73
ஓரிடத்தில் ஒரு ஆங்கிலேயன், ஒரு பிரெஞ்சுக்காரன், ஒரு டச்சுக்காரன் மூவரும் பயணம் செய்தனர். அங்கே ஒரு கல்லறையைக் காட்டிய கவிஞர் “இவர் மிகப்பெரிய கவிஞர். ஆனால் வாழ்ந்த காலத்தில் வறுமையில் வாடியவர்” என்றார்.
அடடா ஒரு கவிஞர் வறுமையில் வாடலாமா என உணர்ச்சி வசப்பட்ட பிரெஞ்சுக்காரன் தனது பர்ஸை எடுத்து நூறு டாலர் நோட்டை வைத்து அஞ்சலி செய்தான். அதைப் பார்த்த ஆங்கிலேயன் அவனை விட நான் குறைந்தவனா என்றெண்ணி இருநூறு டாலர் நோட்டை வைத்து அஞ்சலி செலுத்தினான்.
இதைப் பார்த்த டச்சுக்காரன் “ச்சே! கவிஞருக்கு நீங்கள் செலுத்துகின்ற அஞ்சலியின் லட்சணம் இதுதானா? நான் ஆயிரம் டாலர் தரப்போகிறேன். எல்லாருக்கும் சேர்த்து செக்காக எழுதி விடுகிறேன். என்று கூறி விட்டு 1300 டாலருக்கும் செக்கை எழுதி வைத்து விட்டு அவர்களது முன்னூறு டாலர் நோட்டுகளை எடுத்துச் சென்றான்.
இப்படி அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் வாழும் நாட்டில் பிறர் நலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு வாழ்ந்தவர் தலைவர்.
ஒருநாள் பெருந்தலைவரைப் பார்க்க ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி வந்தார். தன் இல்லத் திருமணத்துக்கான அழைப்பிதழ் எடுத்து வந்திருந்தார். பெருந்தலைவர் அவரை அழைத்து அமரச்செய்து நலம் விசாரித்தார். அதே நேரம் அவருடைய ஏழ்மையினையும் புரிந்து கொண்டார்.
திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி வாழ்த்துக்களைக் கூறி அனுப்பினார். வந்தவர் மனம் வருந்தி விடைபெற்றார்.
“காமராஜ் இன்று பெரிய தலைவராகி விட்டார். அந்தக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரே சிறையில் அடைபட்டோம். இன்று மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஏழையான நம் இல்லத்துக்கு வர அவர் அந்தஸ்து இடம் தருமா” என்றெண்ணியபடி ஊர் போய்ச் சேர்ந்தார்.
விழா நாளும் வந்தது. அந்தச் சிற்றூரில் தன் பொருளாதார வசதிக்கேற்ப மிக எளிமையாக விழாவை நடத்திக் கொண்டிருந்தார்.
திடீரென வீதியில் பரபரப்பு, ஆரவார ஒலி சத்தம் கேட்டுத் தியாகி வெளியே வந்து பார்த்தார். அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. வந்து நின்ற காரிலிருந்து புன்னகை பூத்த முகத்தோடு காமராசர் இறங்கினார். தியாகியின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
தியாகிக்கோ கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவரைத் தட்டிக்கொடுத்த தலைவர், “வா விழா மேடைக்குப்போவோம்” என்று கூறி உள்ளே சென்று மணமக்களை ஆசீர்வதித்தார்.
அவரை அமரச்செய்ய சரியான ஆசனம் கூட இல்லையே என்று தியாகி ஏக்கத்தோடு எண்ணமிட்டார்.
அப்போது காமராசர், “நீ அழைப்பிதழ் கொடுக்க வந்த அன்றே நான் திருமணத்துக்கு வர்றதை முடிவு பண்ணிட்டேன். ஆனா நான் அப்பவே வர்றதாச்சொல்லியிருந்தா முதலமைச்சரே வர்றாருன்னு சொல்லி கடனை வாங்கித் தடபுடலாப் பண்ணியிருப்பே. உன்னை மேலும் கடன்காரனாக்க நான் விரும்பல. இப்ப வந்துட்டேன். உனக்கு திருப்திதானே” என்றார்.
கூடியிருந்த கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்தார் தியாகி. மெய்சிலிர்த்தது.
“சரி வரட்டுமா. மேற்கொண்டு காரியத்தைக் கவனி” என்று சொல்லிவிட்டு விடை பெற்றார் தலைவர்.