102
சாத்தூர் ஜெயராம ரெட்டியார் காமராசர் வீட்டிற்கு வந்தார். அப்பழுக்கில்லா அரசியல்வாதி. காமராசரை இதயத்தில் குடிவைத்திருக்கும் இனிய நண்பர்.
இருவரும் அமர்ந்து இரண்டு மணி நேரம் தமிழ்நாட்டு அரசியல் போக்கு, மத்திய அரசின் நிர்வாகம், காங்கிரஸ் கட்சியின் நிலவரம், மக்களின் மனநிலை இவைபற்றி அலசி ஆராய்ந்தனர். இரவு மணி பத்தரை.
பெருந்தலைவரிடம் விடை பெற்றுக்கொண்டு ரெட்டியார் வெளியேறப் போனார். “இனிமேல் எங்கே போய் என்னத்தைச் சாப்பிடப்போகிறீர்? இங்கு சாப்பிட்டு விட்டுப் பிறகு புறப்படும்.” என்றார் தலைவர்.
“வைரவா, ஐயாவிற்கு இருக்கை எடுத்துப்போடு.” என குரல் கொடுத்தார்.
ரெட்டியார் உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு காத்திருந்த காரில் கிளம்பிப்போனார்.
ஏற்கனவே சாப்பிட்டிருந்த தலைவர் தூங்குவதற்கு அறைக்குள் நுழைந்தார். கடகடவென்று சப்தம். வைரவன் இருக்கும்இடத்திற்குப்போனார். அவன் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்தான்.
சாப்பிட்டு விட்டாயா?
பதில் இல்லை.
தனக்கிருந்த சாப்பாட்டை ஜெயராம ரெட்டியாருக்குக் கொடுத்துவிட்டு பட்டினியோடு படுக்கப்போயிருக்கும் வைரவனை உற்றுப் பார்த்தார். வேதனையாக இருந்தது. கையில் பத்து ரூபாயைக்கொடுத்து எங்காவது போய் எதையாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டு முதலில் வா என்றார் அவன் தயங்கினான். கட்டாயப்படுத்திப் போகச் சென்னார். கடைகள் அடைக்கபட்டிருந்ததால் இரண்டு வாழைப் பழங்கள் வாங்கிச் சாப்பிட்டு விட்டு மீதியைத்தலைவரிடம் கொடுத்தான்.
தலைவர் இதையறிந்து வருந்தினார். “வைரவா, நீ எத்தனை நாள் இதைப் போல் வந்தவருக்குச் சாப்பாடு போட்டுவிட்டுப் பட்டினாயகப் படுத்தாயோ? உன்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன், இனிமேல் என்னைப் பார்க்க வருகின்ற எவரையும் இரவு இங்கே சாப்பிடும்படி சொல்ல மாட்டேன். இனி இப்படிப்பட்ட பட்டினி உனக்கு வரக்கூடாது.” என்று உருக்கமாகக் கூறினார் பெருந்தலைவர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முன்னறிவிப்பின்றி வருகின்ற எவருக்கும் காமராசர் இல்லத்தில் இரவு உணவு தரப்பட்டதில்லை.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம்செய்த தலைவர் இரவு வந்தார். இரவு பதினொரு மணி. நல்ல களைப்பு, சுற்றுலா மாளிகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று படுக்கத் தயாரானார்.
திடீரென்று மின்தடை ஏற்பட்டு விட்டது. ஒரே இருட்டு, புழுக்கம், ஜெனரேட்டர் கொண்டுவர தாசில்தார் ஏற்பாடு செய்வது கண்டு அவரைத் தடுத்து நிறுத்தினார்.
சுற்றுலா மாளிகைக்கு எதிரிலுள்ள இரு வேப்ப மரங்களுக்கிடையில் அங்கு கிடந்த ஒரு நார்க் கட்டிலைததூக்கிவந்து போடச்சொன்னார். ஜிலு ஜிலு காற்று. ஒரு தலையணை மட்டும் வைத்துக் கொண்டு தூங்கத் தொடங்கினார். திடீரென்று எழுந்து உட்கார்ந்தார். பக்கத்து அறையில் தங்கியுள்ள டி.எஸ்.பி–யை அழைத்து வரச்சொன்னார். கூப்பிடப்போன ஆளை நிறுத்தி, “டி.எஸ்.பி. உடை மாற்றியிருப்பார். உத்தியோகத்திற்குரிய உடை அணிய வேண்டாம். இப்போது அணிந்திருக்கும் இரவு உடையில் வந்தால்போதும், வீண் சிரமம் எதற்கு? உடனே அழைத்து வா.” என்றார்.
டி.எஸ்.பி. கூச்சத்துடன் வந்தார். இரண்டு நிமிடங்களில் சொல்ல வேண்டியதைச்சொல்லி விட்டு அவரை அனுப்பி வைத்தார். முதலமைச்சராக இருந்த நம் தலைவர்.
கட்டிலில் படுத்தார். கண்ணை மூடினார். டக், டக், என்று சத்தம், தலையைத் தூக்கிப் பார்த்தார். இரண்டு போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் இங்குமங்குமாக காவலுக்கு நடந்து கொண்டிருந்தனர். தலைவர் அவர்களை அழைத்து, எனக்குக் காவல் இருந்தது போதும் உங்களுக்குக் களைப்பு இருக்குமல்லவா போய் இந்த உடுப்புக்களை மாற்றிவிட்டு ஓர் இடத்தில் நிம்மதியாகப் படுத்துத் தூங்குங்கள் என்றார். போலீஸ்காரர்கள்இருவரும் போன பிறகு தூங்கப்போனார்.
தேர்தல் நேரம் கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி வந்து கொண்டிருந்த பெருந்தலைவர் காமராசரின் கார் தாழையூத்துப்பக்கம் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
காமராசரையும் டிரைவர் நாயரையும் செல்லப் பாண்டியன் அவர்கள் விரைந்து எடுத்துக் கொண்டுபோய் மருத்துவனையில் சேர்த்தார்.
கட்டுக்களோடு படுக்கையில் கிடந்த தலைவர் டிரைவர் நாயரை எங்கே என்று கேட்டார். அடுத்துள்ள ஓர் அறையில் வைத்திருப்பதாகச் செல்லப் பாண்டியன் சொன்னார்.
காமராசர், “டிரைவரை அழைத்துவந்து என் பக்கத்துக் கட்டிலில் படுக்கவையுங்கள், எல்லா டாக்டர்களும் என்னைக் கவனித்துக் கொண்டு அவனைச் சரியாகக் கவனிக்காமல் விட்டாலும் விடலாம். என்மீது பற்றுகொண்ட சிலர் என்னை இப்படிக் கவிழ்த்து விட்டானே என்ற கோபத்தில் அவனைத் தாக்கினாலும் தாக்கலாம். நாயர் நல்லவன். இவ்வளவு நாளும் என்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டான். எதிரே வருகின்ற வண்டிக்காரன் தவறாலதான் இந்த விபத்து நேர்ந்தது. அவனை ஒன்றும் சொல்லாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
டிரைவர் நாயரைப் பக்கத்துக் கட்டிலில் படுக்க வைத்த பிறகுதான் அவர் முகத்தில் அமைதி ஏற்பட்டது.