். நாட்டை சமதர்மப் பாதையில் நடத்திச்செல்கிறார் என்பதும் அவரது மனித நேயமும் ஜீவாவின் நெஞ்சில் பெருந்தலைவரை நிறுத்தியதில் வியப்பில்லை.