16
தங்களின் சுய நலனுக்காக நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நாட்டு நன்மைக்காக வீட்டு உணர்ச்சிகளைக் கூட விலக்கி வைத்தவர் பெருந்தலைவர்.
உப்புச் சத்தியாகிரகம் நடந்த நேரம். உப்பு வரியை ஒழிக்க வேண்டும் என்று பெருந்தலைவர் கடும் குரல் கொடுத்தார். அந்த ஆண்டுதான் பெருந்தலைவர் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு ஆகும். அந்த ஆண்டில்தான் முதன்முதலாக இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவித்தார்.
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது போல பெருந்தலைவரும் வாழ்ந்து வந்தார். பெல்லாரிச் சிறையிலே அவர் இருந்தபோது அவரது சிறைவாசத்தை தாங்கிக்கொள்ள முடியாத பாட்டியார் பார்வதியம்மாள் படுக்கையில் விழுந்து நோயுற்றார். உடலும், உள்ளமும் சோர்ந்து போனது. பிழைப்பது அரிது என்றாகிவிட்ட நிலையில், காமராசர் வந்தால் தான் உயிர் தாங்கும் என்றார்கள்.
சீரும் சிறப்புமாக பாலூட்டி, சீராட்டி வளர்த்த பாட்டியிடம் காமராசருக்கு அன்பு அதிகம் இருந்தது. உறவினர்கள் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களிடம் கூறி பரோலுக்கு ஏற்பாடு செய்தார்கள். காமராசரை அழைத்துச்செல்ல வந்த அவரின் தாய்மாமனிடம் நாட்டு நடப்பை விசாரித்தார்.
“உங்களைக் காணாமல் பாட்டியார் உயிருடன் போராடிக்கொண்டிருக்கிறார். உங்களைப் பரோலில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தாகிவிட்டது” என்றார். ஆனால் காமராசர் “தண்டனை முடியாமல், நான் பரோலில் வர முடியாது. ஊரிலே எத்தனையோபேர் இருக்காங்களே! முனிசிபாலிடி இருக்கில்லே. அவங்க எடுத்துப் போடுவாங்க. பாட்டி அனாதையாய் போகாது கவலைப்படாதீங்க” என்று கூறி அனுப்பி வைத்தார்.
பொதுவாழ்வு என்ற பெயரில் ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் பெருந்தலைவரின் தளராத உறுதியைப் பெறுவது அரிது.