104
காமராசர் தமிழக முதல்வராக இருந்த சமயம் சென்னையில் உள்ள பெண்கள் காப்பகம் விழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
காமராசரை வரவேற்றுப் பேசிய காப்பகத் தலைவி, “இந்தக் காப்பகத்தில் முன்னூறு பெண்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து புதிதாகப் பெண்களை சேர்த்துக்கொள்ள கடிதங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இம்மாதிரி விடுதிகளை மாவட்டத்திற்கு ஒன்று என ஏற்படுத்திவிட்டால் அந்தந்த மாவட்டங்களிலுள்ள பெண்களை அங்கேயே சேர்த்துக் கொள்ளலாம்” என்று பேசினார்.
காமராசர் பேச எழுந்தார்.
“இந்தக் காப்பகத்தில் உள்ள பெண்களைப் பார்க்கும்போது யாரும் அறிந்து தவறு செய்தவர்களாக எண்ணத் தோன்றவில்லை. அநேகப் பெண்கள் வறுமையின் காரணமாக தவறான வழிகளில் தள்ளப் பட்டதாகவும் தோன்றுகிறது.
எனவே பெண்கள் சுயமாக, கவுரவமாக பிழைக்கும் வழியை அரசு காட்டவேண்டியதன் அவசியமே இங்குள்ள நிலைமையைப் பார்க்கும் போது புரிகிறது.
எனவே அது சம்பந்தமாக இனி அரசு பணிகளைச் செய்ய வேண்டுமே தவிர இந்தக் காப்பகத்தின் தலைவி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி இதே நிலையில பெண்களை மேன்மேலும் எதிர்பார்ப்பது மாதிரி இத்தகையக் காப்பகங்களைப் பெருக்கிக்கொண்டு போகக்கூடாது” என்றார்.