106
1885 ஆம் ஆண்டு திரு.ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற பரந்த மனிதாபிமானம் மிக்க ஓர் ஆங்கிலப் பெருமகனின் உள்ளக் கருவறையில் உருவாகிப் பிறந்த இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கம் தன் 115 ஆண்டு வளர்ச்சியில் குளிரோடைகளை மட்டுமல்ல, பல நெருப்பாறுகளையும் தாண்டி வந்திருக்கிறது.
பெற்றவன் அனாதையாக விட்டு விட்டுச் செல்ல பெருமக்கள் தாதாபாய் நௌரோஜி, பிரோஷ்ஷாமேத்தா,விபின் சந்திரபாலர், பாலகங்காதர திலகர், சித்தரஞ்சன்தாஸர், சேலம் விஜயராகவாச்சாரியார், கோபாலகிருஷ்ண கோகலே, அயர்லாந்து நாட்டு அன்னி பெசண்ட், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. ஆகியோரின் மடியிலே தவழ்ந்தும் அன்புக் கரங்களால் அரவணைக்கப்பட்டும் முப்பது வயது இளைஞனாக இருந்த போது தான் அண்ணல் மகாத்மா காந்திஜியின் அன்புமகவாக வந்து சேர்ந்தது.
பாசத்தோடு அதனை அரவணைத்த அன்னிபெசண்ட் அம்மையாரின் உணர்ச்சி மிக்க தலைமையால் அதினின்று “ஹோம்ரூல் இயக்கம்” கிளைத்து அதன்பின் பாதை மாறிய அவர் கைவிட்டுச் சென்றார்.
பாலகங்காதர திலகர், விபின் சந்திரபாலர், வ.உ.சிதம்பரனார் போன்ற தீவிரவாதிகள் ஒருபுறமும், கோபாலகிருஷ்ண கோகலே, மோதிலால் நேரு போன்ற மிதவாதிகள் ஒருபுறமும் நின்று கயிறு இழுக்கும் போராட்டம் நிகழ்த்திய நிகழ்வுகளிலும் அது சிக்குண்டு தவித்ததுண்டு.
காந்திஜியின் தலைமை கிட்டியபிறகு அன்று உலகத்தையே உலுக்கிய ரஷியப் புரட்சியின் காரணமாக பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகள் காங்கிரசின் அரவணைப்பிலிருந்து விலகிப் பொதுவுடைமை இயக்கம் கண்டு பிரிந்து சென்றனர்.
ஜவகர்லால் நேருஜி தன் குருநாதர் ஹெரால்டு லாஸ்கி என்ற பேராசிரியரிடம் பயின்று நெஞ்சிலே சோஷலிஸ சித்தாந்தத்தைச் சுமந்து வந்து இந்த இயக்கத்தில் சங்கமித்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணன், அசோக் மேத்தா, ராம் மனோகர் லோகியா, அச்சுதப்பட்ட வர்த்தனன், அருணா ஆசப் அலி போன்ற இளைஞர் பட்டாளம் காங்கிரசுக்குள்ளேயே சோஷலிஸ அணியை உருவாக்கிப் பின் தாயிடமிருந்து அகன்று சென்று தனி அணி கண்டதும் உண்டு.
அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவியில் போட்டியிட்டு பட்டாபி சீதாராமையா போன்ற காந்திய வாதியினரைத் தோல்வி காணச்செய்த பின் காந்திய அகிம்சை நெறிக்குக் கட்டுப்படாது வன்முறையிலே நாட்டங்கொண்டு தாயிடமிருந்து பிரிந்து போய் “பார்வார்டு பிளாக்” கட்சியை நிறுவிய சுபாஷ் சந்திர போஸால் காங்கிரஸ் ஸ்தாபனம் அதிர்ச்சிக்கு ஆளானதுண்டு.
முகம்மதலி, சௌகத் அலி, முகம்மதலி ஜின்னா போன்ற அடிநாள் காங்கிரசின் ஆதரவாளர்கள் பின்னாளில் மதவாத அடிப்படையில் முஸ்லிம் லீக் கண்டு எதிரிகளாக மாறியதுண்டு.
காந்திய நெறிச் செல்வரான ஆச்சார்யகிருபளானி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் பாபு புருஷோத்தமதாஸ் தாண்டனிடம் தோற்றவுடன் தோன்றிய வெறுப்பில் “பிரஜா கட்சி” என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு தனிவழியில் சென்றதுண்டு.
காந்திஜியின் சம்பந்தியாய் அவரது மனசாட்சியாய், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாய், நடுவண் அரசில் அமைச்சராய், தமிழக முதல்வராய் செயலாற்றிய மூதறிஞர் ராஜாஜி காங்கிரஸின் சோஷலிஸக் கொள்கைகள், மக்கள் வாழ்வில் அரசின் அதீத தலையீடுகள், லைசென்ஸ் ராஜ்யம், அதிகாரவர்க்க ராஜ்யம் போன்ற செயல்முறைகள் பிடிக்காமல் தனியே பிரிந்து சென்று சுதந்தராக் கட்சி என்ற அகில இந்திய அமைப்பைத் தோற்றுவித்துத் தேர்தல் களத்திலேயும் எதிர்த்ததுண்டு.
ஆனாலும் காந்திஜி, வல்லபாய் படேல் போன்ற மாபெரும்தலைவர்களின் மறைவுக்குப் பின்னரும் காங்கிரஸ் என்ற ஆலமரத்தைக்கட்டிக்காக்கும் காவற்காரனாக நேருஜி இருந்தமையால் எத்தகைய உட்கட்சிச் சூறாவளிகளையும் அவ்வியக்கம் தாங்கி நின்று இந்திய மக்களின் ஒருமித்த ஆதரவால் ஐந்தாண்டுக்கொருமுறை நடந்த தேர்தல் களங்களையும் சந்தித்துச் செம்மார்ந்து நின்றது.
இந்திய மக்களிடம் தனது தியாகம், அரசியல் பட்டறிவு, அறிவுமுதிர்ச்சி, உலகப்புகழ் காரணமாக அவர் ஓங்கி நின்றபோதும் மாநிலங்களில் தக்க பணியாற்றிய தலைவர்களை அவர் அணைத்துக் கொண்டார். அவர்களை அகில இந்தியத் தலைமையை ஏற்கத் தகுதியுடையவர்களாக உயரும் போது அதை வரவேற்றார்.
தமிழகத்தில் காமராசர்,ஆந்திராவில் சஞ்சீவிரெட்டி, கேரளாவில் பனம்பள்ளி கோவிந்தமேனன், கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா, ஒரிஸாவில் ஹரிகிருஷ்ணமேதாப்,
மராட்டியத்தில் எஸ்.கே.பாட்டீல், வங்காளத்தில் டாக்டர் பி.சி.ராய், பீஹாரில் ஜகஜீவன்ராம், உத்தரபிரதேசத்தில் கோவிந்த வல்லப் பந்த், குஜராத்தில் ஜீவராஜ் மேத்தா,
பஞ்சாபில் பிரதாப் சிங் கெய்ரோன் என மாநிலங்களில் தேர்தல் யுக்தியுடன் மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவர்களிருந்தனர். மத்திய அமைச்சரவையில் தனது சகாக்களாக பாபு ராஜேந்திரர், மொரார்ஜிதேசாய், லால்பகதூர் சாஸ்திரி, கே.எம்.முன்ஷி, சி.டி. தேஷ்முக், அபுல்கலாம் ஆசாத் போன்ற நல்லோரை வைத்துக் கொண்டு ஆட்சித் தேரைச் செலுத்தினார்.
ஆனாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேசிய எதிர்ப்புச் சக்திகள் காலூன்றுவது கண்டு காங்கிரஸ் கட்சியின் எதிர்காலங்குறித்துக் கவலையுற்றார். மேலும் காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளேயே பதவி வெறிகாரணமாக சுயநல சக்திகள் தலை தூக்குவது கண்டு மிக மனச்சோர்வடைந்தார்.
அப்போது தான் அரசியல் அனுபவ மேதையான தலைவர் காமராசருக்கு ஓர் அற்புத யோசனை தோன்றியது.
விடுதலைப் போராட்ட காலத்துத்தலைவர்களிடம் இந்திய நாட்டின் விடுதலை என்ற இலட்சியம் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இருந்ததில்லை. ஆனால் நாடு விடுதலை பெற்றபின் மத்திய அரசிலும் மாநிலங்களிலம் நாடறிந்த தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டியவர்களாயினர். காலத்தின் கட்டாயமாக இந்நிலை ஏற்பட்டாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி கேள்விக் குறியாகி விட்டது. எனவே ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள மூத்தத் தலைவர்கள் தகுதியான இரண்டாம் நிலைத் தலைவர்களிடம் ஆட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு கட்சியைப் பலப்படுத்த முன்வர வேண்டும் என்ற திட்டத்தைக் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தனது திட்டமாக வைத்தார்.
கீழ்வான இருளை நீக்க வந்த விடிவெள்ளியாக இத்திட்டம் அனைவர்க்கும் தோன்றியது. சிறப்பாக நேருஜியை இத்திட்டம் மிகக் கவர்ந்தது.
நேருஜி தானும் பிரதமர் பதவியை விடுத்துக் கட்சிப்பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். ஆனால் எவரும் அதை ஏற்கவில்லை. ஒருவேளை அது ஏற்கப்பட்டிருந்தால் பிரதம அமைச்சர் என்ற அதீதமனயிறுக்கத்திலிருந்து விடுபட்டு மக்களைச் சந்திப்பது என்ற அவருக்கு மிகவிருப்பமான பணி மூலம் மேலும் சில ஆண்டுகள் நம்மோடிருந்திருப்பார் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
“காமராஜ் திட்டம்” செயல்படத் தொடங்கியது. திட்டம் தந்த காமராஜரே முதலில் வழிகாட்டினார். தமிழகத்தில ஒன்பது ஆண்டுக்கால பொற்கால ஆட்சியைத் தந்துவிட்டு வெளியேறினார். மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்களும் வழிகாட்டினர்.
ஆனால் விதியின் கை வேறு விதமாக எழுதிவிட்டது. நேருஜியின் விருப்பத்தை மீறமுடியாமல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர்பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஒரிசாவிலுள்ள புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமைவகித்த போது தன் தலைவனை இழந்து தனியனாக ஆனார்.
அனைத்திந்திய காங்கிரஸ் கட்சிப்பொறுப்பை ஏற்றமையால் நஷ்டம் தமிழகத்துக்குத்தான். எந்தத் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்துக்குப் புத்துணர்ச்சியூட்ட விரும்பிப் பதவியைத் துறந்தாரோ அப்பணியை அவரால் ஆற்ற முடியாது போயிற்று.
ஆயினும் “காமராஜ் திட்டம்” என்ற “கே–பிளான்” வரலாறாகி விட்டது.