"

13

ஒரு இடத்தில் கிளிகளை ஒருவன் ஏலம் போட்டுக் கொண்டிருந்தான். பேசுங்கிளிகள் என்பதால் எல்லாக் கிளிகளும் விற்றுக் கொண்டிருந்தன. வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருந்த ஒருவனுக்கு ஒரு பேசுங்கிளி வாங்கலாமா என்ற எண்ணம் வந்தது. காலம் கடந்து கொண்டே இருந்தது.

கடைசியிலே ஒரு கிளி தான் மிச்சம், யாராவது ஏலம் எடுக்கிறீங்களா, என்றார் விற்பவர். வேடிக்கை பார்த்தவன் ஏலம் கேட்க ஆரம்பித்தான். இவன் கேட்க, கேட்க ஏலத் தொகை கூடிக்கொண்டே போனது. ஏலம் முடிந்து கிளியைக் கையில் வாங்கினான். அப்பதான் அவனுக்கு சந்தேகம் வந்தது. இந்த கிளி நல்லா பேசுமா?ன்னு கேட்டான். அப்பதான் ஏலக்காரன்சொன்னான். நல்லா பேசுமாவது. இவ்வளவு நேரம் உங்களுடன் போட்டியா ஏலத் தொகையை கூட்டினது இந்தக் கிளிதான் என்றான். இப்படி பறவை விலங்குகளுக்கும் சில நுட்பமான அறிவு உண்டு. அதைப் புரிந்து கொண்டு மதம் பிடித்த யானையையே அடக்கிய சம்பவம் காமராசர் வாழ்க்கையில் உண்டு.

விருதுநகர் இந்து நாடார்களுக்குப் பாத்தியப்பட்ட எல்லாக் கோவில்களுக்கும் பொதுவான யானை ஒன்று உண்டு. அதன் பெயர் மாரியாத்தா என்பதாகும்.

மழை பெய்ததால் நிறைந்திருந்த தெப்பக்குளத்தில் பாகன் காலை வேளையில் யானையைக் குளிப்பாட்டுவார். ஒருநாள் வழக்கம்போல் நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டினார்.

குளித்துவிட்டுக் கரையேறிய யானை தலையில் அங்கும் இங்கும் தேடியது. சப்தமாக பிளிறியது. பாகன் சமாதானப்படுத்தியும் கேட்காமல் பாகனைக் கீழே தள்ளிவிட்டு துதிக்கையை தரையில் பட்பட்டென்று அடித்தது. பிளிறியபடி அம்மன் கோவில் மைதானத்தை நோக்கி ஓடியது. பாதையில்போய்க்கொண்டிருந்த மக்கள் நாலாபுறமும் ஓடினார்கள்.

யானைப்பாகன் என்ன செய்வதென்று புரியாமல் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் முன் தவித்தபடி நின்றார். பரிபாஷையில் கத்தினார். இந்த நிலையில் காமராசரும் தங்கப்பனும் மைதானத்துக்குள் வந்தனர். நிலைமையைக் காமராசர் புரிந்து கொண்டார்.

மெதுவாகப் பதுங்கியபடி முன்னேறிச் சென்று யானை கட்டும் மண்டபத்துக்குள் நுழைந்தார். எந்தச் சமயத்திலும் எப்போதும் யானையின் துதிக்கை பக்கம் போட்டு வைத்திருக்கும் சத்திய சங்கிலியை எடுத்து வந்தார்.

யானையைப் பிடித்துப் பழக்கும் போதும் சத்தியச் சங்கிலி என்ற ஒரு சங்கிலியை முதலில் கொடுப்பது வழக்கம். யானையை மண்டபத்தில் கட்டியிருக்கும்போது இந்தச் சங்கிலி யானையின் முன்பாகக் கிடக்கும். வெளியே சென்றால் அதைத் துதிக்கையில் எடுத்துக்கொண்டுதான் கிளம்பும். சங்கிலி நினைப்பு வராத வரை ஒன்றுமில்லை. நினைவு வந்துவிட்டால் சங்கிலியை உடனே கையில் கொடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் யானைக்குக் கோபம் வந்துவிடும்.

அன்று அது குளிக்கக் கிளம்பியபோது சங்கிலியை மறந்து மண்டபத்திலேயே விட்டு விட்டதால் குளித்துக் கரையேறியதும் அதற்கு நினைவு வர தரையில் தட்டி பிளிறிக் காட்டியிருக்கிறது. இது பாகனுக்குப் புரியவில்லை. ஆனால் எப்போதும் யானையை வேடிக்கை பார்த்து வரும் காமராசருக்குப் புரிந்திருக்கிறது. அதனால்தான் சத்திய சங்கிலியை எடுத்து வந்து காமராசர் யானையின் முன்னே வீசினார். துதிக்கையில் சங்கிலியை எடுத்துக்கொண்ட யானை சாதாரணமாக மண்டபத்தை நோக்கிச் சென்றது.

ஆபத்தான சமயத்தில் கூட காமராசர் துணிச்சலுடன் செயல்படும் தன்மையைப் பற்றித் தங்கப்பன் எப்போதும் பேசுவது வழக்கம்.

பிற்காலத்தில் இந்தியச் சீர்திருத்தச் சட்டம் பற்றிய பேச்சு வந்தபோது பேசிய தலைவர் சத்தியமூர்த்தி, யானைக்குத் சத்திய சங்கிலி எடுத்துக்கொடுத்த காமராசர் காட்டும் வழியைப் பின்பற்ற விருதுநகர் பொதுமக்கள் ஒருபோதும் தவறமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.