99
காமராஜ் எனக்கு ஓர் புதிராகத் தோன்றுகிறார் என்றார் வடநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர். அதிகம் படிக்காத சாமராசரால், நிர்வாக நுணுக்கங்கள்அறியாத காமராசரால், தமிழக அரசு நிர்வாகத்தை முறையாகவும், சரியாகவும், முழுமையாகவும் இயக்க முடிந்தது எப்படி? ஆங்கிலம் அல்லது இந்தியில் அதிகப் பாண்டித்தியம் பெற்றவர்கள் மட்டுமே பிரகாசிக்க முடியும் என்ற நிலையில் உள்ள இந்திய அரசியல் அரங்கில், இரண்டிலும் பாண்டித்தியம் பெறாத காமராசரால் பரிணமிக்க முடிந்தது எப்படி?
இத்தகைய வினாக்களுக்கு விடை காண முடியாதவர்களின்பார்வையில், காமராசர் ஒரு புதிராகத்தான் விளங்கினார். ஆனால் காமராசர் புரிந்து கொள்ள முடியாத புதிரா என்றால், இல்லவே இல்லை.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, சாதாரண மனிதனாக வளர்ந்து, சாதாரண மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து, அவைகளுக்குத் தீர்வு காண்பதையே, தனது வழியாக, நெறியாக, லட்சியமாகக்கொண்டு வாழ்ந்தவர் அவர். அத்தகைய லட்சிய வாழ்க்கைதான்அவரது வெற்றிக்கு அடிப்படைக் காரணம். இதைப் புரிந்தவர்களுக்கு அவர் புதிரல்ல.
முதல்வராகப்பொறுப்பேற்ற முதல் நாளில், கோப்புகளைப் பார்க்க அமருகிறார் காமராசர். அவருக்கு முன்னர் கோப்புகள் 2 வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது என்ன இரண்டு வரிசை? முதல் வரிசையிலே சில கோப்புகள். இரண்டாவது வரிசையில் பல கோப்புகள்?- என அவர் கேட்க, நேர்முக உதவியாளர் சொல்லுகிறார் “முதல்வரிசையில் உள்ளவை முக்கயமானவை 2-வது வரிசையில் உள்ளவை முக்கியமில்லாதவை” இதனைக்கேட்டு அதிர்ந்து போன அவர் கூறுகிறார் “முதல்வருக்கு வரும்கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா, என்ன? எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். அவற்றை நான் அன்றே–உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும். அதுதான் முக்கியம்“.
அக்கால கட்டத்தில் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கல்வி, பொதுப்பணி, தொழில்வளர்ச்சி, பஞ்சாயத்து, கதர் வளர்ச்சி என்று பல விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களுக்குப்போதுமான வேலை இல்லை, அப்பணி இடங்கள் அவசியம் இல்லை, அதில் பணிபுரியும் 234 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்யலாம் என்றும், அதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் செலவு மிச்சமாகும் என்றும் தலைமைச்செயலாளர் பரிந்துரைக்க, சம்பந்தப்பட்ட அமைச்சரும், நிதி அமைச்சரும் அதற்கு ஒப்புதல் அளித்த பின்பு, முதல் அமைச்சருக்கு வருகிறது கோப்பு. கோப்பினைப் படித்த காமராசர் தலைமைச் செயலாளரை அழைத்து, “ஏன் சார்? 234 அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய சிபாரிசு பண்ணியிருக்கீங்க. அவங்க ஒவ்வொருவரும் பட்டதாரிங்க; அஞ்சு வருஷமா இந்த அரசாங்கத்திலே வேலை பாக்கிறவங்க; அவங்க ஒவ்வொருத்தரும் தனிநபர் இல்லே; அவங்களை நம்பி 234 குடும்பங்கள் இருக்கு, அவங்களை வீட்டுக்கு அனுப்பினா, 234 குடும்பங்கள் வீதிக்கு வந்திடுமே அது பெரிய பாவம்ங்க. அவங்களுக்குப் போதுமான வேலை இல்லேண்ணா, புதிய பொறுப்புகளைக்கொடுங்க. நல்லா வேலை வாங்குங்க. வீட்டுக்கு அனுப்பக் கூடாதுங்க. அரசின் பணம் மட்டும் எனக்கு முக்கியமில்லை. அரசை நம்பி வாழும் பணியாளர்களின் நலனும் முக்கியம் – என்றார் முதல்வர். 234 குடும்பங்களின் வாழ்வு காப்பாற்றப்பட்டது.
1962-ல் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லப்பாண்டியனை, முதல்வரும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டிப்பேசுகிறார்கள். கூட்டம் முடிந்தவுடன், சபாநாயகர் தன் இல்லம் செல்ல, தன் காரை நோக்கிப் புறப்படுகிறார். இதனைக் கவனித்துவிட்ட காமராசர், விருட்டென்று எழுந்து முன்னால்சென்று, காரில் அமர்ந்து விட்ட சபாநாயகரைப் பார்த்து சரி போயிட்டு வரீங்களா? என்று வணங்கி வழி அனுப்புகிறார். இதனைப் பார்த்த உறுப்பினர்களோ திகைக்க, சபாநாயகரோ சங்கடத்தால் மௌனியாகிறார்.
அன்று இரவே செல்லப்பாண்டியன் காமராசரிடம், ஐயா நீங்கள் காலையில் என்னை வழி அனுப்பிய விதம், எனக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்கிறார். அதற்கு காமராசர் வேணுமிண்ணுதான் நான் அப்படிச்செய்தேண்ணேன். சபாநாயகர் பதவி எவ்வளவு உயர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியணுமில்லையா? அப்பத்தானே மத்த மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும் உங்களை மதிப்பாங்க; சட்டசபையும் ஒழுங்கா நடக்கும் என்றார்.
பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி திடீரென்று காலமாகிவிட்ட காலகட்டம். அடுத்த பிரதமர் யார் என்பது அனைவர் மனத்திலும எழுந்து நின்ற கேள்வி. அப்பொழுது செல்லப்பாண்டியன் காமராசரிடம், “தேச நலன் கருதி, நீங்களே பிரதமர்பொறுப்பை ஏற்றுக்கொண்டால் என்ன?” – என்று சொல்ல, அதற்கு காமராசர், “நீங்க சொல்றது நல்ல யோசனை இல்லையே. பிரதமர் பொறுப்பு ஏற்க ஏற்கெனவே – நந்தா, இந்திரா,மொரார்ஜி, சவாண், ஜகஜீவன்ராம் பட்டீர், அதுல்யா கோஷ் – என்று ஏழு பேர் களத்திலே இருக்காங்க என்னை எட்டாவது ஆளா குதிக்கச் சொல்றீங்களா? தப்பு தப்பு இந்த யோசனையே நமக்கு வந்திருக்கக் கூடாது. நான் ஒண்ணு சொல்றேன். அரசியலில் ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. அரசியலில் ஒவ்வொருவரும் காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொன்னாராம்.
இந்த அறிவுரை, இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் சொன்ன அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அறிவுரையை ஏற்றால், கடைப்பிடித்தால் போட்டி இல்லை, பொறாமை இல்லை. சண்டை இல்லை. சச்சரவு இல்லை.
(முன்னாள் சபாநாயகர்செல்லப்பாண்டியன் மூத்த மகள் கூறியது)