17
ஒரு கோவில் திருப்பணிக்காக நிதி வசூல் செய்ய மூவர் திட்டமிட்டனர். வசூலாகும் தொகையில் பாதியை கோவிலுக்குக் கொடுத்து விட்டு மீதியை மூவரும் பங்கிட்டுக்கொள்வது என்று முடிவு செய்தனர். வசூல் முடிந்ததும் சாமிக்கு உரிய தொகையை எப்படிக் கொடுப்பது என்று மூவரும் யோசிக்கத் தொடங்கினார். அதிலும் கொஞ்சம் சுருட்ட வேண்டும் என்று ஆசை. ஒருவன் சொன்னான். “தூரத்தில் ஒரு கோடு போடுவோம். வசூலான தொகையை எடுத்து வீசுவோம். கோட்டுக்கு அந்தப் பக்கம் விழுவதெல்லாம் சாமிக்கு. இந்தப் பக்கம் விழுவதெல்லாம் நமக்கு.” அடுத்தவன் சொன்ன ஆலோசனை. “தூரத்தில் ஒரு சிறு வட்டம் போடுவோம். பணத்தை இங்கிருந்து வீசுவோம். வட்டத்துக்குள் விழுந்ததெல்லாம கடவுளுக்கு, மீதியெல்லாம் நமக்கு.” மூன்றாவது ஆள்சொன்ன யோசனை “இதெல்லாம் சரிபட்டு வராது. வசூலான தொகையையெல்லாம் நாணயங்களாக மாற்றுவோம். எல்லாவற்றையும் மேலே தூக்கி வீசுவோம். கடவுள் தனக்கு வேண்டியதைப் பிடித்துக்கொண்டு மீதியைக் கீழே விட்டுவிடுவார். அதை நாம் வைத்துக் கொள்ளலாம்” என்றான். இந்த யோசனையே எல்லாருக்கும் பிடித்திருந்தது.
பொது வாழ்வில் ஈடுபடும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் பெருந்தலைவர் காமராசர் விதி விலக்கானவர். 1920-ஆம் ஆண்டு அவரது 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் ஆனார். அதிலிருந்து தன்னையே அதற்கு அர்ப்பணித்தவர். எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் தொண்டனாகவே செயல்பட்டார். அரசியல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, தலைவர்களை வரவேற்பது, பணவசூல்களை செய்வது– இதுவே அவரது தலையாய பணிகளாக இருந்தன. கட்சிக்குப் பணம் சேகரிப்பது என்றால் அவருக்கு மிகவும் உற்சாகம் வந்துவிடும். ஒரு பைசா கூட வீணாகாமல் கட்சிக்காகச் செலவிடுவார்.
‘காந்தி உண்டியல்’ என்ற பெயரில் ஓர் உண்டியல் கலசத்தை ஏற்பாடு செய்து “காந்தி உண்டியல் காசு போடுங்கள்” என்று கடைகடையாக ஏறி இறங்குவார். ஒரு நாள் வசூல் கொஞ்சம் குறைவாக இருந்தது. கொஞ்சம் கூட வெட்கப்படாமல் தண்டோராவை அடித்து வந்தேமாதரம் என்று முழங்கியபடி வசூலில் இறங்கிவிட்டார். இந்த முறை பல நேரங்களில் அவருக்குப் பயன்பட்டது. வசதியான தாய்மாமன் இருந்தும் வியாபாரம் செய்ய நல்ல வாய்ப்பிருந்தும் இவர் இப்படி உண்டியல் வசூல் செய்து திரிவதை உறவினர் வெறுத்தனர். அவருக்கு ஒரு கால் கட்டுப்போட்டு விடலாமா என்று முயன்றனர். திருமணப்பேச்சை எடுத்தால் வீட்டை விட்டே ஓடி விடுவேன் என்று பயமுறுத்தி விட்டார். நாட்டுப்பணிக்கு எந்தவிதத் தடையும் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் அவர்.
குறிக்கோளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் மனிதன் எக்காரணம் கொண்டும் பின்னோக்கி திரும்பி ஓடமாட்டான். ஏனென்றால் அவனது ஒரே லட்சியம் எண்ணிய இலக்கை அடைவதுதான்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
என்ற பொய்யாமொழிப் புலவர் வள்ளுவரின் வாக்குக்கு ஓர் எடுத்துக்காட்டாக கர்மவீரர் காமராசர் விளங்கினார்.