"

18

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் திலகர். அவரைத் தீவிரவாதி என நினைத்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைக் கண்காணிக்கப் பல்வேறு முறைகளைக் கையாண்டது.

பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி ஒற்றர்களை வைத்துத் திலகரைக் கண்காணித்ததோ அதைப்போல அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலையும கண்காணித்து வந்தார் திலகர்.

திலகரிடம் சமையல்காரராக இருந்த ஒருவன் ஒருநாள் எனக்கு நீங்கள் கொடுக்கும் சம்பளம் போதவில்லை என்றான்.

திலகர் புன்சிரிப்புடன் ஏன் தம்பி! சமையல்காரன் என்ற முறையில் நான்வேறு தனியாக உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன். என்னிடம் ஒற்றர் வேலை பார்ப்பதற்காக ஆங்கில அரசாங்கம் வேறு உனக்கு மாதா மாதம் ஊதியம் கொடுக்கிறது, அவ்வப்போது நீ இங்கிருந்து அனுப்பும் செய்திகளுக்குப் பணம் தருகிறது. இவ்வளவும் போதாதா? என்று திலகர் கேட்டார். அன்றே சமையல்காரன்வேலையை விட்டு விட்டு ஓடிவிட்டான்.

இப்படி வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் சாமர்த்தியமாகச்செயல்பட்டனர் தேசியத் தலைவர்கள். பெருந்தலைவர் வாழ்க்கையிலும் இத்தகைய நிகழ்ச்சி நடந்தது.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை பம்பாய் நகரில் கூடியது. தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராசரும் அவருடைய குருநாதரான தீரர் சத்தியமூர்த்தி உட்பட பலரும் அவருடன் பம்பாய் சென்றனர்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத் தலைமை தாங்கிய அக்கூட்டத்தில் காந்தியடிகள் விருப்பத்திற்கேற்ப வெள்ளையனே வெளியேறு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நேருஜி முன் மொழிந்தார். சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் வழி மொழிந்தார். தலைவர்கள் பலரும் அத்தீர்மானத்தை வரவேற்றுப்பேசினார்கள்.

இறுதியில் பேசிய காந்திஜி சுதந்திரம் உடனே கிடைக்க வேண்டும். செய் அல்லது செத்து மடி என்ற தாரக மந்திரத்தை மக்களுக்குக் கொடுத்தார். மறுநாள் காலை காந்திஜி, நேரு மற்றும் பிற தலைவர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்தது. எங்கும் கொந்தளிப்பு, தடியடி, அடக்குமுறை மக்கள் கிளர்ந்து எழுந்தனர். பெருந்தலைவரைப் பிடிக்கவும் ஆங்கிலேய அரசாங்கம் வலை விரித்தது.

ஆனால் பெருந்தலைவர் எதற்கும் அஞ்சவில்லை. பம்பாயிலிருந்து சென்னை வரும் ரயிலில் ஏறிக்கொண்டார். பம்பாய் மாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை எல்லோருக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதற்காக இரகசியமாக தமிழகம் எங்கும் சுற்றி வந்து வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்திற்கு விளக்கம் தந்தார் காமராசர்.

செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் சிறப்பாக முடித்துவிட்டு விருதுநகர் வந்த பெருந்தலைவர் ஆகஸ்டு 16ஆம் தேதி கைது செய்யப்படுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளூர் போலீசாருக்குத் தகவல் அனுப்பினார்.

தலைவர் அனுப்பிய தகவலைக் கேட்டு எழுத்தச்சன் என்ற சப்இன்ஸ்பெக்டர் விரைந்து வந்தார். அவரும் தேசியவாதியாக இருந்ததால் தலைவரைக் கைது செய்ய அவருக்கு மனம் வரவில்லை.

காமராஜ், நீங்கள் அவசரப்படவேண்டாம். உங்களைக் கைது செய்ய வாரண்டுடன் வந்த போலீஸ்காரர் அரியலூர் சென்றிருக்கிறார். அவர் வரும் வரைமேலும் சில நாட்கள் நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் அதிகாரி. ஆனால்பெருந்தலைவரோ என் பணிகள் எல்லாவற்றையும் சிறப்புறச் செய்து முடித்துவிட்டேன். என் அருமைத்தலைவர்கள் எல்லாரும் கண்காணாச் சிறையில் வாடும்போது நான் மட்டும் சுகமாக ஓய்வெடுப்பதா? விடுதலை இல்லாத நாட்டின் சிறையில் இருப்பதுதான் விடுதலை வீரர்களுக்கு சுகானுபவம். எனவே என்னை உடனே கைது செய்து சிறைக்கு அனுப்புங்கள் என்றார். இன்ஸ்பெக்டர் கண்கலங்கியபடி காமராசரைக் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.