"

20

ஒருவர் இன்னொருவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். குறித்த தேதியில் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. அந்தக் கவலையில் இரவு தூக்கம் வராமல், உருண்டு புரண்டு படுத்தார். திடீரென்று எழுந்து கடன் கொடுத்தவர் வீட்டை நோக்கிச்சென்று வீட்டுக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த வீட்டுக்காரர் இவரைப் பார்த்ததும்,

என்ன! பணத்தை இப்போதே கொண்டு வந்துட்டீங்களா என்றார்.

இல்லை, நாளையும் பணம் கொடுக்க முடியாது அதைச் சொல்லத்தான் வந்தேன்.

அதை நாளைக்கே சொல்லியிருக்கலாமே. இந்த இராத்திரியிலே ஏன் வரவேண்டும்?

பணம் கொடுக்க முடியலியேங்கிற கவலையில் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் மட்டும் நிம்மதியா இருக்கலாமா? பணம் வரலியேங்கிற கவலையிலே நீங்களும் தூங்காமல் கஷ்டப்படணும். அதுக்குத்தான்சொல்ல வந்தேன் என்றார். கடனை கொடுக்கிறாரோ இல்லையோ கவலையைக் கொடுத்துவிட்டார். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் தன்னால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது கூட கருணை கொண்டு உதவியவர் பெருந்தலைவர்.

காமராசரின் சிறு பருவம் வேடிக்கையும் விளையாட்டும் கலந்தது. ஊரில் பருத்தி வெடித்து இருக்கும் காலம் என்றால் சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான் காரணம். வேலி ஓரம் உள்ள பருத்தியைப் பறித்துக்கொண்டு கடையில் கொடுத்தால் பண்டமாற்றாக காராசேவு, பக்கோடா, வறுத்த கடலை, மொச்சை, சீனிக்கிழங்கு இப்படி எதையாவது ஒன்றை மகிழ்ச்சியோடு வாங்கிச் சாப்பிடுவார்கள். அதே போல உளுந்து, துவரை காய்த்துத் தொங்கினால் போகிற போக்கில் பறித்து சாப்பிடுவதும் உண்டு.

பருத்தி ஏற்றிப் போகும் வண்டிகளிலும் சிறுவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதுண்டு. பெரியவர்கள் இதைக் கண்டும் காணாததுபோல இருந்து விடுவார்கள். ஆனால் கருப்பையா என்பவர் ரொம்ப கவனமாக இருப்பார். சிறுவன் பச்சையப்பன் கருப்பையாவின் பஞ்சுப் பொதியில் கை வைத்துவிட்டான். கோபப்பட்ட கருப்பையா பளார் என்று பச்சையப்பன் கன்னத்தில் அடித்து விட்டான்.

இதை அறிந்த காமராசரும், நண்பர்களும் கோபத்தோடு கருப்பையாவிற்கு பாடம் புகட்ட நினைத்து அவரது வண்டியில் அச்சாணிகளை கழற்றி விட்டனர். வண்டி உருண்டது.

கருப்பையா லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். மறுநாள் காமராசர் ஆஸ்பத்திரிக்குச் சென்று கருப்பையாவைப் பார்த்து அவனுக்கு சுக்குத் தண்ணீர் வாங்கிக் கொடுத்துவிட்டு விசாரித்தார். ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினார்.

விருதுபட்டியில் சந்திக்கூடத்தெரு என்று ஐந்து வீதிகள் சந்திக்கும் இடத்துக்கு பெயர். இது பார்க்க பெரிய மைதானம்போன்ற தோற்றத்தில் இருக்கும். ஊரில் பொதுவான விழாக்களில் நிகழ்ச்சிகள் நடப்பது இந்த சந்திக்கூடத் தெருவில்தான்.

அந்த ஊரில் பெரியநாயகி என்ற பெயரில் ஒரு மூதாட்டி கண் இழந்தவர், நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமப்பொட்டு உடையவர். உடுக்கை அடித்துக் கொண்டு கணீரென்ற குரலில் கதை சொல்வார். ராத்திரி எட்டு மணி அளவில் சரியான கூட்டம் கூடும். மத்தியில் பெரியநாயகி, காத்தவராயன் கதை சொல்வார்.

கதை சொல்வதன் நிறைவு நாளன்று பட்டாபிஷேகம்! பெரியநாயகி அம்மாளுக்கு ஊரில் உள்ளோர் மாலையும், பரிசும், பாராட்டும் கொடுத்தனர். புடவை, ரவிக்கைத் துண்டு, மலர்மாலை என்று வந்து குவிந்தது. அதற்கு இடையில் பெரியநாயகி அம்மாளின் கழுத்தில் சுருட்டு வெற்றிலை, பாக்கு, கருப்பட்டி, முறுக்கு, மஞ்சள் கிழங்கு வைத்து கட்டிய மாலையை சிறுவன் காமராசர் போட்டார்.

எல்லோரும் திட்டினர். ஆனால் அவங்க என்னென்ன விரும்பி பிரியமா சாப்பிடுவாங்களோ அதையே மாலையாப் போட்டேன் என்றார் காமராசர். என்னைப்போல கருப்பு, நெற்றியிலே சந்தனக் காப்பு, எங்கக் காமராசா, நாட்டை ஆள்வான் ராசா என்ற பெரியநாயகி அம்மாள் உடுக்கை அடித்து கயம்பாடி காமராசரை வாழ்த்தினார். அந்த வாழ்த்து பின்னாளில் உண்மையாகிவிட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.