26
ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ஒருவர் நிருபர்வேலை கேட்டு வந்தார். ஆசிரியர் அவரிடம் முதன் முதலாக ஒரு பணி கொடுத்தார்.
“ஒரு பிரமுகரின் வீட்டில் திருமணம் நடக்க இருக்கிறது. அங்கு போய் செய்தி சேகரித்து வாருங்கள். அதில் உங்களது திறமையைப் பார்த்துப் பணி தருகிறேன்” என்றார் ஆசிரியர்.
புதிய நிருபரும் திருமணத்துக்குச் சென்றார். ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக ஒருபெரிய கலாட்டா நடந்து விடவே திருமணம் நின்று விட்டது. நிருபர் வெறும் கையோடு ஆசிரியரிடம் வந்தார்.
“திருமணம் கலாட்டாவால் நின்று விட்டதால் செய்தி சேகரிக்க இயலவில்லை” என்றார். உடனே ஆசிரியர், “அடப்பாவி கலாட்டாவை கோட்டை விட்டு விட்டாயே. அதுதானே இன்று பெரிய செய்தியாக வரும். எதற்கு முக்கயத்துவம் கொடுப்பது என்று தெரியாமல் நீ எப்படி நிருபர் பணிக்கு வந்தாய்” என்று திட்டி அவரை அனுப்பினார்.
பொதுவாக பத்திரிக்கை நிருபர் பணி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததும், சிக்கல் நிறைந்ததும் ஆகும்.
பெருந்தலைவரிடம் பத்திரிகை நிருபர்கள் படும்பாடு சொல்லி மாளாது. சரளமாகப்பேசிக் கொண்டிருப்பார். பேச்சில் நகைச்சுவை இழையோடும். ஆனால் முக்கியமான விஷயம் பற்றி வாய் திறந்து எதுவும் சொல்ல மாட்டார். ஏதாவது தகவல் பெற முயற்சித்து கேள்வி கேட்டால் பெருந்தலைவரிடமிருந்து ஒரு வார்த்தை கூட வராது.
1962ல் தேர்தல்கள் முடிந்து அமைச்சரவை அமைக்க இருந்த நேரத்தில் நிருபர்கள் காமராசரைச் சந்தித்தனர்.
“என்ன! யார் யாரெல்லாம் மந்திரி ஆகப் போகிறார்கள் என்று கேட்கப் போகிறீர்கள் என்றவர் கேலியாக இப்போது நாங்கள் முடிவு செய்யுமுன் நீங்களே யோசித்து ஒரு அமைச்சரவை அமைத்து விடுகிறீர்களே. இந்திந்த மாவட்டத்தில் இன்னார் அமைச்சராக வருவார். இந்த இலாகா இவருக்கு உரியது என்று எட்டு பத்து பேரை போட்டு விடுவீர்கள். இன்னம் நாலு பேரைப்போட்டு இவர்களுக்கும் பதவி கிடைக்கலாம் என்று எழுதி விடுவீர்கள். உடனே மக்கள் அதனை நம்பி அந்த ஆட்களுக்கு மாலை மரியாதை செய்து பாராட்டுவார்கள். மறுநாள் அந்த மந்திரி சபையை நீங்களே கலைத்து விட்டு வேறு அமைச்சரவை அமைப்பீர்கள்” என்று கூறி சிரித்தார்.
சிறிது நேரம்பேசிப்பார்த்தாலும் அவரிடமிருந்து சில எண்ணங்களை வெளியிட வைக்க முடியாது. அதுதான் அவரது தனி சாமர்த்தியம்.
அதே நேரம் சில சமயங்களில் இயல்பாக அவரது பேச்சில் எதிர்காலத் திட்டம் பற்றிய அறிகுறி வரும். ஆனால் அவை பத்திரிகையில் வருவதை விரும்ப மாட்டார். ஏன் போட வேண்டாம் என்று நிருபர்கள்கேட்டபோது பெருந்தலைவர் அருமையான காரணம் சொன்னார்.
“அரைகுறையாகப் போட வேண்டாம். நம் அரசாங்க எந்திரம் பற்றி மக்களுக்கு ஒன்றும் தெரியாது. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டால் உடனே திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. அதிகாரிகள் அதுபற்றி ஆலோசித்து, பண ஒதுக்கீடு செய்து அப்படி இப்படி என்று 6 மாதம், ஒரு வருடம் கூட ஆகிவிடும். எனவே திட்டம நடந்த பிறகு சொல்வதே சரியாக இருக்கும்” என்று பெருந்தலைவர் கூறியது எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய கருத்து ஆகும்.
பத்திரிகையாளர்களிடம் அன்பாகவும், அதே சமயம் செய்தி போடும் முறை பற்றியும் பொது நன்மை கருதி செயல்படுவது பற்றியும் தெளிவான எண்ணம் கொண்டிருந்தார் தலைவர்.