74
எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் பக்தி மனிதருக்கு அவசியம். ஆனா எந்த இடத்திலேயும மனதாரக் கும்பிட்டாப் போதும் என்ற எண்ணம் வேண்டும்.
தலைவர் காமராசருக்கு இறைபக்தி உண்டு. ஆனால் அதனைப் புறச்சின்னங்கள் மூலமாகவோ, ஆரவாரக்கோவில் தரிசனங்கள் மூலமோ அவர்வெளிப்படுத்தியது இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேச உரிமைக்காக கேரளத்தில்பெரியார் நடத்திய சத்தியாக்கிரகத்தில் “வைக்கம்” என்ற இடத்தில் கலந்து கொண்டார்.
1939இல் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் திரு.வைத்தியநாதய்யர் அழைத்துச் சென்றபோது பெருந்தலைவரும், திரு.சத்தியமூர்த்தி அவர்களும் உடன் சென்றனர்.
ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர், “இந்த நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர்த்தப்பட வேண்டும். உணவு, உடை, வீடு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் தரப்பட வேண்டும். அதை நிறைவேற்றும் வரை ஓய மாட்டேன். கடவுளே இதை எதிர்த்துக் குறுக்கே வந்தாலும், “சற்றே எட்டி நில்லுங்கள் என்று கூறுவேன்” என்று உணர்ச்சி வசப்பட்டுப்பேசினார். இறைபக்தியை விட மக்கள் உரிமையே பெரிது என்று காமராசர் கருதினார்.
தமிழ்நாட்டு ஆலயங்கள் மற்ற மாநில ஆலயங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. இராமேஸ்வரம் கோவில், மீனாட்சியம்மன்கோவில், ஸ்ரீரங்கம் கோவில், பழனி முருகன்கோவில், சிதம்பரம்கோவில் போன்றவை நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்கவை.
ஆனால் தமிழக மக்களுக்குத் தம் கோவில் பெருமை தெரிவதில்லை. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் திருமலை வெங்கடேசப்பெருமாளுக்கும் தருகின்ற மரியாதையை நம் தமிழகத் தெய்வங்களுக்குத் தருவதில்லை.
இந்த பக்தி விஷயம் பொருளாதார ரீதியாகவும், தமிழகத்தைப் பாதித்து வருவதாகும். திருப்பதி உண்டியலின் ஓராண்டு வருமானம் ரூ.235 கோடி. அதே நேரம் அதிக வருவாய் தரும் தமிழகக் கோவிலான பழனி உண்டியல் வருவாய் ரூ.20 கோடி மட்டும் தான்.
காமராசர் காலத்திலும் இந்த நிலை இருந்தது. திருப்பதி வருமானத்தில் நூற்றில் ஒரு பங்கே திருவரங்கத்துக்குக் கிடைத்தது. இதை நினைத்து ஆதங்கப்பட்ட தலைவர்
“தமிழ்நாட்டுப் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மிக அதிக அளவில் திருப்பதி கோவில் உண்டியலில் செலுத்துகிறார்கள். நம் நாட்டு ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு எந்த விதத்திலும் குறைந்தது கிடையாது. உங்கள் காணிக்கைகளை ஸ்ரீரெங்கநாதர் உண்டியலில் போட்டால் அது நம்ப நாட்டுக்குப் பெரிய பயனாக இருக்கும். மக்களுக்குச்செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்குப் பயன்படுமே “நம்ம சாமியும் பெரிய சாமிதான்” என்பதே தலைவரின் வேண்டுகோளாக இருந்தது.
ஆனால் இந்த நியாயமான வேண்டுகோள் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இப்போது ஆந்திர திருப்பதிக்கு அடுத்தபடியாகக் கேரள சபரிமலைக்குக் கொண்டுபோய் காணிக்கைகளைக் குவிக்கிறார்கள்.