88
வடநாட்டில் பக்ராநங்கல் அணை கட்டப்பட்டுக்கொண்டிருந்த நேரம். ஏராளமான தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபட்டிருந்தனர். பிரதமராய் இருந்த நேருஜி அவர்கள், அந்த அணையின் கட்டுமானத்தைப் பார்வையிடச்சென்றார். கல் சுமந்து வந்த ஒரு தொழிலாளியைப் பார்த்து, “இங்கு என்ன பணி செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“கல் சுமந்து கொண்டிருக்கிறேன்“
“எதற்காக?”
“வேலை முடிந்ததும் கூலி தருவாங்க. அதுக்காகத்தான்.” இந்தப் பதிலைக் கேட்டதும், நேருஜி நொந்து போனார்.
“தேசிய நிர்மாணப் பணியில் ஒரு மாபெரும் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதில் என் பங்கை செலுத்திக்கொண்டிருக்கிறேன்” என்று அந்தத் தொழிலாளி சொல்வார் என்று எதிர்பார்த்தார். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் இத்தகைய தேசிய உணர்வு வேண்டும என்பது அவரது உள்ளக் கிடக்கை. வேலைக்கு கூலி வாங்கினாலும் தேசத்துக்காக உழைக்கிறோம் என்ற உணர்வு வேண்டும். இதற்கு உதாரணமான தன்னையே நாட்டுக்கு ஒப்படைத்தவர் தான் ஆசிய ஜோதி நேரு. ஆனால் அவரையும் காலன்கொண்டு போகும் காலம் வந்து விட்டதே.
1964ஆம் ஆண்டு, மே27ஆம் தேதி, தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம்மேற்கொண்டிருந்த காமராசருக்கு ஒரு அவசரச் செய்தி வந்தது. நேருஜியின் உடல் நிலை மோசமாகி விட்டதை அறிந்ததும்தலைவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். பெங்களூரில் அதுல்யாகோஷூம், நிஜலிங்கப்பாவும் தலைவருடன் சேர்ந்து சென்றனர்.
விமானத்தில் சென்று கொண்டிருந்த போதே பிற்பகல் 2 மணிக்கு நேருஜி அமரராகிவிட்டார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கியது. விமானத்தில் கண்ணீர் வெள்ளம் கரை புரண்டது.
ஒரு சகாப்தம் முடிந்தது. 17 ஆண்டுகள் நாட்டின் தலைமகனாய் இருந்து, 45 கோடி மக்களை வழி நடத்திச் சென்ற உலக அரங்கில் இந்தியாவுக்குப் பிரதான இடத்தைப் பெற்றுத் தந்த நேரு நாயகன் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்தியா முழுவதும் கரைக்கப்பட்டது.
பிரதமர் நேருவின் மரணம் உலகம் முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குல்சாரிலால் நந்தா இந்தியாவின் தற்காலிகப் பிரதமரானர்.
எந்தச் சூழலிலும் மக்களை திசை திருப்பாத சக்தி படைத்தது காங்கிரஸ்தான் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் நிரூபித்தார்கள்.
540 காங்கிரஸ் எம்.பி.க்கள், 15 மாநில முதல்வர்கள் மற்றும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ஆகிய அனைவரையும் சந்தித்து அவர்களது கருத்தை அறிந்து தனது விருப்பத்தையும் மக்கள் எண்ணத்தையும் அவர்களுக்கு உணர்த்தினார் பெருந்தலைவர். இறுதியில் எல்லோரையும் ஒரு முடிவுக்குக்கொண்டு வந்து அடுத்த பிரதமரைத் தேர்ந்த சாதனை, எளிய சாதனை அல்ல. எஸ்.கே.பட்டீலும், நந்தாவும் குறிப்பிட்டது போல “வரலாற்றுப் புகழ் பெற்ற மாபெரும் சாதனையாகும்” இந்தச் சிறப்பையும் தமிழகம் தந்த தவப் புதல்வர் காமராசர் அடக்கத்தோடு ஏற்றார்.