77
1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காமராசர் இந்தியா முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் போருளாதார நிலையை எடுத்துச்சொன்னார். தலைவர் அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இருந்த போதுதான் அசோக் மேத்தா காங்கிரசுக்கு வந்தார். தேர்தலில் பெருந்தலைவர் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.
பிரச்சாரத்துக்காக தலைவர் திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கார் விபத்து ஏற்பட்டு அதில் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டது. எல்லோரும் திருநெல்வேலி நோக்கிச்சென்று பார்த்தபோது தலைவர் தேர்தல் நிலைமை பற்றியே விசாரித்தார்.
தமிழ்நாட்டில் உருவாகியிருந்த கடுமையான அரிசிப் பஞ்சம் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. விருதுநகர் தொகுதியில் சுமார் 500 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது.
இந்தத் தேர்தல் முடிவு இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கியது. காமராசர் பெற்ற முதலும் கடைசியுமான தோல்வி கண்டு இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
“காங்கிரசுக்குக் கிடைத்த தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை நான் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன். மக்களின் நம்பிக்கைகளைப் பெற மீண்டும் நாம் கடுமையாக உழைப்போம்” என்று பெருந்தலைவர் தோல்வியைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்.
“காமராசர் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது” என்று தமிழகத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் சி.என்.அண்ணாத்துரையே கூறினார். நேராக தன் நண்பர்களுடன் காமராசர் வீட்டுக்கு வந்து அவர் ஆசியும் பெற்றார். அரசியலில் எதிர் அணியில் உள்ளவர்களையும் கவரக் கூடியவர் காமராசர்.