"

5

இரவு நேரத்தில் சுடுகாட்டில் மந்திர ஜெபம் செய்துவிட்டு அதே நேரத்தில் அதே வேகத்தில் விடிவதற்குள் குடுகுடுப்பை அடித்து தெருத்தெருவாகக் குடுகுடுப்பைக்காரன் வருவது அந்த காலத்தில் மிகவும் அதிகம்.

பாருங்க பாருங்க இந்தத் தெருவுக்கு கிழக்கு கோடியிலே அய்யோனு போகுது என்ற குடுகுடுப்பைக்காரனின் குரல் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த காமராசர் விழித்தார். அந்தக் குரலையே கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆமாம் தாயே! ஐந்து வயது பாலன். அறியாத பருவம் அகப்பட்டுக்கொண்டான். பறி கொடுத்தவர் வந்து ஜோசியம் கேளுங்க. கண்மாய் அடி மண்டபம்; பாழடைந்த பிசாசு பீடம். வாருங்க தாயே என்று மீண்டும் குரல் கேட்டது.

குடுகுடுப்பைக்காரன் பேச்சில் ஏதோ வித்தியாசம் தெரிவதை உணர்ந்த காமராசர் அதே சிந்தனையோடு இருந்தார்.

பொழுது விடிந்தது. காலை வெயில் சூடுபிடிக்காத நேரத்தில் காமராசர் நண்பன் தங்கப்பனைத் தேடிச் சென்றார். தோழர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடினார்கள். மோட்டார் டயர் துண்டுகள் சேகரித்தார்கள்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு தெற்கே கீழ் புறத்தில் சுரங்க வாய்க்கால். வேலாயுத மடைகுளம் நிறைந்து தண்ணீர் பெரிய தெப்பக்குளத்துக்கு வரவேண்டும்.

காமராசரின் தோழர்கள் சுரங்க பாதையை அடைந்தார்கள். டயர் துண்டில் தீப்பற்ற வைத்தனர். காமராசர் அந்த இருண்ட சுரங்க வாய்க்காலில் மெதுவாக நடந்தார்.

திடீரென காமராசர் இருளுக்குள் பாய்ந்தார். போராடி பிடித்தார். தாடி மீசையுடன் ஒருவன் பிடிபட்டான். தரையில் ஐந்தாறு வயதுடைய பையனும் கிடைத்தான். காணாமல் போன பையன்தான் அவன்.

சுரங்கப் பாதையிலிருந்து வெளியே வந்த தோழர்கள் பிள்ளை பிடிக்கும் தாடிக்காரனைக் கட்டி கூட்டிப்போய் போலீஸில் ஒப்படைத்தார்கள். குடுகுடுப்பைக்காரன் தொல்லை இனி இல்லை. பிள்ளைப் பிடிக்கிறவன் பற்றிய பயமும் குறைந்தது.

வெறும் பிச்சையில் திருப்தியடையாத குடுகுடுப்பைக்காரன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத்திட்டமிட்டான். சின்ன பிள்ளைகளைப் பிடித்து மறைத்து வைத்து விட்டு பிறகு அவர்கள் வீட்டுப் பக்கம் சென்று குறி சொல்வது போலச் சொல்வான். பிள்ளையைப் பறி கொடுத்தவர்கள் வந்து கேட்டால் நிறைய பணம் பெற்றுக் கொண்டு குழந்தையை மறைத்து வைத்திருக்கும் இடம் பற்றித் தகவல் கொடுப்பது. இதுதான் அவனது திட்டம்.

ஆனால் காமராசர் தனது சாதுரியத்தால் குடுகுடுப்பைக்காரன் திட்டத்தைக் கண்டுபிடித்து முறியடித்தார். இதன் மூலம் ஊர் மக்களின் கவலைகளைத் தீர்த்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.