71
ஓர் அமெரிக்கத்தளபதி பாகிஸ்தான் இராணுவத் தளத்தைப் பார்வையிடச்சென்றார். அவருக்குத் துணையாய் வந்த பாகிஸ்தானி, தளபதிக்கு மொழிபெயர்ப்பு ஆளாக மிக இங்கிதமாக நடந்து கொண்டார்.
ஒரு இடத்தில் மிக நீளமாக நகைச்சுவையை அமெரிக்கர் சொன்னார். அதையொட்டி பாகிஸ்தானி உருதுவில் ஒரு சில வார்த்தைகள்பேசியவுடன் எல்லோரும் கலகலவெனச் சிரித்தனர்.
அமெரிக்கர் “நான் மிக நீளமாகச்சொன்ன நகைச்சுவை. இவ்வளவு சுருக்கமாக எப்படிச்சொன்னீர்கள்” என்று ஆச்சரியப்பட்டார். அதற்கு மொழிபெயர்ப்பாளர் சிரித்துக்கொண்டே “நீங்கள்சொன்ன நகைச்சுவை மிக நீளமாக இருந்தது. அதை மொழிபெயர்க்க முடியவில்லை. எனவே அமெரிக்க துரை இப்போது ஒரு நகைச்சுவை சொல்லியிருக்கிறார். எல்லோரும் சிரியுங்கள் என்றேன்” என்றார்.
மொழிபெயர்ப்பினால் இப்படிப்பட்ட சிக்கல்கள் வருவது உண்டு. பெருந்தலைவர் எளிய, இனிய தமிழில உணர்ச்சி பொங்க பேசக் கூடியவர். பிற மாநிலங்களுக்கு செல்லும்போது அந்தந்த மொழித் தலைவர்கள் பேசினால் கூட்டத்தார் போதும், போதும் என்று கூச்சலிடுவார்கள். காமராசரை மட்டும் அதிக நேரம் பேசச் சொல்வார்கள். இதன் காரணத்தைக் கேட்ட போது, இவர் எங்களுக்குப் புரியாத தமிழ் மொழியில்பேசினாலும் அந்த உணர்வு எங்களுக்குப் புரிகிறது என்றார்களாம்.
தலைவர் காமராசர் ஜனவரி 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு லட்சோப லட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க 45 கோடி இந்தியர்களின் வறுமையை ஓட்ட முழங்கினார். மகத மாமன்னன் அசோகனின் புது மண்ணான புவனேஷ்வரத்தில் இல்லாமை, கல்லாமை, அறியாமை, பிணி, ஏற்றத்தாழ்வு நீங்க காமராசர் முழங்கினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையின் நிர்வாகத்தை நடத்திச் செல்லும்பெரும் பொறுப்பை சாதாரணத் தொண்டனான எனக்கு அளித்திருக்கிறீர்கள். உங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ற வகையில் நான் என்னுடைய கடமைகளை நிறைவேற்ற உங்கள் மனப்பூர்வமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
சமதர்ம சமுதாயமே நமது லட்சியமாக இருப்பதால், பொருளாதார பலம் சிலரிடம் குவிவதையும் அது பரம்பரையாகத் தொடர்வதையும் தடுக்க வேண்டும்.
இந்நாட்டின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும், மக்கள் தங்களுக்கு என்று அமைத்துக்கொண்டிருக்கும் சமதர்ம சமுதாய லட்சியத்தை நிறைவேற்றி வைப்பவையா என்று நாம் கவனிக்க வேண்டும். ஏக போகத் தொழில் வளர்வதைத் தடுக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பகுதிகளை வளர்த்துத் தொழில்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற பெருந்தலைவர், எல்லா மாநிலங்களுமே செகண்டரிக் கல்வி வரையில் இலவசக் கல்வி முறையைப் படிப்படியாக அமுலாக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.