87
அரசன் ஒருவன் பக்கத்து நாட்டின் மீது படையெடுப்பதற்காக தன் நாட்டு எல்லையோரம் பாசறை அமைத்துத் தங்கியிருந்தான்.
வீரர்களுக்கு எல்லாம் சமையல் நடந்து கொண்டிருந்தது. அரசரிடம் வந்த சமையல்காரன் ஒருவன் “சமைப்பதற்கு உப்புக் குறைவாக உள்ளது. கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.
உடனே அரசன் வீரன் ஒருவனை அழைத்துப் பக்கத்திலுள்ள ஊருக்குச் சென்று விலை கொடுத்து உப்பு வாங்கி வா என்றான்.
அப்போது அருகிலிருந்தவர்கள் “உப்பு தானே சும்மா கேட்டாலே கிடைக்குமே விலைக்கு வாங்க வேண்டுமா” என்று கேட்டார்கள்.
அதற்கு அரசன் “என் அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் ஐந்து கோழி முட்டைகளை இலவசமாக வாங்கினால் என் படையினர் இவ்வூரிலுள்ள கோழிகளை எல்லாம் சுட்டுத்தின்று விடுவார்கள்” என்றான்.
பொதுவாழ்வில் இருப்பவர்கள் சுயலாபத்திற்காக பதவிகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்காக பட்டங்களைக் கூட வெறுத்தவர் காமராசர்.
ஒரு முறை தமிழ்ப் புலமை, சில அரசியல் சாதனை இவற்றுக்காக ஒருவருக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம வழங்கியிருந்தது. பொதுவாக மேன்மக்கள் இப்படிப்பட்ட டாக்டர் பட்டத்தை பொருட்டாக கருதுவதில்லை. பிறரைப் போட அனுமதிக்கவும் மாட்டார்கள். திரு.ஜவஹர்லால் நேருவும் இது போன்ற எண்ணமுடையவர் தான். ஆனால் சில குறைகுடங்கள் தளும்பி வெற்று ஆரவாரம் எழுப்புவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
டாக்டர் பட்டம் பெற்ற அறிஞரை ஒரு விழாவுக்குப்பேச அழைத்திருந்தார்கள். மிகுந்த பொருட்செலவில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. ஆனால் அவர் அன்று அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. விழா ஏற்பாடு செய்த நண்பர் பதறிப்போய் தலைவரின் வீட்டுக்குச் சென்று அழைத்தார். ஆனாலும் அவர் வரவில்லை.
அவர் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற பெயரைப் போடாமல் விளம்பரம் செய்தது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
இன்றைக்கும் இந்த நிலை தொடரத்தான் செய்கிறது. பல நிறுவனங்களிடம் காசுக்கு பட்டம் வாங்கிக் கொள்ளும் போலி மனிதர்கள் நம்மிடையே பலர் உள்ளனர்.
ஆனால் இவர்களிடமிருந்து மாறுபட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவர் பெருந்தலைவர். காமராசருக்கு ஒரு சிறந்த பல்கலக் கழகம் தனது பேரவையைக் கூட்டி இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் நினைத்துப் பாராத வகையில் கல்வித் துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரைத் தேடி வந்தனர். அவர்களிடம் பெருந்தலைவர் “டாக்டர் பட்டமா?எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க? இதெல்லாம் வேண்டாம். நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள்மேதாவிகள் இருக்கிறார்கள். அவங்களைக் கண்டு பிடிச்சு இந்தப் பட்டத்தைக் கொடுங்க, எனக்கு வேண்டாம். நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். போய் வாங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
டாக்டர் ஜன்ஸ்டீன் மகாத்மா காந்திஜியின் மறைவின்போது விடுத்த செய்தி “இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை நமக்கு நம்புவதே கடினம்“
இப்படி சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு அதற்காகத் தன்னை நாடி வந்த பட்டங்களைக் கூட வெறுத்துத் தள்ளிய உயர்ந்த மனிதர் பெருந்தலைவர் காமராசர்.