15
சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். “என்ன குற்றம் செய்ததற்காக நீ இங்கு வந்தாய்?” என்று ஒருவன் மற்றவனைக்கேட்டான்.
“தும்மினேன், அதனால் இங்கு கொண்டு வந்து விட்டார்கள்”
“அதற்காகவா இங்கு கொண்டுவந்து விட்டார்கள்”
“ஆமாம். ஒரு வீட்டின் பீரோவிலிருந்து நகைகளைத் திருடும்போது தும்மிவிட்டேன். அதனால் கைதியாகி விட்டேன். அது சரி நீ எப்படி இங்கு வந்தாய்?”
“ரெயிலில் போகும் போது தேவைப்பட்டால் சங்கிலியை இழு என்று என் அப்பா சொல்லி இருந்தார். அப்படியே செய்தேன். மாட்டிக்கொண்டேன்”
“அதற்கு அபராதம் தானே போடுவார்கள்.”
“நான் இழுத்தது ரெயிலின் அபாயச் சங்கிலியை அல்ல. ஒரு பெண்ணின் கழுத்துச் சங்கிலியை.”
இப்படிப் பலபேர் குற்றவாளிகளாகச் சிறைபுகுவோர் உண்டு. நாட்டின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்துச் சிறை சென்றவர்கள் சிலரே.
நாட்டுக்காகப் போராடுவதையும் அதற்காக சிறை செல்வதையுமே தமது வாழ்நாளாகக் கொண்டிருந்தவர் காமராசர். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகம் தமிழ் நாட்டில் வேதாரண்யத்தில் நடந்தது. அப்பச்சி அதிலும் தீவிரம் காட்டினார். இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.
1932-ல் சட்டமறுப்பு இயக்கம். ஓராண்டு சிறை. அரிசனங்களின் உரிமைக்கென்றும் போராடினார். 1925-ல் அரிசனங்களுக்கு வழிபாட்டு உரிமை கேட்டு வைக்கம் போராட்டத்திலும் சுசீந்திரம் போராட்டத்திலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 1934-ல் விருதுநகர் அஞ்சல் நிலையத்தின் மீதும் திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தின் மீதும் வெடிகுண்டு வைத்ததாக பொய்க்குற்றம்சாட்டப்பட்டார். 1941-ல் தனியார் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொள்வோர் பட்டியலை காந்தியடிகளிடம் கொடுக்கப்போகும் வழியில் கைது செய்யப்பட்டு வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டதற்காகக் கைதாகி ஓராண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்தார். அம்ரோட்டி சிறைக்கொடுமைகள் பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். வெப்பத்தின் கொடுமை தாங்காமல், நாளெல்லாம் தண்ணீர் தொட்டியில் இருந்தே கழித்ததை அவர் குறிப்பிடும் போது நமது கண்கள் கலங்குகின்றன. வாழ்நாளில் மொத்தம் 3000 (மூவாயிரம்) நாட்கள் அவர் சிறைக்காற்றை சுவாசித்தார் என்று புள்ளி விவரம் கூறுகிறது.
வாழ்க்கை என்பது நீண்ட நாட்கள் வாழ்வது அல்ல. ஒவ்வொரு வினாடியும் நாம் வாழுகிறோம் என்று உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கை நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுக்கே அமையும்.