12
ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு முதலுதவி பற்றிப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். தண்ணீரில் மூழ்குபவர்களைக் காப்பாற்றும் முறை பற்றி எடுத்துக் கூறத் தொடங்கினார்.
“யாராவது நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் விழுந்து விட்டால் அவர்களது கையையோ, காலையோ பிடித்துத் தூக்கக் கூடாது. விழுந்தவரின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்க வேண்டும்” என்றார். உடனே ஒரு பையன் எழுந்து, “சார் ஒருவேளை தண்ணீரிலே விழுந்தவர் தலை உங்களை மாதிரி வழுக்கையா இருந்தா எதைப் பிடிச்சு தூக்கறது?” என்று குறும்பாகக் கேட்டான். இப்படி விளையாட்டு மட்டுமே உலகம் என்றிருக்கும் மாணவப் பருவத்தில் விவேகத்துடன் செயல்பட்டவர் பெருந்தலைவர் காமராசர்.
பள்ளி நாட்களில் பெருந்தலைவரின் அலங்காரம் விசேஷமானது. தொங்கு சடை பின்னி பூச்சூட்டி அழகு பார்ப்பார் பாட்டி. இது ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை. பிறகு நாகரிகம் மாறியது. கோணல் வகிடு எடுத்து சீவிய தலை, நெற்றியில் சந்தனப்பொட்டு, வெள்ளை வேட்டி, சட்டை அணிவார். வீட்டில் மிகவும் பிரியமான சாப்பாடு பழைய சோறும் ஆடைத் தயிரும்தான்.
விடுமுறை நாட்களில் காமராசரின் நண்பர்கள் குழு குளிப்பதற்காக புல்லக்கோட்டை ரோட்டில் கைலாச செட்டியார் கிணற்றிற்குச் செல்வார்கள். மூன்று முறை பல்டி அடித்து குதிப்பது சாதனையாக கருதப்பட்டது. காமராசரின் நண்பர்களில் ஒருவன் தனுஷ்கோடி மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினாலும், கிணற்றில் குதிக்க முன்வருவது இல்லை. காரணம் நீச்சல் தெரியாது. ஒரு நாள் காமராசர் தனுஷ்கோடியை கிணற்றில் தூக்கிப் போட்டார். நீரில் விழுந்தால்தான் நீச்சல் வரும் என்றார். ஆனால் தனுஷ்கோடி தண்ணீரில் தத்தளித்து தவித்தபோது காமராசரே அவரைத்தூக்கிக் கரை சேர்த்தார்.
அந்த தனுஷ்கோடிதான் பிற்காலத்தில் எம்.தனுஷ்கோடி என்ற பெயரில் ‘நவசக்தி’ நாளிதழை நடத்துபவர் ஆனார்.
விடுமுறை நேரங்களில் காமராசரின் நண்பர் குழு சப்பாத்திக் கள்ளிகளுக்கு இடையே இருக்கும் கத்தாழம் பழங்களைப் பறித்துச் சாப்பிடச் செல்வார்கள். மிகுந்த சுவையுடைய அந்தப் பழத்தின் உள்ளே ஒரு முட் சக்கரம் இருக்கும். பழத்தைப் பிதுக்கிச் சாப்பிடும் போது அந்த முள் சக்கரம் தொண்டையில் மாட்டிவிடாமல் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
காமராசர் ஒரு சமயம் நண்பர்களோடு கத்தாழம் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சின்னமணி என்ற சிறுவனுக்கு தொண்டையில் சக்கரம் சிக்கிக் கொண்டது. வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. காமராசர் அவனைத் தோளில் தூக்கிக்கொண்டு ஊருக்குள் ஓடினார். வைத்தியர் ஊதுகுழல் மூலம் ஊதி எடுத்து சக்கரத்தை அப்புறப்படுத்தினார். சின்னமணி கண் திறந்து எழுந்தான். மெலிந்த உடல் கொண்ட காமராசர், உருவத்திலும் வயதிலும் பெரியவனான சின்னமணியின் உடலைத் தூக்கி வந்து காப்பாற்றியதை அறிந்த ஊர் மக்கள் அனைவருமே காமராசரைப் பாராட்டினர்.