101
“திருவிதாங்கூர் தமிழ்நாடு எல்லைப் பகுதி, கர்நாடகத் தமிழக எல்லைப் பகுதி, ஆந்திர தமிழக எல்லைப் பகுதி ஆகிய இடங்களில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற கருத்து காமராசருக்கு ஏற்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அவர் சி.என்.முத்துரங்க முதலியாரைத் தலைவராக நியமித்து, “தமிழ்நாடு எல்லைக் குழு” ஒன்றை அமைத்தார்.”
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆந்திரர்கள் சென்னை நகரத்தின் மீது உரிமை கொண்டாடும் வகையில் மதராஸ்மனதே என்ற முழக்கத்தை எழுப்பினர். ஐக்கிய கேரளம் வேண்டுமென்போர் கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், குமரி மாவட்டம் ஆகியவற்றுடன் அமைய வேண்டுமென்று விரும்பினர். ம.பொ.சி. முதன்முதலாக வடவேங்கடம் முதல் குமரி வரை உள்ள தமிழகம் அமைக்கப்பட வேண்டுமென்பதை வற்புறுத்தினார்.
இதற்காக ம.பொ.சி. ஒரு அறிக்கையை 1946ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட்டார். அதில் காமராசர் கையெழுத்துப் போட்டிருந்தார். சென்னை நகரை ஆந்திரருக்கே உரியது என நீதிபதி வாஞ்சு தனது பரிந்துரையில் கூறினார். உடனே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர், “சென்னை நகரில் ஆந்திரருக்கு எந்தவிதமான பங்கு தந்தாலும் சரி, இதுவரை கண்டிராத அளவிற்குப் பெரும் கிளர்ச்சி எழும்” என்று எச்சரித்துள்ளார். ஆனாலும் சென்னை நகரம் தமிழகத்தை விட்டு வழுகிப் போக இருந்தது. இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி காமராசர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது காமராசர் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான தந்திகள் பற்றி அவரிடம் குறிப்பிட்டார். காமராசரின் கூற்றைக் கேட்ட சாஸ்திரி சென்னை நகரம் பற்றிய மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் உறுதி கூறினார். (தமிழன் இழந்த மண் –பழ.நெடுமாறன்) காமராசர் சாஸ்திரி சந்திப்பு நடைபெறவில்லையென்றால் சென்னை நகரம் ஆந்திரர் கைக்கு மாறியிருக்கும்.
நீலகிரி மாவட்டத்தைத் தமிழகத்திலிருந்து பிரித்து எடுக்க கன்னடியரும், தெலுங்கரும், மலையாளிகளும்சேர்ந்து போராடினர். “நீலகிரி தமிழகத்தில் ஒரு பகுதி. அதைப்பற்றி பேசுவதற்கே இடமில்லையென்று” காமராசர் மறுத்தார். பின்னர் ஊட்டியைக் கேட்டனர். “ஊட்டி தமிழகத்தின் காஷ்மீர். அதை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று நெஞ்சுரத்தோடு கூறினார். காமராசரின் நெஞ்சரத்தால் ஊட்டி இன்று தமிழகத்தோடு இருக்கின்றது.
திரு–தமிழகப் போராட்டத்தில் தென் எல்லைக் காவலன் மார்ஷல் நேசமணியை அடிக்கடி சந்தித்து ஆலோசனை வழங்கினார். நதானியேல் கட்சி தாவிய போதும் தாணுலிங்க நாடார் புதிய கட்சியை உருவாக்கிய போதும் நேசமணியோடு இணைந்து செயல்படுங்கள் என்று ஆலோசனை கூறினார். எல்லைப்போராட்டத்தில் அவருடைய பங்கு மகத்தானது. மறக்க முடியாதது.