2
ஆசிரியர் மாணவனிடம் கேட்டார். “இமயமலை எங்கே இருக்கிறது?” பையன் விழித்தான். “பெஞ்சு மேல ஏறு” என்று உறுமினார் ஆசிரியர். “பெஞ்சு மேல ஏறினா இமயமலை தெரியுமா சார்?”
இப்படி குறும்புத்தனமாக பேசுகிற மாணவர்களை இப்போது பார்க்கிறோம். ஆனால் சிறுவனாயிருந்து பள்ளியில் படித்த போது அப்பச்சி காமராசர் ஆசிரியருக்குப் பெரிதும் மரியாதை கொடுப்பார். இத்தனைக்கும் அவர் படித்தது மாபெரும் பள்ளிக்கூடம் அல்ல. பிடியரிசிப் பள்ளியென்றும், நொண்டி வாத்தியார் பள்ளி என்றும் அழைக்கப்பட்ட சாதாரண கிராமத்துப் பள்ளிக்கூடம்தான். படிப்புக்காக ஆசிரியருக்கு அரிசியும் நெய்யும்தான் வழங்கப்படுமாம்.
பொதுவாக அந்தக்காலத்துப் பிள்ளைகள் ஆசிரியர்களிடம் அதிக மரியாதை வைத்திருப்பார்கள். என்றாலும் காமராசர் மிக அதிகமாகவே ஆசிரியருக்கு மரியாதை கொடுத்தார். பெரியோரை மதிக்கும் இந்தப் பண்பே பிற்காலத்தில் காந்தியடிகள், சத்தியமூர்த்தி போன்றோரிடம் மரியாதை காட்ட அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
வகுப்பறையில் ஒரு நாள் கணக்கு ஆசிரியர் மாணவர்களிடம் கணக்குப் போடச்சொன்னார். எப்போதும் காமராசரைப் பார்த்து காப்பியடிக்கிற ஒரு மாணவன் அன்றைய தினம் ஆசிரியர் கவனித்து விட்டதை உணர்ந்து கதையை மாற்றி விட்டான். காமராசர் கணக்கைக் காட்டச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக புகார் செய்தான். உண்மையை உணராத ஆசிரியர் காமராசரை அடித்து விட்டார். தவறாகத் தண்டிக்கப்படுகிறோம் என்று தெரிந்தும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் தண்டனையை ஏற்றார், பொறுமையாக நின்றார்.
ஆம். ஒரு சத்தியாக்கிரகி அப்போதே உருவாகிவிட்டார். மாணவர்கள் ஆசிரியரிடம் சென்று, புகார் செய்த மாணவன்தான் உண்மையில் காப்பியடிப்பவன் என்பதைக் கூறியதும், ஆசிரியர் மனம் வருந்தினார். காமராசரின் பொறுமையைக் கண்டு வியந்தார். அவரை அன்போடு வருடிக்கொடுத்தார். ஒரு காந்தியத் தலைவன் உருவான கதை இது.