70
சென்னை நகரை ஒட்டி மனை வாங்கி வீடு கட்டி வாழ வேண்டும் என்பது ஒருவருடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது. பத்திரிக்கையில் அப்போது ஒரு விளம்பரம் வந்தது. அம்போ ரியல் எஸ்டேட், முப்பது நிமிட பயணம், நகரை ஒட்டிய வீட்டு மனை, குடிநீர், மின்சார வசதி, பள்ளி, கல்லூரி, வெளியூர் பஸ் வசதி, மனை வாங்குவோருக்கு குலுக்கல்முறையில் ஹீரோ ஹோண்டா, மாருதிக்கார்– இந்த விளம்பரம் அவரை ஈர்த்தது.
ஒரு ஞாயிறன்று அந்த ரியல் எஸ்டேட் வேனில் ஏறி மனையைப் பார்க்கச்சென்றார். வண்டி விழுப்புரம், கடலூர் பண்ருட்டி, திண்டிவனம், நெய்வேலி, கும்பகோணம் என போய்க்கொண்டே இருந்தது. கடைசியில் தஞ்சாவூர் தாண்டி, புதுக்கோட்டை பகுதியில் ஒரு அந்திரான வனப்பகுதி போன்ற திடலில் அரோகரா நகர் பகுதியைக் காட்டினார். “சார் இதுரொம்ப தூரமாச்சே” என்று இவர் கேட்க. “என்ன சார் தூரம் இது பக்கத்துலே தான் விமான நிலையம் வரப்போகுது. ப்ளைட்ல ஏறினா 30 நிமிடத்துலே சென்னை வந்துடலாம்” என்றார் ரியல் எஸ்டேட்காரர்.
இப்படிப்பட்ட மோசடிக்காரர்கள் வாழும் உலகில் தன்னலம் சிறிதும் இன்றிப் பிறர் நலத்துக்காவே சேவை செய்த காமராசருக்குச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
1961ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம்தேதி பெருந்தலைவர் திருவுருவச் சிலையை நேருஜி திறந்து வைத்தார். விழாவிற்கு தலைமை வகித்த சென்னை நகர மேயர், “தன்னலமற்ற தியாகத் தலைவர், மக்களின் மன இருளைப்போக்க கல்வி எனும் விளக்கேற்றியவர்” என்று பாராட்டினார்.
சிலையைத்திறக்க வந்த நேரு, “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை அமைப்பதை நான் விரும்புவதில்லை. மறைந்த பிறகு மரியாதை செலுத்துவதே சிறந்தது என நினைப்பவன் நான். ஆனால் காமராசர் செயலில் தன்னை மறந்து ஈடுபடும் ஆற்றலுடையவர். மக்களிடமிருந்து தோன்றிய தலைவர் எனது நண்பர் என்ற முறையில் அவரது சிலையை திறந்து வைக்கிறேன்” என்று கூறினார்.
48 ஆண்டுகளுக்கு முன் நேருஜி சென்னை வந்தபோது சத்தியமூர்த்தியின் வீட்டில் தங்கினார். அலைந்த களைப்பில் இரவில் படுத்துத் தூங்க முயன்றார். ஆனால் அவரைக் கண் மூடவிடாமல் வராண்டாவில் தூங்கக் கொண்டிருந்த இளைஞனின் குறட்டை சத்தம் கெடுத்தது. கோபம் கொண்ட நேருஜி “சத்தியமூர்த்தி இதோ இந்த பையனை சென்னையை விட்டே வெளியேற்று, அல்லது எனது படுக்கையைத் தூக்கி கடற்கரையில் போடு” என்றார். அன்று அவ்வாறு குறட்டை விட்டுத் தூங்கிய காமராசரை வெளியேறச்சொன்ன நேருஜிதான் அவரது திருவுருவச் சிலையைப் பின்னாளில் மகிழ்ச்சியோடு திறந்து வைத்தார்.