92
கிரேக்க நாட்டு அறிஞராக விளங்கிய சாக்ரடீசின் நண்பன் ஒருவன் டெல்லா என்ற தேவதையின் கோவிலுக்குச்சென்றான். அந்த தேவதையைப் பார்த்து “சாக்ரடீசை விடச் சிறந்த அறிஞன் யாராவது இருக்கிறானா?” என்று கேட்டான்.
இல்லை எனப் பதில் வந்தது. சாக்ரடீசிடம் ஓடிவந்த அவன் “உன்னையே சிறந்த அறிஞன் என டெல்லா சொல்லக் காரணம் என்ன” என்று கேட்டான். அதற்குச் சாக்ரடீஸ் “மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாத போதும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறார்கள். எனக்கு ஒன்றும் தெரியாது. அப்படித் தெரியாது என்பதை நான்தெரிந்து வைத்திருக்கிறேன். இதுதான் எனக்கும் மற்றவர்களுககும் உள்ள வேறுபாடு” என்று விளக்கம் தந்தார்.
உண்மையான அறிஞர்கள் இப்படி அடக்கமானவர்களாகவே இருப்பார்கள். இதற்கு அண்ணா ஒரு சான்று. பெருந்தலைவர் ஒரு சான்று. காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பெருந்தலைவர் படத்தைத் திறந்து வைத்து அறிஞர் அண்ணா உரையாற்றினார். அதில் காமராசர் தனது பணிகளின் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றார். தமிழர்களுக்கு நற்பணி ஆற்றினார். தமிழர்கள் பெருமைப்படக் கூடிய நல்ல காரியங்களைச் செய்தார்.
உண்மையான மக்களாட்சி இருக்கும் நாட்டில்தான் ஒரு கட்சித்தலைவர் அடுத்த கட்சித் தலைவரை மதிப்பார். ஆனால் சர்வாதிகார நாட்டில் ஒரு கட்சித் தலைவர் இன்னொரு தலைவருக்கு சமாதிதான் கட்டுவார்.
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கசப்பு இருக்கக் கூடாது. கட்சிவேறுபாடு இருக்கலாம். கத்திக் குத்து வரை சென்று விடக் கூடாது. கட்சி வேறுபாடு என்பது சந்து முனையிலிருந்து கத்துவதாக இருக்கக் கூடாது.
சிலர்தான் படிக்காமலேயே மேதை ஆக முடியும். ஆனால் அனைவருமே மேதையாக வேண்டும என்றால் படிக்காமல் இருக்க வேண்டும என்று பொருள் அல்ல. காமராசர் படித்துப் பட்டம் பெறவில்லையே தவிர படிக்கவே இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. அவர் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக்கொண்டே தான் இருப்பார். என்னைப்போல நெருங்கிப் பழகுகிறவர்கள் தான் அவரது படிப்பார்வத்தைப் புரிந்து கொள்வார்கள்.
காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர வாழ்க்கைப்பாடத்தைப் படித்தார். மக்களின் புன்னகையை மக்களின் பெருமூச்சை, மக்களின் கண்ணீரைப் படித்துப் பாடம் பெற்றவர் காமராசர். 30 வருடம் 40 வருடம் என்று மக்களிடம் தொண்டாற்றினால் தான் இந்தப் பாடத்தைப் பெற முடியும்.
ஒருவர் காலமான பின்தான் அவரைப் பாராட்ட வேண்டும் என்ற பண்பு எவ்வளவுக்கு எவ்வளவு நாட்டில் குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
நான் திறந்து வைத்த காமராசர் படத்தை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கே பரிசாகத்தருகிறேன்.