82
ஒரு பெரிய நதியில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு விஞ்ஞானி, ஒரு பண்டிதர், ஒரு வரலாற்றுப்பேராசிரியர் ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். விஞ்ஞானி படகோட்டியைப் பார்த்து “உனக்கு வானிலை சாஸ்திரம் தெரியுமா?” என்று கேட்டார். படகோட்டி தெரியாது என்றார். அடடா உன் வாழ்க்கையில் 25 சதவீதம் வீணாப்போச்சு என்றார் விஞ்ஞானி.
பண்டிதர் படகோட்டியிடம் “உனக்கு இலக்கணம் தெரியுமா” என்று கேட்டார். “தெரியாது” என்றான் படகோட்டி. “அடடா உன் வாழ்க்கையில் 50 சதவீதம் வீண்” என்றார் பண்டிதர்.
வரலாற்றாசிரியர், உனக்கு பழங்கால நாகரிகம் பற்றித் தெரியுமான்னு கேட்டார். அதுக்கும் தெரியாதுன்னான் படகோட்டி. அடடா உன் வாழ்க்கையிலே 75 சதவீதம் வீணாப்போச்சே என்றார் வரலாற்றாசிரியர். அந்த நேரம் படகிலே ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது. படகோட்டி மற்ற மூவரையும் பார்த்து “உங்களுக்கு நீந்தத் தெரியுமா? படகு மூழ்கப்போவுதே“ன்னான். மூவரும் தெரியாதுன்னு அலறினார்கள். உங்க வாழ்க்கை 100 சதவீதம் வீண் என்ற படகோட்டி நீந்தித் தப்பித்தான். பள்ளிப்பாடங்களை விட அனுபவமே சிறந்தது.
“எற்றிற் குரியர் கயவர் ஒன்றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து“
என்று இன்றைய அரசியல் நிலையை அன்றே கூறியவர் வள்ளுவர் பெருமான். அதாவது கயவர்கள் தனக்கு இலாபம் வருகிறது என்றால் நாட்டைக் கூட விற்றுவிடுவார்கள் என்று அரசியல் என்ற அதிகாரத்தில் கூறினார் வள்ளுவர்.
ஆனால் பெருந்தலைவரோ நாட்டு விடுதலையைப் போற்றி நாட்டின் நலத்தையும் வளத்தையும் பெருக்குவதே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர்.
தொழில் வளம்பெருகினால் மக்கள் வளம் பெறுவர் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர் தலைவர்.
கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகு அழுத்த மின் சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் அரசின் சார்பின் நிர்மானித்துத் தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன் வந்தது. இதைத் தமிழகத்தில் தொடங்கத் தலைமையாட்சியரிடம் ஒப்புதல் வாங்கினார் பெருந்தலைவர்.
செக் நாட்டு தொழில் விற்பன்னர்களும், நடுவண் அமைச்சின் துறை அதிகாரிகளும் தமிழகம் வந்தனர். அவர்களுடன் தமிழக அரசுத் துறை அதிகாரிகளும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடத்தைத் தேடி வலம் வந்தனர்.
பரந்த வெளி, தூய நீர், தேவையான மின் சக்தி, போக்குவரத்துக்கான தொடர் வண்டி வசதி இத்தனையுங் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்ட முடியவில்லை. அலைந்து சோர்ந்த செக் நாட்டு விற்பன்னர்கள்தமிழகத்தில் இடம் இல்லை என முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்விப்பட்ட தலைவர் காமராசர் அவர்களையும், உடன் சென்ற நம் அதிகாரிகளையும் அழைத்து விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டு அவர்கள் கேட்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடம் கிடைக்கவில்லை என்றனர்.
ஆனால் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம்தனது சுற்றுப் பயணத்தின்போது அறிந்திருந்த காமராசர், ஒரு கணம் சித்தித்துவிட்டு “திருச்சிக்குக் கிழக்கே காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே அந்த இடத்தைக் காட்டினீர்களா?” என்று தமிழக அதிகாரிகளைக் கேட்டார். அவர்கள் இல்லை என்றனர்.
“ஏன்? அவங்க கேட்கிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே. போய் முதல்லே அந்த இடத்தைக் காட்டிட்டு வாங்க” என்றார்.
என்ன ஆச்சரியம். அந்த இடத்தைப் பார்வையிட்டு செக் நாட்டு வல்லுநர்களுக்கு அந்த இடம் எல்லா வகையிலும் பொருத்தமானதாகத் தோன்றியது.
அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்குத் தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் என்ற பெருமை வாய்ந்த நிறுவனமே அது.
எதிர்க்கட்சிக்காரர்கள் காமராசர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர் இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும்? என்று கிண்டல் செய்வதுண்டு. அப்போது பெருந்தலைவர் அடக்கமாக “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைப் பற்றிக் கூறும் கல்வி என்றால் அதை நான் நன்கு அறிவேன். ஆனால் புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது அது எனக்குத் தேவையுமில்லை” என்றே கூறுவார்.