108
சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் ஒரு வாதம் நடந்தது. ஆனால் மார்க் ட்வைன் மட்டும் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவரிடம் காரணம் கேட்டனர்.
அதற்கு மார்க் ட்வைன் எந்த இடம் என்றாலும் பரவாயில்லை. ஏனென்றால் சொர்க்கத்திலும் நரகத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார்.
இப்படிப்பட்ட சொர்க்கம், நரகம் பற்றிய சிந்தனை ஏதுமில்லாமல் நாட்டு மக்களின் நலன் பற்றியே சிந்தித்தவர் பெருந்தலைவர். நம் நாட்டு முன்னேற்றத்திற்காக உலகச் சுற்றுப் பயணம் செய்யப் புறப்பட்டார்.
1966 ஜூலை மாதம் 22ஆம் தேதி பகல் 1-45 மணியளவில் பெருந்தலைவர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கினார். சுப்ரீம்சோவியத் சபையின் தலைவர் ஸ்பிரிதினோவ், உதவித் தலைவர் ஜான்தீவ் வெளிவிவகார அமைச்சர் பிருபின் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் காமராசரை வரவேற்றனர்.
சுமார் 65 லட்சம் பேர் உள்ள மாஸ்கோ நகர மேயருடன்அந்த நகரத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
பிறகு ஜூலை 23ஆம்தேதி கிரெம்ளின் மாளிகையைப் பார்வையிட்டார். பிறகு லெனின் உடல் தைலமிடடு கெடாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும சமாதியைப் பார்வையிட்டு மலர் வளையம் வைத்தார். பிறகு அருகில் இருந்த ஆர்.வெங்கட்ராமனிடம் “காந்திஜியின் உடலையும் இப்படிப் பாதுகாக்காமல் போய் விட்டோமே“என்றார்.
பெருந்தலைவர் ரஷ்யப் பிரதமர் கோஸிஜினைச் சந்தித்தார். தவைர்கள்இருவரும் உலகப் பிரச்சினைகள் பற்றிச் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் பேசினார்கள்.
பின்னர் இன்டான் துஷான்பே நகரப்பொழுது போக்குப் பூங்காவைச் சுற்றிப் பார்த்தார்.
ஜூலை 15ல் தாஜிக் கம்யூனிஸ்ட் கட்சிக் காரியதரிசியான திரு.ரசலோவைச் சந்தித்தார். அந்தக் கட்சி அலுவலகத்தில் பணியாற்றும ஊழியர்களையும சந்தித்துப்பேசினார்.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்து விடுவதைக்கேட்டு வியப்புற்றார். ஜூலை 26ஆம்தேதி ஹிட்லரை எதிர்த்துப் போரிட்ட வால்காகிராட் நகரில் காலடி வைத்தார். பூங்கா யுத்த கால நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டார்.
அதன் பிறகு வரலாற்றுப் புகழ் பெற்ற லெனின் கிராட் நகரத்துக்குச் சென்றார். அங்கு பெருந்தலைவருக்கு அந்த நகர மேயர் விருந்தளித்தார். விருந்தில் பேசிய காமராசர் ருஷ்யப் புரட்சியையும், ருஷ்யத்தலைவர் லெனினையும் வெகுவாகப் புகழ்ந்து பேசினார். அப்போது பாரதியார் பாடிய,
“ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி
கொடுங்கோலன் ஜார் மன்னன் அலறி வீழ்ந்தான்“
என்ற பாடலையும் பாடி போரின் கொடுமையில் இருந்து உலகத்தை விடுவிப்பதற்காகப் பாடுபடும் சமாதானக் காவலனாம் ரஷ்யாவோடு இந்தியா தோளோடு தோள் நின்று ஒத்துழைக்கும் என்றும் கூறினார்.