79
ஓவியர் ரவிவர்மா அவர்களுக்கு கவர்னர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. கவர்னர் தலைமையேற்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு கவர்னரே கைப்பட கடிதம் எழுதியிருந்தார். அந்த அழைப்பை ஏற்க மறுத்து ரவிவர்மா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். “தன்னுடைய குதிரை வண்டியோட்டி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று எழுதினார். கவர்னர் நிகழ்ச்சியை விட அது அவ்வளவு முக்கியமா? என்று அவரிடம்கேட்டபோது கவர்னர் நிகழ்ச்சி ஆடம்பரமானது பெருமக்கள் நிறைய பேர் கலந்து கொள்வார்கள். எனவே நான் வரவேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் இந்த நோயாளியை நான் அருகிலிருந்து கவனித்தால் தான்அவனைக் காப்பாற்ற முடியும். எனக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும் என்றாராம். மக்களுக்காக வாழ்பவர்களின் நெஞ்சில் இப்படித்தான் எண்ணங்கள் தோன்றும். இப்படி இதோ ஒரு நிகழ்ச்சி.
காந்தியடிகள் தமிழ்நாடு விஜயம் செய்த நேரத்தில் திருப்பத்தூர் அருகே அவரது கார் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கொடிய வெய்யில் வியர்த்துக் கொட்டியது. பெரிய பாறைக் கற்களை சில தொழிலாளிகள் வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள். பாறைகளைச் சிறு துண்டுகளாக உடைத்துக்கொண்டிருந்த ஒருவன் அருகில் காந்தியடிகள் வந்தார்.
இப்படி அழுக்கான வியர்வை நாற்றமுடைய ஆடை அணிந்திருக்கிறாயே குளிப்பது இல்லையா? என்று கேட்டார். “சுவாமி! இருப்பதே ஒன்றுதானே! இதையும் துவைத்துக் காயப்போட்டால் கட்டிக் கொள்ள ஒன்றும் இருக்காதே. அதனாலேதான் நாங்கள் குளிப்பது கூட இல்லை” என்றார் தொழிலாளி.
மதுரைக்கு வந்து சேர்ந்த காந்தியடிகள் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. மனதில் தொழிலாளிகள் நினைவு தான் இருந்தது. படுக்கையை விட்டு எழுந்த அண்ணல் தான் கட்டியிருந்த எட்டு முழ வேட்டியை மூன்றரை முழம்போட்டுக் கிழித்தார். அதை மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு மிச்சமிருந்த துணியை மேலே போர்த்திக் கொண்டார்.
ஏழை இந்தியக் குடிமகனின் இந்த ஆடைதான் இனி எனக்கும் ஆடை என உறுதி கொண்டு அதே கோலத்தில் அன்றைய கூட்டத்தில் மேடை ஏறினார். “காந்தியோ பரம ஏழை சந்நியாசி, கருதும் சுதந்திர ஞான விஸ்வாசி என்று இந்திய மக்கள் பெருமையோடு பாட்டுப் பாட காரணமான வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி தமிழ் மண்ணில் தான் நடந்தது.
பின் காந்தியடிகள் திருநெல்வேலிக்குச் சென்றார். காமராசரும், ஞானம்பிள்ளையும் அந்தக் கூட்டத்துக்குச் சென்றனர். மதுவிலக்கு, பிரம்மச்சரியம், கதர் இயக்கம், சத்தியாக்கிரகம் பற்றிய காந்தியடிகளின் பேச்சுக்கள் காமராசருக்குப் புத்துணர்ச்சியை ஊட்டின. கண் கொட்டாது காமராசர் காந்தியடிகளையே பார்த்தார்.
தமிழகத்து மண்ணில் மதுரையம்பதியில் காந்தியடிகள் பூண்ட எளிய சன்னியாசிக்கோலமும், சுதந்திர தாகம் தீர்வதற்காக மேற்கொண்டு வந்த பிரம்மச்சர்ய வாழ்வும் காமராசர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்தன.