30
ஓர் ஊரில் சாப்பாட்டுப் போட்டி நடந்தது. அதிகம் உண்பவர்களுக்கு முதல் பரிசு. மற்றவர்களைவிட மிக அதிகமாக சாப்பிட்டு ஒருவன் முதல் பரிசு பெற்றான். பரிசைப் பெற்றுக் கொண்டதும் அவையோரிடம் அவன்செய்து கொண்ட விண்ணப்பம்; “இங்கு நான் அதிகமாக சாப்பிட்டதை என் மனைவியிடம் சென்று யாரும் சொல்லிவிடாதீர்கள். வீட்டுக்குப் போனதும் சோறு போட மாட்டாள்.” இப்படிப்பட்ட சாப்பாட்டு ராமர்கள் நாட்டில் உண்டு. பசியால் வாடுவோர் பலருண்டு. அவர்களின் துன்பம் தீர்க்கப்பாடுபடுபவர்களே உண்மையான மனிதர்கள்.
சங்க கால அரசியலில் கூட மிகவும் அச்சப்பட வைத்த ஒரு பிரச்சினை பசி. பசியைப் பிணிக்கு ஒப்பவைத்துப் பேசினர். பசிக்கு உணவளித்த அரசரை மருத்துவர் என்றும் அரண்மனையை மருந்தகம் என்றும் இலக்கியங்கள் புகழும் பசி என்னும் நெருப்பு ஒருவன் வயிற்றில் பற்றி எரியும்போது அதை அணைக்க முயல்வதற்கு பெயர்தான் ஜீவகாருண்யம் என்று புது விளக்கம் தந்தார் காந்தியடிகள். அவரின் சொல்லையெல்லாம் செயல் வடிவமாக மாற்றும் சபதத்தை மேற்கொண்டவர் கர்ம வீரர் காமராசர். அந்த வகையில் அவர் கொண்டு வந்ததே மதிய உணவுத் திட்டம். இதனால் 30,000 பள்ளிகளைச் சார்ந்த 15 லட்சம் குழந்தைகள் உணவும், கல்வியும் ஒருங்கே பெற்றனர். அதுபோலவே அதிகமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து மக்களின் பசிப்பிணியைப் போக்குவதில் ஆர்வமாயிருந்தார். எல்லோருக்கும் இதயம் “லப்டப் – லப்டப்” என்று அடித்துக்கொள்ளும்போது பெருந்தலைவர் காமராசரின் இதயமோ “உற்பத்தி தன்னிறைவு” என்றே அடித்துக் கொள்ளுமாம். காமராசர் பேசும்போது அவர் கூறும் உவமைகளில் வயலும் வரப்பும், மழையும் ஆறும், குளமும் ஊருணியுமே அதிகம் வரும் என்று கூறுகிறார் அவரோடு நெருங்கிப் பழகிய மு.நமச்சிவாயம் அவர்கள். ஐந்தாண்டு திட்ட பிரசாரத்துக்கு அவர் நெல்லையே உதாரணமாக கூறும் அழகைப் பாருங்கள்.
நெல் வயலைப் பார்க்காத ஒருவன் வயல் பக்கம் போகிறான். உழவர்கள் நிலத்தை உழுது சகதியாக மாற்றி நாற்றங்காலில் நெல் விதைக்கிறார்கள். விவரம் தெரியாத அந்த மனிதன், “இவ்வளவு நெல்லை சேற்றில் போடுகிறீர்களே; வீணாகப் போயிவிடுமே என்கிறான். ஐந்தாண்டு திட்டங்களுக்கு செய்யப்படும்செலவுகளை வீண் செலவு என்று சொல்பவர்களும் இந்த மனிதனைப் போன்றவர்கள்தான்.”
பல இடங்களில் இருந்து பெருந்தலைவரைப் பார்க்க வருபவர்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி இரண்டேதானாம். ஒன்று, சாப்பிட்டீர்களா? மற்றொன்று உங்கள் பக்கம் மழை உண்டா? இப்படிப்பட்ட மகத்தான மக்கள் தலைவரைப் பார்ப்பது அரிது.
‘உண்டாலம்ம இவ்வுலகம்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’
என்கிறது புறநானூறு
அதற்கு இலக்கணமாய்த்திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராசர்.