110
பெருந்தலைவரின் இறுதிச் சடங்கு நடந்தது. சிதைக்கு தீ மூட்டுமுன் பீரங்கிகள் மூன்று முறை முழங்கின. தலைவா தலைவா என மக்கள் மனமுருக கதறியழுத குரல் விண்ணைத் தொட்டது. தலைவரின் தங்கை பேரன் கனகவேல் சிதைக்குத் தீயிட்டார். சிதையில் இருந்து தீ எழுந்தது. கூடி இருந்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டுக் கதறினர்.
தன்னைப் பிரதமராக்கி நாட்டின் மானம் காத்த தியாகத்தலைவனின் உடலைத் தீ தீண்டியதைக் கண்ட இந்திரா காந்தியால் அழுகையை அடக்க இயலவில்லை. கையால் வாயைப்பொத்திக் கொண்டு கதறினார்.
நம்முடைய வாழ்வின் ஒளி விளக்கு அணைந்து பேரிருள் சூழ்ந்து விட்டது. அன்புக்கும், மரியாதைக்கும் உரிய அந்தப் புனிதர் இப்போது இல்லை.
இத்தனை வருடங்களாக அனைவருடன் வாழ்ந்து ஆலோசனையும், ஆறுதலும் தந்த தலைவன் இனி இல்லை.
காந்திஜியோடு காமராசரும் சென்று கலந்து விட்டார். தலைவர் மறையும்போது நாகர்கோவில் எம்.பி.ஆக இருந்தார். 1969ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம்தேதி முதல் இறுதிப் பேச்சு அடங்கும் வரை 6 ஆண்டுகள் 8 மாதம் 24 நாட்கள் அவர் எம்.பி.யாக இருந்தார்.
காந்திஜி அமரத்துவம் அடைவதற்கு முன் கடைசியில் “ஹே ராம்” என்று கூறினார். நேருஜி கடைசியாக “எல்லாப் பைல்களையும் பார்த்துவிட்டேன்” என்றார். தலைவர் இறுதியாக கூறிய வார்த்தை “விளக்கை அணை” என்பதாகும்.
பாரதத்திற்கு வழி காட்டும் ஒளியாக விளங்கிய விளக்கும் அணைந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
1975 ஜனவரி 26இல் தலைவர் குடியரசு தினச் செய்தி விடுத்தார். “அன்புக்குப் பணிவோம். கட்டுப்படுவோம். அதிகாரத்துக்கு கட்டுப்பட மாட்டோம். பலாத்காரத்திற்கு அஞ்ச மாட்டோம் என்ற உறுதியை இந்தக் குடீயரசு தின விழாவில் எடுத்துக் கொண்டு காரியம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று அந்தச் செய்தியில் கூறியிருந்தார். இதுதான்தலைவர் கடைசியகா மக்களுக்குக் கூறிய செய்தி.
1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தலைவர் நாடெங்கும சுற்றுப் பயணம் செய்து காங்கிரசுக்கு தேர்தல் நிதி திரட்டினார். அப்போது இன்புளூயன்சா ஜூரத்தால் பாதிக்கப்பட்டார். பின் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார்.
பிரதமர் இந்திரா காந்தி பெருந்தலைவரின் உடல் நிலையை விசாரித்துக் கடிதம எழுதினார். பதிலுக்கு காமராசரும் உடல் நலம் தேறி வருகிறது என்று பதில் எழுதினார். பிரதமர் இந்திராவுக்கு எழுதிய கடைசிக் கடிதம் இதுதான்.
1975 ஜூலை 2,3ம் தேதிகளில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெருந்தலைவர் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளாத முதல் காரியக் கமிட்டிக் கூட்டம் இதுதான்.
1975 அக்டோபர் 1ஆம் தேதி பெருந்தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லத்துக்குச்சென்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிவிட்டு 4 தடவை “போய் வருகிறேன்” என்று கூறி சிவாஜி கணேசனிடம் விடை பெற்றார்.
சென்னை காந்தி மண்டபத்தில் 1975 அக்டோபர் 2ஆம்தேதி காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக கவர்னர் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பெருந்தலைவரோ காந்திஜியோடு அமரராகச் சென்று கலந்து விட்டார்.