4
மேடை நாடகங்களில் திடீரென்று சில பிரச்சினைகள் ஏற்பட்டு விடும். அவற்றை சமயோசிதமாகச் சமாளிப்பது ஒரு கலை.
ஒரு பள்ளிக் கூடத்து ஆண்டு விழாவில் பாஞ்சாலி சபதம் நாடகம் நடந்தது. மாணவர்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி என்பதால் பாஞ்சாலியாக நடிப்பதற்கு ஒரு மாணவரையே தேர்ந்தெடுத்திருந்தார்கள். பாஞ்சாலி மீது சுற்றப்பட்டிருக்கும் புடவைகளை மெதுவாக இழுக்க வேண்டும் என்று துச்சாதனனாக நடித்த குண்டு மாணவனுக்குச் சொல்லி வைத்திருந்தார்கள். ஆனால் முன் விரோதம் காரணமாக அந்தப் பையன் பாஞ்சாலியின்சேலையை ஒரே இழுப்பாக இழுத்து விட்டான். பாஞ்சாலி இப்போது டவுசரோடு நிற்க வேண்டியதாயிற்று. ஆனால் அந்தப் பையன் அற்புதமாகச் சமாளித்தான் “கண்ணா! நிறையப் புடவைகளை கொடுத்து என் மானத்தைக் காப்பாத்துவேன்னு நெனைச்சேன். பரவாயில்லை என்னை ஆணாகவே மாற்றிக் காப்பாற்றி விட்டாய்.” இதைக் கேட்டு கூட்டமே ஆரவாரம் செய்தது.
இப்படிப்பட்ட சுவையான சம்பவம் ஒன்று காமராசர் வாழ்க்கையிலும் நடந்ததுண்டு. வாழ்க்கையில் என்றைக்குமே நடிக்காத அவர், நாடகத்தில் நன்றாக நடிப்பாராம். சிறு வயதில் அவர் மார்க்கண்டேயன் என்ற நாடகத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு மார்க்கண்டேயனைக் காப்பாற்றும் சிவபெருமான் வேடம். பதினாறு வயது ஆனதும் மார்க்கண்டேயனுக்கு ஆயுள் முடிந்துவிடும் என்பது அவனது பெற்றோருக்கு ஆண்டவன் போட்டிருந்த நிபந்தனை. அதன்படி பதினாறு வயது முடிந்ததும் எமதர்மன் பாசக் கயிற்றோடு வந்து விட்டான். மார்க்கண்டேயன் ஓடிச் சென்று சிவபெருமானின் கால்களைப் பிடித்துக்கொள்கிறான். இறைவா என்னைக் காப்பாற்று! என்று மன்றாடுகின்றான். இவன் எனது பக்தன் என்னிடம் சரணடைந்து விட்டான். இவனை விட்டுவிடு என்று சிவபெருமான் சொல்கிறார். யாராயிருந்தாலும் எனது கடமையை நிறைவேற்றுவேன் என்று கர்ஜிக்கிறான். சிவபெருமானாக நடித்த காமராசருக்கும் எமனாக நடித்தவருக்கும் வாக்கு வாதம் வந்து விடுகிறது. சிவபெருமான் எவ்வளவோ சொல்லியும் எமன் கேட்பதாக இல்லை. துன்பப்படுகிறவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாகக் கொண்டிருந்த காமராசர், தான் போட்டிருந்த சிவபெருமான் வேடத்தை மறந்தார். அது நாடகம் என்பதையும் மறந்தார். “இந்தப் பையனை ஒண்ணும் செய்யாதேன்னு சொல்றேன் கேட்க மாட்டேங்கிறயே” என்றபடி எமனாக நடித்தவரை மேடையிலேயே அடித்து நொறுக்கிவிட்டார். கூட்டம் இந்தக் காட்சியைக் கண்டு ஆரவாரம் செய்தது. கொடுமையை கண்டு கொதித்து எழும் காமராசரின் உணர்ச்சியைப் பாராட்டியது. அநீதியைத் தட்டிக் கேட்கும் இந்தப் பண்பு கடைசிவரைக்கும் காமராசரிடம் நிலைத்திருந்தது. அந்த உணர்வே வெள்ளையரை எதிர்த்துப் போராட உதவியது.