9
விருதுநகரில் மேலக்கடைத் தெருவைச்சேர்ந்தவன் ராமச்சந்திரன். அந்த ஊரிலேயே அவன்தான் நல்ல சிவப்பு. தலைமுடியைக் கோணல் கொண்டை போட்டிருப்பான். வெள்ளைக்காரன் போலிருந்ததால் ராமச்சந்திரனை
‘ஒயிட் ராமன்’ என்று அழைப்பார்கள்.
ஊரெங்கும் பஞ்சாப் படுகொலை பற்றிய செய்தி தீவிரமாகப்பேசப்பட்டுக்கொண்டிருந்த நேரம். அன்று வாலிபர்கள் குழு சடுகுடு விளையாடிக் கொண்டு இருந்தபோது, “மேலக்கடை வெள்ளைக்காரன் என்பதால் என்னோடு ஜோடி கட்டப் பயமா?” என்று கேட்டான் ராமச்சந்திரன். உடனே காமராசருக்கு பஞ்சாபில் வெள்ளையன் நடத்திய படுகொலையும், பயங்கரமும் கண்முன் தெரிந்தது. ஆவேசம் வந்தது. களத்தில் குதித்தார்.
சடுகுடு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. காமராசர் கோஷ்டி அன்று காட்டிய வேகம் சொல்லிமாளாது. ராமச்சந்திரன் கோஷ்டியை வெள்ளைக்காரன் கோஷ்டியாகவே தீர்மானித்துக் கொண்டு ஆவேசத்தோடு பிடித்து அமுக்கினார்கள்.
‘ஒயிட் ராமச்சந்திரன் மூச்சு எடுத்து வந்தான்.’ “இந்தா பாரு செத்தாண்டா வெள்ளைக்காரன்” என்று பாய்ந்தார் காமராசர். சரியான உடும்புப்பிடி ‘ஒயிட்’ கீழே சாய்ந்தான். மற்ற தோழர்களும் அமுக்கினர். பெருமிதத்தோடு வீடு திரும்பினார்.
மறுநாள் பத்திரிகை வந்தது. பஞ்சாப் படுகொலையைக் கண்டித்துத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. அன்றே காமராசர் தேசியத் தொண்டனாகி விட்டார். ஜவுளிக் கடைக்குப் போவதில் நாட்டம் குறைந்தது. வாசக சாலையில் பத்திரிக்கைச் செய்திகளையும், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படிப்பதிலேயே முழு கவனமும் செலுத்தினார்.
பெருந்தலைவர் ஜவுளிக்கடைக்குப் போவதை நிறுத்திவிட்டு எந்நேரமும் பத்திரிக்கை படிப்பது, காங்கிரஸ் கட்சி பற்றிய பேச்சு இப்படியே இருந்தார். பாட்டி பார்வதி அம்மாள் காமராசரின் தாடையைப் பிடித்துத் தாங்க ஆரம்பித்தாள். எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. பாட்டியின் கண்ணீருக்கு காமராசர் பதில் சொன்னார்.
“நான் ஒண்ணு சொல்றேன் பாட்டி. நம்ப எண்ணெய்க் கடை அண்ணாச்சி பெரியசாமி இருக்காரே அவங்க வீட்டு சடை நாய் அழகாத்தான் இருக்கிறது. அதை அவங்க பிரியமாத்தான் வளர்க்கிறாங்க. நீங்க கூட அதைப் பார்த்தா சந்தோஷப்படறீங்க. ஆனா அது நம்ம வீட்டுக்குள்ளே வந்தா நீங்கதானே விரட்டுறீங்க. அதே மாதிரிதான்வெள்ளைக்காரன். நம்ம நாட்டிலே அவனுக்கு என்ன வேலை? அதிகாரம் பண்றான். சுட்டுக்கொலை பண்றான் அதைக் கண்டிக்காம எப்படி விடறது?”
இந்தப் பேச்சைக் கேட்ட பெரியசாமி நாடார், வெள்ளையர் மீது விசுவாசமாக இருந்தவர் மனம் மாறினார். இதுபோலவே ஊரில் தன்னிடம்பேச்சுக் கொடுக்கும் பலரிடமும் காமராசர் வாதம் பிரதிவாதத்தில் ஈடுபடுவார். அதிக நேரம் வளவளவெனப்பேசுவதில்லை. நறுக்காக பேசி தனது கருத்தை அடுத்தவர் மனதில் பதிய வைப்பார்.