11
ஒரு வீட்டில், நவராத்திரி கொலு சமயத்தில், சாமிக்கு அவல், பொரி, சுண்டல், பொங்கல், லட்டு, பலகாரம் எல்லாம் படைக்கப்பட்டிருந்தது. பூஜை செய்து முடித்த பிறகு, குழந்தைகளுக்கு பலகாரங்களை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தாய் திட்டமிட்டிருந்தாள்.
ஒரு பையன் பலகாரத்தைப் பார்த்து ஆசையோடு “அம்மா நான் ஒரு லட்டு எடுத்துக்கிடவா” என்று கேட்டான் அதற்கு அம்மா,
“இப்போ லட்டு சாப்பிட்டா சாமி கண்ணைக் குத்திடும், பூஜை முடியட்டும் அப்புறம் சாப்பிடலாம்” அப்படின்னாங்க. உடனே அந்தப் பையன் சாமி கண்ணைக் குத்தாதும்மா. நான் தான் ஏற்கனவே இரண்டு லட்டு சாப்பிட்டுட்டேனே என்றான்.
இதுதான் குழந்தைகள் இயல்பு. ஆனால் பிரசாதம், பலகாரம் வழங்கப்படுவது கூட நியாயமாக இருக்க வேண்டும் என்று குழந்தைப்பருவத்திலேயே நினைத்தவர் பெருந்தலைவர்.
பெருந்தலைவர் காமராசர் தனது சிறு வயது பருவத்தில், ஷத்திரிய வித்தியாசாலாவில் படித்து வந்தார். அன்று விநாயகர் சதுர்த்தி. மாணவர்களிடம் தலா ஒன்றே காலணா வசூலிக்கப்படும். பிறகு பூஜை முடிந்த பிறகு அவல், பொரி, தேங்காய்ச்சில், வெல்லக்கட்டி, வாழைப்பழம், விளாம்பழம், பேரிக்காய் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.
அன்றும் பூஜை முடிந்த பிறகு மாணவர்கள் கூட்டம் பிரசாதம் பெற முண்டியடித்தது. ஒரே போட்டி, மோதி தள்ளி குதித்துக் கொண்டனர். இதனால் தலையில் குட்டும் பட்டுக் கொண்டனர். இதனைப் பார்த்த சிறுவன் காமராசர், ஒதுங்கி ஒரு மூலையில் ஆடாமல், அசையாமல், உட்கார்ந்து விட்டான். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் மூலைப் பிள்ளையார் என்று கேலி செய்தனர்.
மாணவர் கூட்டம் குறைந்தது. கடைசியாக பிரசாதம் பெற்றார் காமராசர். வீட்டில் அவரது தாய் “என்ன ராஜா, வெல்லம் தேங்காய் இல்லை. உனக்குப்போடலியா என்றார்.” எனக்கு இவ்வளவு தான் போட்டாங்கம்மா என்றார் தலைவர். ராஜாவும் முண்டியடிச்சு முதல்லேயே பிரசாதம் வாங்கியிருக்கனும் என்று தாய் கூறியதற்கு முண்டியடிச்சு சண்டை போட்டாதான் பிரசாதம் சரியா கிடைக்குமா? நானும் எல்லாரையும் போல காசு சரியாத்தானே கொடுத்தேன். பொரி குறைவா போட்டது அவங்க தப்புதானே என்று தெளிவோடும், திடமோடும் பதிலளித்தார் காமராசர்.
பள்ளிப் பருவத்தில் காமராசருக்கு இரண்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டது. அதில் ஒன்று அரசியல் பொதுக்கூட்டப்பேச்சுகள், மற்றொன்று பத்திரிக்கை செய்திகள்.
பள்ளியில் பிற சாதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பழக்கமும் உண்டு. விஸ்வகர்மா சமூகத்தைச்சேர்ந்த முத்துசாமிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பிற்காலத்தில் அரசியல் வாழ்க்கையிலும் இருவர் நட்பும் வளர்ந்தது.
‘எம்டன்’ என்ற ஜெர்மானியக் கப்பல் சென்னையில் குண்டு போட்ட உலக யுத்தச் செய்தியைப் பத்திரிக்கை படித்துத் தெரிந்து கொள்வார். அந்த நேரத்தில் வந்து கொண்டிருந்த ஒரேதமிழ்ப் பத்திரிக்கையான சுதேசமித்திரனைத் தவறாது படிப்பதில் ஆர்வம் காட்டினார்.
பொது விஷயங்களில் வயதுக்கு மீறிய ஆர்வம் இருந்தாலும், அந்த நேரத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சரித்திரம், பூகோளம், ஆங்கிலம் போன்றவற்றில் நல்ல மதிப்பெண்கள்பெற்று நல்ல மாணவராகவும் திகழ்ந்தார்.