97
மாவீரன் நெப்போலியனை அறியாதவர்கள் எவருமே இருக்கமுடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்ககால வரலாற்றைத் தன் போர்த்திறத்தால் எழுதியவன். 1815-ஆம் ஆண்டு வாட்டர்லூ என்ற இடத்தில் நடந்த போரில் தோற்று சையிண்ட் ஹெலீனா என்ற தீவில் சிறைவைக்கப்படும் வரை எழை விவசாயியின் மகனாகப் பிறந்து பிரான்ஸ் நாட்டின் மன்னனாக உயர்ந்தவரை, அவனது ஆற்றல் அளவிடமுடியாத ஒன்று. பல இலட்சக்கணக்கில் அவன் நடத்திய போரினால் மக்கள் மரிக்க நேரிட்டாலும், மனிதாபிமானம் என்ற உயரிய குணம் அவன் நெஞ்சில் எங்கோ ஒரு மூலையில் குடியிருக்கவே செய்தது.
பிரான்ஸ் நாட்டில் பகைவரின் எல்லைப் பகுதியில் பாடிவீடமைத்து ஒரு குடிலில் தங்கியிருந்தான் நெப்போலியன். அவனது குடிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான குடில்களில் அவனது படை அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் தங்கியிருந்தனர்.
ஒரு நாள் நடு இரவு, போரைப்பற்றிய சிந்தனைகளால் உறக்கம் வராமல் ராணுவ வீரர்களின் படைவீடுகளில் ஒரு தெருவில் நடந்துகொண்டிருந்தான்.அந்த இருட்டில் அவனை எவராலும் அடையாளம் காண முடியவில்லை.
அப்போது ஒரு வீதியின் நடுவே ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
ஒரு ராணுவ துணை அதிகாரி ஒரு சாதாரண வீரனை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார். ஒரு தனிமனிதனால் தூக்கமுடியாத ஒரு ராணுவ தளவாடச் சாமானை அந்த வீரன் தூக்க முடியாமல் துவண்டு விழுந்ததற்காகச் சுடுசொல்சொல்லி சவுக்கடி தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ணுற்ற நெப்போலியனின் மனம் கொதித்தது. தன்னை யாரென்று அறிந்து கொள்ளாத அந்த இருவரிடையே சென்றான். ராணுவ அதிகாரியின் கையிலிருந்த சவுக்கைப் பிடுங்கி வீசினான். அதிகாரிக்கோ கோபம்.
யார் நீ? என் பணியில் தலையிடுகிறாய் என்று கோபத்துடன் கேட்டார்.
நெப்போலியனோ பொறுமையாக நான் யாரென்று பிறகு சொல்லுகிறேன், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லிவிட்டு ராணுவ வீரனிடத்திலே வந்து நண்பா! நான் ஒரு கை கொடுக்கிறேன். இரண்டு பேரும் சேர்ந்து இதை எங்கே சேர்க்க முடியுமோ அங்கே சேர்த்து விடுவோம் என்று சொல்லி அக்காரியத்தை முடித்தான்.
மீண்டும் அந்த ராணுவ துணை அதிகாரியிடம் வந்தான்.
நண்பரே! உங்கள் கடமையுணர்வை மெச்சுகிறேன். ஆனால் என்னைப்போல அந்த வீரனுக்கு நீங்களும் உங்கள் உயர்பதவியைக் கருதாது உதவி செய்திருந்தால் இந்தச் சவுக்குக்கு வேலை இருந்திருக்காதே… மேலும் உங்களுக்கு இன்னொன்று சொல்லிக்கொள்கிறேன். எப்போதாவது இதே போன்று ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அதோ அந்தப் பாடி வீட்டில் நெப்போலியன் போனபார்ட் என்ற பெயர் கொண்ட நானிருப்பேன், என்னைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர முயன்றான்.
அடுத்த கணம் ராணுவ துணைத்தளபதியின் தலை நெப்போலியனின் காலடியில் கிடக்க அவர் கைகள் இருகால்களையும் பற்றிக்கிடந்தன.
இப்போது வாசகர்களை விருதுநகருக்கு அழைக்கிறேன்.
விருதுநகரின் வடமேற்கு மூலையில் உள்ள கிராமம் மல்லன்கிணறு என்ற மல்லாங்கிணர். முழுமையும் ஏழை மக்கள் வாழும், வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதி. சிறுசிறு பெட்டிக்கடைகள், சிற்றுண்டி விடுதிகள். பாதையோரங்களில் பழம்காய் கறிக்கடைகள். குண்டுங்குழியுமான வீதிகள். ஒரு சமூகத்தவரின் உயர்நிலைப் பள்ளி. இதுதான் 1950களின் பிற்பகுதி மல்லாங்கிணர்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற பழமொழியை மெய்யாக்குவது போல் அங்கு ஒரு நூல் நூற்பு ஆலை உண்டு. பருத்தி வணிகத்தில் புகழ் பெற்ற விருதுநகர் பஞ்சு வணிகர்கள் லாரிகளிலும் இரட்டை மாட்டு வண்டிகளிலும் பென்னம் பெரிய பொதிகளை அந்த ஆலைக்கு அனுப்பி வைப்பர். விருதுநகர் எல்லையிலிருந்து மல்லாங்கிணருக்குள் நுழையும் பாதை சராசரியை விடச் சற்று உயர்ந்து செல்லும ஒன்று. லாரிகள் இப்பாதையை எளிதாகக் கடந்து சென்றுவிடும். ஆனால் இரட்டைமாட்டு வண்டிகளுக்கு மூவர் துணை வேண்டும்.
ஒருநாள் உச்சிவேளை, ஒரு பெரியவர் எவர் துணையுமில்லாமல் தன் இரட்டை மாட்டு வண்டி நிறையப் பஞ்சுப் பொதியை ஏற்றிக்கொண்டு ஆலையை நோக்கி விரைந்தார். ஆனால் மேட்டில் ஏறும்போது பொதிகளின் பளு பின்னால் அழுத்த மாடுகள் இரண்டும் கட்டப்பட்ட ஏர்க்கால்களோடு முன்னம் கால்களைத் தூக்கித் தொங்கின. வீதியில் பலர் குரல் கொடுத்தனர். உதவ முன்வரவில்லை.
ஆனால் வண்டியின் பின்னால் வந்து கொண்டிருந்த கருப்பு வண்ணக்காரில் அமர்ந்திருந்த கதர்சட்டைக்காரர் நிலைமையை உணர்ந்து மின்னல் வேகத்தில் காரை விட்டிறங்கி தொங்கிக்கொண்டிருந்த மாடுகளின் முன்புறம் வந்து ஏர்க்காலைத் தன் பலங்கொண்ட மட்டும் பிடித்துத் தொங்கினார். மாடுகள் முன்னங்கால்களைத் தரையில் ஊன்றின. ஒரு மாட்டின் கழுத்துக் கயிற்றை அவிழ்த்து விட்டார். வண்டியோட்டி வந்த பெரியவர் கீழிறங்கித் தன் பங்குக்கு மற்ற மாட்டையும் அவிழ்த்துவிட்டார்.
இதற்குள் கூட்டங்கூடிவிட்டது. எல்லோருடைய உதடுகளும் அவர் பெயரை உச்சரிக்கத் தொடங்கின.
அவர் சாதாரணமாக மக்களிடம் பேசினார். “ஏம்பா! வண்டிகள் ஏற சிரமப்படுகிற இந்த மேட்டை சமதளமாக்க வேண்டாமா? முனிசிபாலிட்டி என்ன செய்கிறது? ரெண்டு, மூன்று நாள்களிலேயே இதைச் சரிசெய்யச் சொல்கிறேன்” என்று கூறி விட்டுக் காரிலேறினார்.
சூழ்ந்திருந்த கூட்டம் ஏழை பங்காளர் காமராஜ் வாழ்க என்று முழங்கி அவரை அனுப்பி வைத்தது.
ஒரு நாட்டின் முதலமைச்சர் இவ்வளவு இரக்கத்தோடு வாழ்ந்தார் என்று நெப்போலியனுக்கு அடுத்தபடியாக நடந்து கொண்டாரென்று ஒரு நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்துச் சொல்லுங்களேன் பார்க்கலாம்!.