"

23

ஒரு பெரியவர் மிகவும் கஞ்சர். அவருக்கு உடல் நலமில்லை என்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்க்க வந்த ஒருவர் இரண்டு ஆப்பிள் பழங்களுடன் வந்தார்.

அந்தப் பெரியவர் ஆப்பிளின் விலை, யாரிடம் வாங்கினீர்கள்? என்பது போன்ற விபரங்களைக்கேட்டு அறிந்தார்.

வந்தவர் இந்த விபரங்களை ஏன் இவ்வளவு விரிவாகக் கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் எனக்கு பழங்களை விட பணம்தான் தேவை; எனவே என்னைப் பார்க்க வருபவர்கள் வாங்கி வரும் பழங்களை விற்று காசாக்க மருத்துவமனை வாசலிலேயே ஆள் வைத்திருக்கிறேன். அவன் நாணயமானவனாக நடந்து கொள்கிறானா? என்பதற்காகத்தான் உங்களிடம் விசாரித்தேன் என்றார்.

உடல் நலமில்லாத நிலையில் வாங்கி வரக்கூடிய பழங்களைக் கூட பணமாக்கும் சமுதாயத்தில் தன்னோடு வரும் உதவியாளர்களும் உரிய நேரத்தில் பசியாற வேண்டும் என்று நினைப்பவர் பெருந்தலைவர்.

1960-இல் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு பெருந்தலைவர் வந்தார். அங்கு நடந்த வேறு சில விழாக்களிலும் கலந்து கொண்டு இரவு உணவுக்காய் யாதவாள் சத்திரத்தை அடைந்தார். காஞ்சிபுரம் இட்லி தலைவருக்கு விருப்பம் என்பதால் அதனைக்கொடுத்தனர்.

சாப்பிட்ட பிறகு இரவே காரில் சென்னை திரும்புவதாக ஏற்பாடு. எனவே உடன் வந்தவர்களை விரைவு படுத்தினார்கள். அதனைக் கண்ட பெருந்தலைவர் தடுத்தார்.

வேண்டாம், அவர்களை அவசரப் படுத்தினால், அரைகுறையாகச் சாப்பிட்டு விட்டு எழுந்து விடுவார்கள். டிரைவர் விழித்துக்கொண்டு கார் ஓட்ட வேண்டாமா? அவர்களெல்லாம் மெதுவாகச் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வெடுத்த பிறகே கிளம்பலாம். ஒன்றும் அவசரமில்லை என்றார்.

மற்றவர்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற இந்த மனித நேயம் எல்லாருக்கும் இருந்தால் நல்லது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.