72
ஒரு குருநாதர் இருந்தார். அவருகிட்டே இரண்டு சீடர்கள் இருந்தாங்க. ரெண்டு பேரும் ஆரம்பத்துலே ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லாதான் பழகிட்டிருந்தாங்க. திடீர்னு ரெண்டு பேருலே ஒருத்தருக்கு பொறாமைக் குணம் வளர ஆரம்பிச்சது.
குருகிட்டே தான் மட்டும் நல்லபேர் வாங்கிடணும். தன் நண்பர்கெட்ட பேர் வாங்கணும் என்ற எண்ணம் வந்திடுச்சி. என்ன பண்ணலாம்னு யோசிச்சான்.
ஒருநாள் விடியற்காலையிலே எழுந்திரிச்சான். நேரே குருகிட்ட போயி நின்னான். “குருவே! என்னைப் பாருங்க நான் எவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சி, குளிச்சி முடிச்சிட்டு உங்களை வணங்கிறதுக்காக வந்து நிக்கிறேன். ஆனா அவன் இன்னமும் கண்ணு முழிக்கலே. இன்னும் தூங்கிக்கிட்டே இருக்கான்” அப்படின்னார்.
குருநாதர் பர்த்தார். “அப்படியா? அப்படின்னா நீயும் கூட இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தா நல்லா இருக்குமே“ன்னார் பொறுமையா.
என்ன இது? நாம இவ்வளவு தீவிரமா ஒரு விஷயத்தை சொல்றோம். அதுக்கு நம்ம குருநாதர்ரொம்ப பொறுமையா இப்படி சொல்றாரேன்னு நினைச்சான்.
குருநாதர் சொன்னர் “ஆமாம்பா நீயும் தூங்கிட்டு இருந்திருந்தா அடுத்தவனைப் பற்றிக் குறை சொல்றதுக்கு இங்கே வந்திருக்க மாட்டே இல்லையா? அதனாலே அப்படி சொன்னேன்“னார். இந்தப் பொறாமைக் குணம் எதுவுமில்லாமல் உரியவருக்கே உரிய மரியாதை சென்று சேர வேண்டும் என்று நினைத்தவர் பெருந்தலைவர்.
1952ஆம் ஆண்டின் சென்னை மாகாண அரசின் வருமானம் 45 கோடி ரூபாய் மட்டும் தான். திரு.சி.சுப்பிரமணியம் அன்றைய நிதியமைச்சராக இருந்தார். அவர் அந்த ஆண்டில் தாக்கல் செய்த பட்ஜெட் தொகை ரூ.99 கோடி.
அப்போதைய சென்னை ராஜ்ஜியத்தில் மலை நாட்டு நீர்வளம் இருந்தும் ஆங்கிலேய அரசு நாட்டின் மின் உற்பத்தியில் அக்கறை காட்டவில்லை. பைகாரா, பாபநாசம் என்ற இரண்டு நீர்வழி மின்னுற்பத்தி நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
அந்நிலையில் நீலகிரி மலை மீது திட்டமிட்ட குந்தா மின் திட்டம் நிறைவேற்றப்படுமானால் நாட்டின் மின் பற்றாக்குறை நீங்கும் என அரசின் மின்பொறி வல்லுநர்கள் திட்டம் தந்தனர். அதற்குத் தேவையான தொகையோ முப்பது கோடி ரூபாய். ஆனாலும் நிதியமைச்சர் மலைக்கவில்லை. முதல்வர் ராஜாஜியின் அனுமதியோடு அன்றைய நடுவண் அரசின் நிதியமைச்சர் திரு.சி.டி.தேஷ்முக்கின் உதவியை நாடினார்.
திரு.சி.டி.தேஷ்முக்கின் முயற்சிக்குக் கனடா நாடு நேசக்கரம் நீட்டியது. சுமார் மூன்று மில்லியன் டாலர்கள் தர முன் வந்தது. குந்தா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு சேவைகள் தொடங்கி விட்டன. அதே நேரம் நாட்டில் அரசியல் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலக திரு.காமராசர் முதல்வரானார். முந்திய அமைச்சரவையின்பொறுப்பில் இருந்த திரு.தேஷ்முக் பதவி விலகி விட்டார்.
அந்தச் சூழலில் குந்தா திட்டம் வளர்ந்து முற்றுப்பெற்று விட்டது. இப்போது அதை யார் திறந்து வைப்பது? என்ற கேள்வி எழுந்தது. நாட்டின் முதல்வர் காமராசர். திட்டத்துக்கு உதவியவர் எந்தப் பதவியிலும் இல்லாத தேஷ்முக்.
வேறு யாராக இருந்தாலும் அந்தப் பெருமை பதவியில் இருக்கும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் காமராசரோ தேஷ்முக் அவர்கள் பதவியில் இல்லாவிட்டாலும் அவரே திறக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். சம்மதிக்க மறுத்த தேஷ்முக்கையும், திரு.சி.எஸ்.மூலம் சம்மதிக்க வைத்துப் பின் 1956ஆம் ஆண்டு அவரே திறந்தார்.
இப்படி தகுதியுடையோர்களுக்கே முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதை மதித்துப் பின்பற்றும் உயர்ந்த குணமுடையவர் பெருந்தலைவர் காமராசர்.